18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: என்ன செய்யப் போகிறார் டி.டி.வி. தினகரன்?

என்ன செய்யப் போகிறார் டி.டி.வி. தினகரன்?

டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவான 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான அரசின் மீது தொங்கிக் கொண்டிருந்த கத்தி இப்போதைக்காவது விலகியிருக்கிறது.

இனி டி.டி.வி. தினகரன் முன்பிருக்கும் வாய்ப்புகள் என்னென்ன?

இந்தத் தீர்ப்பு தங்களுக்கு ஓர் அனுபவம் தானே தவிர, பின்னடைவு அல்ல என எடப்பாடி தரப்புக்கு எதிராக செயல்பட்டுவரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டி.டி.வி. தினகரன் தெரிவித்திருந்தாலும், இது நிச்சயமாகப் பின்னடைவுதான்.

தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என எதிர்பார்த்தே, தனக்கு ஆதரவாக இருந்த சட்டமன்ற உறுப்பினர்களை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் ஒட்டுமொத்தமாக தங்க வைத்திருந்தார் தினகரன்.

படத்தின் காப்புரிமை Getty Images

இப்போது தீர்ப்பு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்புக்கு சாதகமாக வந்திருக்கும் நிலையில், தினகரனுக்கு முன்பாக மூன்று வாய்ப்புகளே இருக்கின்றன.

ஒன்று, இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். அல்லது தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, 20 தொகுதிகளிலும் இடைத் தேர்தலை சந்திக்கத் தயாராகலாம் அல்லது தீர்ப்புக்குத் தடை வாங்காமல், உச்ச நீதிமன்றத்தி்ல மேல் முறையீடு செய்துவிட்டு இடைத் தேர்தலை சந்திக்கலாம்.

ஆனால், டி.டி.வி. தினகரனின் தரப்பில் உள்ள பல சட்டமன்ற உறுப்பினர்கள் மேல் முறையீட்டிற்குச் செல்லாமல் தேர்தலை சந்திக்கவே விரும்புகிறார்கள்.

குறிப்பாக தங்க தமிழ்ச் செல்வன் போன்றவர்கள் இந்த வழக்கிலிருந்தே விடுவித்துக்கொண்டு, நேரடியாக தேர்தலை சந்திக்கத் தயாராக இருப்பதை வெளிப்படையாகவே சொல்லிவந்தனர்.

"இந்தத் தீர்ப்பைப் பற்றிச் சொல்வதற்கு ஏதுமில்லை. ஆரம்பத்திலிருந்தே இந்த வழக்கை நான் விரும்பவில்லை. ஒன்றரை ஆண்டுகள் கழித்து இப்போதாவது இந்த விவகாரத்திற்கு முடிவுவந்ததே என்றுதான் தோன்றுகிறது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்வதா இல்லையா என்பதை டி.டி.வி. தினகரன்தான் முடிவுசெய்வார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆனால், என்னைப் பொறுத்தவரை மக்கள் மன்றத்தில் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என பிபிசியிடம் தெரிவித்தார் டி.டி.வி. தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினராக இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன்.

ஆனால், டி.டி.வி. தினகரன் தரப்பில் ஊடகங்களில் பேசும் பலரும் எடியூரப்பா வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டுகின்றனர்.

பலரும் மேற்கோள் காட்டும் பி.எஸ். எடியூரப்பா வழக்கு என்பது என்ன?

கர்நாடகாவில் 2010ல் பி.எஸ். எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்துகொண்டிருந்தபோது, 11 பா.ஜ.க. உறுப்பினர்கள் உட்பட 16 சட்டமன்ற உறுப்பினர்கள் எடியூரப்பாவுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அக்டோபர் 12ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் எடியூரப்பாவிடம் கூறினார்.

ஆனால், அக்டோபர் பத்தாம் தேதியன்று இந்த 16 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக கர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகர் அறிவித்தார்.

இதனை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகினர். உயர் நீதிமன்றம் சபாநாயகரின் முடிவு செல்லுமென அறிவித்தது.

இதற்குப் பின் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் விளக்கமளிக்க தகுந்த கால அவகாசமளிக்கவில்லையெனக் கூறிய உச்ச நீதிமன்றம் தகுதி நீக்கத்தை ரத்துசெய்தது.

ஆனால், எடியூரப்பா வழக்கின் தன்மையும் இதுவும் வெவ்வேறு என நீதிபதி எம். சத்யநாராயணா தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஆகவே, உச்ச நீதிமன்றத்தை அணுகுவது குறித்து தினகரன் தரப்பு வெகுவாக யோசிக்கக்கூடும்.

"இந்தத் தீர்ப்பினால் மூன்று முக்கியமான விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. முதலாவதாக, தினகரன் தரப்பும் எடப்பாடி தரப்பும் இணைவதற்கான வாய்ப்பு தற்போது இல்லாமல் போய்விட்டது. அவர்கள் இடையிலான பிளவு அடுத்த கொஞ்ச காலத்திற்கு நீடிக்கவே செய்யும்.

