முசிறி பெண் பிடிவாதம்: ”12வது குழந்தையை சுகப்பிரசவம் மூலம்தான் பெற்றெடுப்பேன்"

"11வது குழந்தையை சுகப்பிரசவம் மூலம்தான் பெற்றெடுப்பேன்": திருச்சி பெண் போராட்டம்

முசிறியில் 11 குழந்தைகளை பெற்றெடுத்த 48 வயது பெண், மீண்டும் நிறைமாத கர்பிணியாக உள்ள நிலையில், 12 வது குழந்தையை வீட்டிலேயே சுகப்பிரசவம் மூலம்தான் பெற்றெடுப்பேன் என்று போராட்டம் நடத்தியுள்ளார்.

பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்ல மறுத்து வந்த நிலையில், தற்போது காவல்துறை உதவியுடன் மருத்துவ அதிகாரிகள் முசிறி அரசு மருத்துவமனைக்கு அப்பெண்ணை அழைத்துச் சென்றனர்.

முசிறி கீழத்தெருவில் வசிப்பவர் கண்ணன். இவருக்கு வயது 50. இவர் அந்த பகுதியில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும் கீதா, உதயகுமாரி, கிருத்திகா, சுப்புலட்சுமி, பூஜா ஆகிய 5 மகள்களும் கார்த்திக், தர்மராஜ், தீபக் ஆகிய 3 மகன்களும் உள்ளனர். இதுமட்டுமின்றி, சாந்தியின் 2 குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்டனர்.

கீதா, உதயகுமாரி உள்பட 3 பெண்களுக்கு திருமணமாகி அவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சாந்தி தற்போது 12வது முறையாக கர்பமாகியுள்ளார். அவரை வீட்டில் சென்று பரிசோதனை செய்துவரும் கிராம சுகாதார செவிலியர் சுப்புலட்சுமி, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு சாந்தியை பலமுறை அழைத்துள்ளார்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்ல மறுத்த சாந்தி தன்னை அழைத்துச் சென்று அறுவை சிகிச்சை செய்து குடும்பக்கட்டுப்பாடு செய்துவிடுவீர்கள். அதனால் நான் மருத்துவமனைக்கெல்லாம் வரமாட்டேன் என்று கூறிவந்ததோடு தான் வீட்டிலேயே 11 குழந்தைகளை பெற்றுள்ளேன், அதேபோல் இந்தமுறையும் வீட்டில்தான் குழந்தை பெற்றுக்கொள்வேன் என்று கூறியுள்ளார்.

தமிழக அரசு வீட்டில் பிரசவம் செய்து கொள்வதை தடை செய்துள்ள நிலையில் தற்போது முசிறி கீழத்தெருவை சேர்ந்த சாந்தி இவ்வாறு கூறியுள்ளதை அறிந்த திருச்சி மாவட்ட தாய்சேய் நல அலுவலர் உஷாரமணி , தண்டலைப்புத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கீதா, கிராம சுகாதார செவிலியர் சுப்புலட்சுமி ஆகியோர் கொண்ட குழு நேற்று சாந்தியின் வீட்டிற்கு சென்று அவரை அழைத்துக்கொண்டு முசிறி அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை செய்துள்ளனர்.

அப்போது சாந்திக்கு ரத்தம் குறைவாக உள்ளதை உறுதிசெய்துள்ளனர். அதன் பின்னர் இன்று ரத்தம் ஏற்றுவதற்காக முழு ஏற்பாடுகளையும் செய்த மருத்துவக்குழுவினர் சாந்தி வீட்டிற்கு சென்றுள்ளனர்.

மருத்துவ குழுவினர் வருவதை அறிந்த சாந்தி அங்கிருந்து முசிறி காவிரி ஆற்று அக்ரஹார படித்துறை பகுதியில் தலைமறைவாகியுள்ளார். அங்கு சென்று மருத்துவக்குழுவினர் பார்த்தபோது காவிரி ஆற்றில் தண்ணீருக்குள் ஒளிந்துகொண்டார். பின்னர் அவரை மீட்டு கரைக்கு அழைத்து வந்த மருத்துவக்குழுவினர் நீண்ட நேரமாக போராடியும் சாந்தி மருத்துவமனைக்கு வர மறுத்துவந்தார்.

பின்னர் மருத்துவகுழுவினர் முசிறி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர்கள் ராம்குமார், சுபாஷினி மற்றும் போலீசார் சாந்திக்கு அறிவுரைகள் கூறினர்.

அதன் பின்னர் சாந்தி முசிறி அரசு மருத்துவமனைக்கு மட்டுமே தான் வருவதாக கூறியதை தொடர்ந்து மருத்துவகுழுவினர் சாந்தியை முசிறி அரசு மருத்துவமனைக்கு மாவட்ட தாய்சேய் நல அலுவலர் காரில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :