உத்தரப் பிரதேச போலீஸ் என்கவுன்டரில் தப்பியவர்கள் என்ன சொல்கிறார்கள்? #BBCINVESTIGATION

ராம்ஜி பாஸியின் மனைவி
Image caption ராம்ஜி பாஸியின் மனைவி

(உத்தரப் பிரதேச என்கவுன்டர் கொலைகள் தொடர்பாக பிபிசி நடத்திய கள ஆய்வு தொடர்பாக மூன்று பாகங்களில் வெளியாகும் கட்டுரைத் தொடரின் முதல் பாகம் இது. அடுத்தடுத்த பாகங்கள் இனி வரும் நாட்களில் வெளியாகும்).

உத்தரப் பிரதேசத்தில், கடந்த ஒரு வருடமாக மேற்கொள்ளப்பட்ட போலீஸ் என்கவுன்டர்களில் தப்பிப் பிழைத்த ஒருவர் பங்கஜ். உயிர்பிழைத்த அவரது வாழ்க்கை நிம்மதியாக இருக்கிறதா?

மாநிலத்தில் நடைபெற்ற என்கவுன்டர்களில் குற்றவாளிகள் என கருதப்பட்ட 67 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக எதிர்கட்சிகள் சந்தேகங்களை எழுப்பும் நிலையில், என்கவுன்டர்களின் இலக்கு குற்றவாளிகள் மட்டுமே என்று அரசும், மாநில நிர்வாகமும் கூறுகின்றன.

2018 ஏப்ரல் மாதத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் ஆஸம்கர் வட்டாரத்தில் நடைபெற்ற என்கவுன்டரில் பங்கஜ் யாதவ் என்பவர் உயிர் தப்பித்தார். 20 வயது பங்கஜ் யாதவின் கதையை தெரிந்துக் கொள்வதற்கு முன், வாரணாசி பகுதியில் கடந்த ஓராண்டில் நடைபெற்ற போலீஸ் நடவடிக்கைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். இந்த நடவடிக்கைகளில் ஏழு பேர் உயிரிழந்தனர், 32 பேர் காயமடைந்தனர்.

தொடரின் முதல் பாகம் இது..

அலிகர் பூசாரிகள் கொலையும் முஸ்லிம் என்கவுன்டரும் - உண்மை என்ன? பிபிசி கள ஆய்வு

வாராணசி மாவட்டத்தில்தான் ஆஸம்கர் அமைந்துள்ளது.

ராம்ஜி பாஸி, ராகேஷ் பாஸி, ஜெய்ஹிந்த் யாதவ் போன்ற தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த பலர் 'குற்றவாளிகள் என்று கருதப்பட்டு' இந்த என்கவுன்டர்களில் கொல்லப்பட்டனர். பிபிசி குழுவினர் ராம்ஜி பாஸி மற்றும் ஜெய்ஹிந்த் யாதவ் ஆகியோரின் குடும்பத்தினரை சந்தித்தனர்.

பங்கஜ் யாதவ் என்கவுன்டர் - என்ன நடந்தது?

டெல்லியிலிருந்து சுமார் 830 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஆஸம்கர் மாவட்டத்தில் மேஹ்நகர் தாலூகாவின் ஹட்வா கால்ஸா கிராமத்தை சேர்ந்தவர் பங்கஜ் யாதவ். செல்வாக்கான அரசியல் குடும்பத்தில் பிறந்த 20 வயது பங்கஜ், இன்னமும் அந்த 'என்கவுன்டர்' ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மீண்டு வெளியே வரவில்லை.

2018 ஏப்ரல் 15ஆம் நாளன்று, ரசூல்புரா கிராமத்திற்கு அருகே நடந்த போலிஸ் என்கவுண்டரின்போது பங்கஜின் முழங்காலை இரண்டு தோட்டாக்கள் தாக்கின. கைது செய்யப்பட்ட அவர் ஜூலை மாத கடைசி வாரத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் இன்றும்கூட, அன்று நடைபெற்றதுபோல ஒரு புதிய என்கவுன்டரில் கொல்லப்படுவோமோ என்ற அச்சத்திலேயே தினசரி இரவும் அவரது பெற்றோர் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கின்றனர்.

Image caption ஜய்ஹிந்த் யாதவின் பெற்றோர்

கிராமத்தின் பஞ்சாயத்து உறுப்பினராக நீண்ட காலம் பணியாற்றிய பங்கஜின் தந்தை ராம்விருக்ஷ், தனது மகன் போலி என்கவுன்டரில் தாக்கப்பட்டதாக, தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

கண்ணியமான இளைஞராக அனைவராலும் பார்க்கப்படும் 20 வயது இளைஞர் பங்கஜ் மீது ஒரேயொரு இரவில் ஆறு வழக்குகள் பதியப்பட்டதும், அவரைப் பற்றி தகவல் தெரிவிப்பதற்கு 20 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டது ஏன்?

போலீசார் மற்றும் பங்கஜின் தரப்பினர் இந்த விவகாரம் பற்றி தெரிவிக்கும் தகவல்கள் ஒன்றுக்கொன்று முற்றிலும் முரண்பட்டதாக உள்ளது.

பங்கஜின் குடும்பத்தினரின் கருத்து

பங்கஜின் தந்தை ராம்விருக்ஷ் யாதவ் இவ்வாறு தெரிவிக்கிறார், "நான் மாவட்ட பஞ்சாயத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறேன். அதோடு, டிரக் தொழிலிலும் ஈடுபட்டுள்ளோம். என்னுடைய இளைய மகன் பங்கஜ் இப்போதுதான் படித்து முடித்தான், கடந்த ஆண்டு டிசம்பரில் தான் திருமணம் செய்து வைத்தோம். எங்கள் குடும்பத் தொழிலிலும் அவன் ஈடுபடத் தொடங்கினான். எதிர்வரும் தேர்தலில் எங்கள் தொகுதியில் போட்டியிடும் உத்ததேசத்தில் இருந்தான். எங்களுக்கு சொந்த வீடு, போதுமான சொத்து இருக்கிறது. என்னுடைய பிள்ளைகள் ஒருபோதும் எந்தவிதமான திருட்டிலும் ஈடுபட்டதில்லை."

ஆனால் 2018 ஏப்ரல் 14ஆம் தேதியன்று விசித்திரமான சம்பவங்கள் என் குடுமபத்தில் நிகழ்ந்தது என்று சொல்கிறார் ராம்விருக்ஷ்.

"ஏப்ரல் 12ஆம் தேதி காலை, என் மூத்த மகன் வினோத் பிகாரில் இருந்து டிரக்கில் திரும்பி வந்தார். மாமியாரின் உடல்நிலை சரியில்லை என்றும் எனவே மனைவியுடன் சென்று மாமியாரை பார்க்க ஹாஜிபூருக்கு செல்வதாக சொன்னார். அதற்கு அடுத்த நாள் பனாரஸில் உள்ள பார்லேஜி தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்க வேண்டியிருந்தது. பனாரஸுக்கு டிரக்கை அனுப்பச் சொன்ன அவர், திரும்பி வரும்போது அங்கிருந்து டிரக்கை எடுத்து வருவதாகவும் சொன்னார் "

"எங்களிடம் வேலை பார்த்த கமலேஷ் யாதவ் நன்றாக வண்டி ஓட்டுவார். அவர்தான் டிரக்கை பனாரஸுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் அன்று அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, பங்கஜையும் வா என்று வற்புறுத்தி அழைத்துக் கொண்டு சென்றார்" என்று அவர் மேலும் கூறினார்.

இரண்டு இளைஞர்களும் குறித்த நேரத்திற்குள் பனாரஸ்க்கு சென்றுவிட்டாலும், பார்லேஜி நிறுவனத்தில் பிஸ்கட்டுகள் தயாராகவில்லை. கமலேஷும், பங்கஜும் அங்கேயே ஒரு நாள் காத்திருக்க வேண்டியிருந்தது. "ஏப்ரல் 14ஆம் தேதியன்று என் மனைவியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுக் கொண்டிருந்த வழியில் என் மூத்த மகன் வினோத், காஜிபுரில் இருந்து வந்து கொண்டிருந்ததை பார்த்தேன். மருமகளுக்கும் உடல்நிலை சரியில்லாததால், அவரை எங்களுடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக முடிவு செய்தோம். அவர் என் மனைவியின் அருகில் காரில் ஏறி அமர்ந்தார். என் மகன் வினோத் இருசக்கர வாகனத்தில் எங்களை தொடர்ந்து வருவதாக சொன்னான். நாங்கள் அனைவரும் சக்ரபான்பரின் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்ற பிறகும் வினோத் வந்து சேரவில்லை. வினோதின் போனில் தொடர்பு கொண்டாலும் தொடர்பு கிடைக்கவில்லை"

படத்தின் காப்புரிமை PRIYANKA DUBEY/BBC
Image caption பங்கஜ் யாதவின் பெற்றோர்

இதற்கிடையில், மதியம் இரண்டு மணிவாக்கில் பனாரஸிலிருந்து ராம்விருக்ஷ்க்கு போன் செய்தார் அவரது மருமகன் தீபக் யாதவ். அதை பற்றி ராம்விருக்ஷ் கூறுகிறார். "எஸ்.ஓ.ஜி (சிறப்பு நடவடிக்கைக் குழு) குழுவினர் வந்து பங்கஜை அழைத்துச் சென்றதாக என் மருமகன் தீபக் யாதவ் தகவல் தெரிவித்தான். எனக்கு எந்தவித தகவலையும் தெரிவிக்கக்கூடாது என்று அந்த குழுவினர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். மீறி என்னிடம் தகவல் சொன்னால், வண்டியை தூக்கிவிடுவதாக மிரட்டியிருந்தாலும், அவன் எனக்கு போன் செய்து விஷயத்தை சொல்லிவிட்டான்."

அந்த கொடுமையான நாளை நினைவுகூரும் ராம்விருக்ஷ், "விஷயம் தெரிந்தவுடன் என்ன செய்வது என்றே தெரியவில்லை, மூளையே வேலை செய்யவில்லை. இருந்தாலும், சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, நான் உடனே அவசர தொலைபேசி உதவி எண் 100ஐ தொடர்பு கொண்டு, நடந்த விசயத்தைச் சொல்லி என் மகனை போலீஸ் அழைத்துச் சென்றிப்பதை தெரிவித்தேன். இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் நான் அவர்களை தொடர்பு கொண்டபோது, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டதாக கூறினார்கள். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. பெரிய மகன் வினோத் எங்கே என்று தெரியாத நிலையில், பங்கஜை பற்றியும் எந்த தகவலும் தெரியாமல் திகைத்து போய் நின்றோம். பங்கஜை போலீஸ் என்கவுன்டரில் சுடப்பட்டான் என்ற செய்தி அடுத்த நாள் காலையில்தான் தெரிந்தது'' என்று தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை PRIYANKA DUBEY/BBC
Image caption ஆஜம்கரில் இருக்கும் ராம்ஜி பாஸியின் வீடு

மகன் பங்கஜின் மீது, திருட்டு வழிப்பறி, கொலை என நான்கு வழக்குகள் இருப்பதாக ஏப்ரல் 15ஆம் தேதி காலை, ராம்விருக்ஷ்க்கு தெரிந்தது. அதுமட்டுமா? அவர் இருக்குமிடம் குறித்த தகவல் கொடுப்பவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் பரிசும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒரே நாள் இரவில் இதை போலிசார் செய்ததாக ராம்விருக்ஷ் கூறுகிறார். அந்த ஆறு வழக்கிலும் போலீஸே வாதி தரப்பாக இருந்தது. இந்த என்கவுன்டரில் பங்கஜுடன் சேர்த்து, ராஜ் திலக் என்ற குற்றவாளியும் இலக்கு வைக்கப்பட்டிருந்தார். அவரின் கால்களிலும் இரண்டு தோட்டாக்கள் பாய்ந்தன.

மேஹ்நகர் காவல்நிலையத்தின் வெளியில் இருந்து ஹிந்து விஸ்வவித்யாலய் அரசு மருத்துவமனைக்கு அம்புலன்ஸ் செல்லும்போது அதனை பின் தொடர்ந்து சென்றார் ராம்விருக்ஷ். அங்குதான் பங்கஜை அவரால் பார்க்க முடிந்தது. பங்கஜ் சொன்ன விவரங்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தன.

தனது முழங்கால்களை நனைந்த சாக்குப்பையில் கட்டி வைத்து, பிறகு துப்பாக்கியால் சுட்டதாக பங்கஜ் தந்தையிடம் கூறினார். தொலைவில் இருந்து துப்பாக்கியால் சுட்டதாக கூறுவதற்கு கடைபிடிக்கப்படும் பழைய வழிமுறை இது.

இவ்வாறு செய்வதால், துப்பாக்கியில் இருந்து தோட்டாவுடன் வெளியேறும் நுண்ணிய துகள்கள் காயம்பட்ட இடத்தின் அருகில் இருக்காது. ஏனெனில் நனைந்த சாக்குப்பையை துளைத்துக்கொண்டு குண்டு உடலுக்குள் பாயும்போது, நுண் துகள்கள் ஈர சாக்குப்பையிலேயே தங்கிவிடும். தோட்டா பட்ட இடத்தை சுற்றிலும் கருமையான அடையாளம் தோன்றாது. தொலைவில் இருந்தே துப்பாக்கியால் சுட்டதாக மருத்துவ அறிக்கையில் இடம்பெறுவதற்காக இவ்வாறு செய்வார்கள். காட்டும்.

"முதல் நாள் இரவு, அண்ணன் வினோத் மற்றும் அவரது நண்பர் அமர்ஜீத்தையும் ராணி சராய் காவல் நிலையத்தில் பார்த்ததாகவும் பங்கஜ் என்னிடம் சொன்னான். பங்கஜ் அங்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே அவர்கள் இருவரும் அங்கு வைக்கப்பட்டிருந்தார்களாம். பங்கஜின் அண்ணன் வினோத் என்ற தகவல் தெரிந்ததுமே, உடனே பங்கஜை வண்டியில் ஏற்றி அங்கிருந்து அழைத்துச் சென்றுவிட்டார்கள். பங்கஜிடம் இருந்து இந்த தகவல் தெரிந்ததும் நான் மீண்டும் 100 எண்ணுக்கு அழைத்து தகவல் சொல்லிவிட்டு, காவல்துறையில் இருந்த எனக்கு தெரிந்த அனைவரையும் அழைத்து, என் மூத்த மகனை கடத்திவிட்டார்கள் என்ற தகவலை சொல்லிவிட்டேன். ஆனால் எதுவுமே நடக்கவில்லை" என்று வருத்தத்துடன் சொல்கிறார் ராம்விருக்ஷ்.

Image caption ஹட்வா கால்ஸா கிரமத்தில் பரம்பரை வீட்டில் பங்கஜ் யாதவின் குடும்பத்தினர்

சில மணி நேரத்தில் வினோதின் தந்தை அழைத்த போலீசார், வினோத் நிஜாமாபாத் காவல் நிலையத்தில் இருப்பதாக தகவல் தெரிவித்தனர்.

"பங்கஜ் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டான், நான் வினோதை பார்ப்பதற்காக நிஜாமாபாத் காவல் நிலையத்திற்கு சென்றேன். அப்போது ஏப்ரல் 15ஆம் அன்று இரவு 10 மணியாகிவிட்டது. அப்போது என் மகனை என்னிடம் ஒப்படைப்பதாகவும், நான் எந்தவித புகாரோ அல்லது நடவடிக்கையோ எடுக்கமாட்டேன் என்று எழுதப்பட்டிருந்த ஒரு ஆவணத்தைக் கொடுத்து, அதில் கையெழுத்திடச் சொன்னார் ஒரு போலீஸ்காரர். நான் வினோதை அழைத்துக் கொண்டு வந்துவிட்டேன். ஒரே நாளில் இப்படி பல விஷயங்கள் நடந்து முடிந்துவிட்டன. புதிதாக திருமணமான, ஒருவனை பிடித்து அவன் மீது ஆறு வழக்குகள் போட்டு, அவன் தலைக்கு 20 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையையும் அறிவிக்கிறார்கள். மறுபுறமோ, மூத்த மகன் வினோதை போலீசார் கடத்திச் செல்கிறார்கள். எங்கள் உலகமே தலைகீழாகிவிட்டது. எங்களுக்கு மிகவும் பயமாக இருக்கிறது" என்று கூறுகிறார் ராம்விருக்ஷ்.

வினோத்தின் கதை

சரி மருத்துவமனையில் பெற்றோரின் வண்டியை பின் தொடர்ந்த வினோத் எப்படி காவல் நிலையத்திற்கு சென்றார்? ஏப்ரல் 14ஆம் தேதி பிற்பகல் மருத்துவமனைக்கு செல்ல இருசக்கர வாகனத்தில் கிளம்பிய வினோதைத் தாண்டிச் சென்ற எஸ்.ஓ.ஜியின் வண்டி, உரசிக்கொண்டு முந்திச்சென்று அவரை கீழே விழவைத்தது. பிறகு போலீஸ் ஜீப்பில் ஏற்றப்பட்ட வினோத், பகல் முழுவதும் அதிலேயே இருக்க வைக்கப்பட்டார். வண்டி அக்கம்பக்கத்தில் உள்ள இடங்களில் எல்லாம் சுற்றித் திரிந்த பிறகு, அன்று இரவு, ராணி சராய் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றது. அங்குதான் அவர் பங்கஜை சந்தித்தார். பிறகு உடனே போலீசார் அவரை நிஜமாபாத் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்ததாக வினோத் தெரிவிக்கிறார்.

என்கவுன்டர் முடிவடைந்த இரண்டரை மாதங்களுக்கு பிறகு பங்கஜ் பிணையில் வெளிவந்திருக்கிறார், காலில் சுடப்பட்ட அவருக்கு இப்போதும் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது.

அச்சத்தில் பரிதவிக்கும் குடும்பம்

பங்கஜின் தாய் சிர்மலா அச்சத்துடன் நம்மிடம் கூறிய விசயம் இது: 'செப்டம்பர் மாதம் 17ஆம் தேதியன்று வீட்டுக்கு வந்த மேஹ்நகர் காவல்நிலையை அதிகாரி ப்ரேம்சந்த் யாதவ், என் மகனை கொன்று விடப் போவதாக அச்சுறுத்தல் விடுத்தார்'.

விஷ்வர்கர்மா பூஜையன்று, தாரோஹா ஐயா காவலர்களுடன் வீட்டுக்கு வந்தார். எங்கள் பகுதியில் இருந்த எல்லா இடங்களிலும் தேடினார். என் மகளை வீட்டில் இருந்து வெளியே இழுத்து, பங்கஜ் பற்றி கேட்டார், பங்கஜை கொல்லப்போவதாக அவர் கூறினார். என் மகனை விட்டுவிடுங்கள் என்று அவரிடம் கெஞ்சினேன். இன்னும் இருபது நாட்களுக்குள் உன் மகனுக்கு கருமாதி செய்வதற்கு தயாராக இரு என்று அவர் சொன்னார்" என்று சொல்லிக்கொண்டே சிர்மலா விம்மி அழத் தொடங்கினார்.

மனித உரிமை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் மீது மட்டுமே தனக்கு நம்பிக்கை எஞ்சியிருப்பதாக சொல்கிறார் ராம்விருக்ஷ்.

"156 (3) பிரிவின்கீழ் உள்ளூர் போலீசாருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப் போகிறேன். பங்கஜின் வழக்கில் பாரபட்சமில்லாமல் விசாரணை நடைபெற வேண்டும். எதிர்வரும் உள்ளூர் தேர்தல்களில் போட்டியிட வேண்டும் என்பது பங்கஜின் விருப்பம். அவனை போட்டியிடாமல் தடுப்பதற்காக செய்யப்பட்ட சதியா இது என்பது எனக்கு தெரியவில்லை. என் மகன் மீது நடத்தப்பட்டது ஒரு போலி என்கவுண்டர். அவன் பேரில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், நாங்கள் நீதிமன்றத்தை அணுகி பிணை வாங்கினோம். அது தெரிந்ததும், இரவோடு இரவாக பங்கஜ் மீது குண்டர் சட்டத்தை போட்டார்கள். எங்களை சுற்றி வளைத்து அச்சமூட்டி எங்கள் விருப்பத்தை குலைக்கப் பார்க்கிறார்கள். என் மகன் அப்பாவி, குற்றமற்றவன். இன்று ஒருவன் மீது என்கவுண்டர் நடத்தும் இவர்கள், நாளை வேறு யார் மீது வேண்டுமானாலும் அதே மாதிரி தாக்குதல் நடத்துவார்கள். எனவே இந்த வழக்கை சரியான முறையில் விசாரிக்கவேண்டும்" என்கிறார் ராம்விருக்ஷ்.

போலீசாரின் தரப்பு

பங்கஜ் யாதவ் என்கவுன்டர் செய்யப்பட்டபோது ஆஜன்மரில் காவல்துறை மூத்த கண்காணிப்பாளராக பணிபுரிந்த அஜய் சாஹ்னியுடன் பேசினோம். அந்த பகுதியில் நடைபெற்ற பல பெரிய திருட்டு சம்பவங்களில் பங்கஜ் யாதவ் சம்பந்தபப்ட்டிருப்பதாக அவர் கூறினார். "என்கவுன்டர் செய்யப்பட்டபோது அவர் தப்பிக்க முயன்றதோடு, போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். அவரிடம் இருந்து இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. போலீசார் தற்பாதுகாப்புக்காக எதிர் தாக்குதல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது" என்பதே அவரது பதிலாக இருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநில காவல்துறை டி ஜி ஓபி சிங், பங்கஜ் யாதவ் என்கவுண்டர் பற்றி இவ்வாறு கூறுகிறார்: "ஆஜம்கர் என்கவுன்டர் வழக்கில் கருத்து சொல்ல நான் விரும்பவில்லை. குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்திடம் பேசினால், அவர் தவறு ஏதும் செய்யவில்லை, தவறெல்லாம் போலிசார் தரப்பில்தான் என்றே சொல்வார்கள். யாரும், யார் மீது வேண்டுமானாலும் கேள்வி எழுப்பலாம். என்கவுண்டர் வழக்கு முறைப்படி ஆய்வுக்கு உட்படுத்தப்படும். விசாரணையில் காவல்துறை மீது தவறு இருப்பதாக தெரியவந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்."

அரசு தரப்பு என்ன சொல்கிறது?

உத்தரப்பிரதேசத்தில் அதிகரித்துவரும் காவல்துறை என்கவுன்டர்கள் தொடர்பான புகார்கள் மற்றும் கேள்விகள் குறித்த விளக்கத்தை கேட்பதற்காக மாநில அரசின் செய்திதொடர்பு அதிகாரி ஸ்ரீகாந்த் சர்மாவிடம் பேசினோம்.

"மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் அனைவருக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதுதான் அரசின் முன்னுரிமை. சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் என பல எதிர்கட்சிகளும் குற்றம் செய்தவர்களுக்கு உதவுவதோடு, அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்றன. எங்கள் அரசு குற்றவாளிகளுக்கு எந்தவித பாதுகாப்பையும் கொடுக்காது. தவறை யார் செய்தாலும், அதற்கு அவர்கள் மொழியிலேயே போலீஸ் பதிலளிக்கும். அதேசமயம், யாராவது சீருடை அணிந்துக் கொண்டு தவறான செயல்களில் ஈடுபட்டால் அவர்களிடமும் அரசு கடுமையாகவே நடந்துக் கொள்ளும்" என்கிறார் ஸ்ரீகாந்த் சர்மா.

எதிர்கட்சிகளில் குரல்

"தவறு செய்தால் சரியான வகையில் தண்டிக்கப்படுவீர்கள்" என்ற மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாதின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கிறார் சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் அப்துல் ஹஃபீஸ் காந்தி. "குற்றம் சாட்டப்பட்டதால் மட்டுமே ஒருவரை குற்றவாளி என்று கூறிவிட முடியாது, அதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். காவல்துறையினரை தங்களுடைய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவது கண்டனத்திற்கு உரியது. மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது ஒன்றே அரசு மற்றும் காவல்துறையின் தலையாய பணி. போலி என்கவுண்டர்கள் நடத்தி மக்களை அச்சுறுத்துவது அவர்களின் பணியல்ல" என்று கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்