இரண்டாவதாக, தகுதிநீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தினகரனுடன் இருப்பதைத் தவிர வேறு வழியே இல்லை.

மூன்றாவதாக, இந்தத் தகுதி நீக்கத்தின் மூலம், தினகரன் வசமிருந்த சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கள் வசம் இழுப்பதற்கான வாய்ப்பை ஆளும் தரப்பு இழந்திருக்கிறது. அவர்களைத் தகுதி நீக்கம் செய்யாமல் சிலரைத் தங்கள் பக்கம் இழுத்திருந்தால், எடப்பாடி தரப்பு ஒரு வலுவான அணி என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கும்" என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் து. ரவிக்குமார்.

இந்தத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமெனக் கூறும் ரவிக்குமார், அவற்றில் எடப்பாடி - ஓ.பி.எஸ். அணி வெல்லும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்கிறார்.

இந்தத் தீர்ப்பு டிடிவி தினகரன் தரப்புக்கு தற்போதைக்காவது பெரும் பின்னடைவு என்றுதான் சொல்ல வேண்டும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

"தினகரன் வசம் 18 பேர் இருந்தால் அவர் தொடர்ந்து எடப்பாடி தரப்பை பதற்றத்திலேயே வைத்திருந்திருக்கலாம். அந்த வாய்ப்பு அவருக்கு இல்லாமல் போய்விட்டது. இனி, அவர் உச்ச நீதிமன்றத்திலோ, தேர்தலிலோ தன் பலத்தை, நியாயத்தை நிரூபித்தாக வேண்டும்" என்கிறார் அவர்.

இடைத் தேர்தல் நடைபெற்று, மொத்தமுள்ள 20 தொகுதிகளில் 10 தொகுதிகளிலாவது டிடிவி தினகரன் தரப்பு வெற்றிபெற்றாலே அது அவருக்கு மிகப் பெரிய வெற்றியாக இருக்கும்.

வெற்றிவேல், தங்க தமிழ்ச் செல்வன் போன்றவர்கள் தங்கள் சொந்த செல்வாக்கிலேயே வெல்வார்கள். அது ஆளும் தரப்புக்கு நெருக்கடியாக அமையும் என்கிறார் ராதாகிருஷ்ணன்.

ஆனால், இதற்கு நீண்ட நாட்கள் பிடிக்கும். அதுவரை எடப்பாடி தரப்பு நிம்மதியாக இருக்க முடியும் என்கிறார் ராதாகிருஷ்ணன்.

தமிழக சட்டப்பேரவை 234 உறுப்பினர்களைக் கொண்டது. இதில் திருவாரூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க. தலைவருமான மு. கருணாநிதியும் திருப்பரங்குன்றம் தொகுதியின் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. போஸும் மரணமடைந்ததால் இரண்டு தொகுதிகள் காலியாக உள்ளன.

தற்போது வெளியாகியுள்ள தீர்ப்பின்படி 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்டனர். ஆக ஒட்டுமொத்தமாக 20 தொகுதிகள் காலியாக உள்ளன.

மீதமுள்ள 214 தொகுதிகளில் 88 தொகுதிகள் தி.மு.க. வசமும் 8 தொகுதிகள் காங்கிரஸ் வசமும் 1 தொகுதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வசமும் உள்ளன. 1 தொகுதியில் டிடிவி தினகரன் வெற்றிபெற்றிருக்கிறார்.

மீதமுள்ள 116 தொகுதிகளில் 3 தொகுதிகளில் வேறு கட்சியினர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள்.

இவர்களில் கருணாஸ் மட்டும் எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பு எதிரான நிலையை வெளிப்படியாக எடுத்திருக்கிறார்.

இவர்கள் மூவரின் ஆதரவை விட்டுவிட்டால்கூட 113 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும்கட்சி வசம் உள்ளன.

தற்போதைய நிலையில், தமிழக சட்டப்பேரவையில் 214 உறுப்பினர்கள் உள்ளனர். அவையில் அறுதிப் பெரும்பான்மைக்கு 108 உறுப்பினர்களே தேவைப்படுவார்கள். இதனால், ஆளும்கட்சி எளிதில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற முடியும்.

தனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசனை செய்து, தனது முடிவை அறிவிக்கப்போவதாக சொல்லியிருக்கிறார் தினகரன்.

தினகரனுக்கும் சரி, அவரது ஆதரவாளர்களுக்கும் சரி - ஒருவருக்கொருவரைச் சார்ந்திருப்பதைத் தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை.

ஆளும் கட்சிக்குள் தனது 'ஸ்லீப்பர் செல்கள்' இருப்பதாக நீண்ட நாட்களாகச் சொல்லிவந்தார் தினகரன். அப்படி உண்மையில் ஸ்லீப்பர் செல்கள் இருந்தால் அவர்களும் இனி கவனமாக இருக்க வேண்டியதாக இந்தத் தருணம் அமைந்துவிட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: