காலநிலை மாற்றம்: இந்தியா ஏன் கவலை கொள்ள வேண்டும்?

காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் ஏற்படும் விளைவுகள் சமூகரீதியாக மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாகவும் பேரழிவை ஏற்படுத்தலாம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் ஏற்படும் விளைவுகள் சமூகரீதியாக மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாகவும் பேரழிவை ஏற்படுத்தலாம்.

அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த தவறினால், மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையேயான குழு தங்களது அறிக்கையில் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த காலநிலை மாற்றமானது இந்தியா மற்றும் தெற்காசிய பகுதியில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை விளக்குகிறார் கிழக்கு அங்க்லியாவின் எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவன பல்கைலக்கழத்தின் ஆயுஷி அவஸ்தி.

உலகில் வெப்பநிலை உயரும் அபாயம் குறித்து அக்குழு வெளியிட்ட அறிக்கை, இது தொடர்பான அபாயங்கள் குறித்து நமக்கு விரிவாக எச்சரிக்கிறது.

உலகின் வெப்பநிலை 1.5 செல்சியஸ் உயர்ந்தால், "உணவுப் பற்றாக்குறை, உணவு பொருட்களின் விலை உயர்வு, வாழ்வாதாரம் பாதிப்பு, மோசமான சுகாதார தாக்கங்கள், மற்றும் மக்கள் இடம்பெயர்தல் போன்ற பல விளைவுகளை பின்தங்கிய மக்கள் மிக அதிகமாக சந்திக்கக்கூடும்" என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இப்படி மோசமாகப் பாதிக்கப்படும் பல நாடுகளில், குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட, சமத்துவம் இல்லாத மற்றும் வறுமை மிகுந்த நாடான இந்தியாவும் ஒன்று

காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் ஏற்படும் விளைவுகள் சமூகரீதியாக மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாகவும் பேரழிவை ஏற்படுத்தலாம்.

இந்தியா நீண்ட கடற்கரை உள்ள நாடு. கடல்மட்டம் உயரும் பட்சத்தில் இங்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும். கடற்கரை ஓரத்தில் வாழும் மக்களும், கடலை சார்ந்து வாழும் மக்களும் முதலில் பாதிக்கப்படுவார்கள்.

மற்றொரு பக்கத்தில், கடுமையான வெப்பக்காற்று. 2015ம் ஆண்டில் வீசிய வெப்பக்காற்றால் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். விரைவில் அதுபோன்ற காற்று தினசரி ஒன்றாகிவிடலாம். இதில் கடுமையாக பாதிக்கக்கூடிய நகரங்கள் இந்தியாவில் கொல்கத்தாவும், பாகிஸ்தானில் கராச்சியும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

2015லிருந்து 2050 வரை புவி வெப்பமாவதை கட்டுப்படுத்த சுமார் 900 பில்லியன் டாலர்கள் செலவாகலாம்

ஆனால், உயரும் வெப்பநிலையைக் குறைப்பதற்கும், பாதிப்புகளை குறைப்பதற்கும் இன்னும் அவகாசம் உள்ளது என்றும் கூறியுள்ள இந்த அறிக்கை தெற்காசிய நாடுகளில் அப்படிச் செய்வது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் குறைவான வளங்களைக் கொண்டுள்ள இவை பெரும்பாலும் வளரும் நாடுகள்.

2015லிருந்து 2050 வரை புவி வெப்பமாவதை கட்டுப்படுத்த சுமார் 900 பில்லியன் டாலர்கள் செலவாகலாம் என்றும் அந்த அறிக்கையில் கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால், இது ஒரு குறைவான மதிப்பீடாகவே தெரிகிறது.

ஐ.என்.டி.சி. என்று அறியப்படும் சர்வதேச ஒப்பந்தத்தின் கீழ் தாங்கள் 2020க்குப் பிறகு தாங்கள் எடுக்க விரும்பும் நடவடிக்கைகளைப் பற்றி வெளிப்படையாக குறிப்பிடும்போது பல நாடுகள் இதைவிடப் பலமடங்கு அதிகமான திட்ட மதிப்பீட்டை தந்தன.

இதுகுறித்த தனது இலக்குகளை அடைவதற்கு 1 ட்ரில்லியன் டாலர்கள் செலவாகும் என்று இந்தியா கணக்கிட்டுள்ளது. அதே வேளையில் தங்களுக்கு 40 பில்லியன் டாலர்கள் செலவாகும் என்று பாகிஸ்தான் கணக்கிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

இந்த செலவினங்களை வைத்தே, இந்த பிரச்சனையின் தீவிரத்தை நாம் உணர முடியும்.

ஆனால், இந்த செலவுகளை யார் ஏற்றுக் கொள்வார்கள் என தெரியவில்லை.

ஐ.பி.சி.சி.யின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட இந்தியா, பருவநிலை மாற்றத்தால் தமக்குரிய பங்கைவிட கூடுதலான சுமையை இந்தியா தாங்கவேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டது.

இந்த கூற்று முற்றிலும் பொய் அல்ல.

புவி வெப்பமையமாவதை குறைக்க கார்பன் டை ஆக்ஸைட் வெளிப்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்ற அழுத்தத்தில் இந்தியா இருக்கிறது. ஆனால், அதே நேரத்தில் அதிகரிக்கும் தண்ணீர் பற்றாற்குறை, வறட்சி, வெள்ளம், புயல் மற்றும் பிற இயற்கை பேரழிவுகளுக்கும் இந்தியா தயாராக வேண்டும்.

பட மூலாதாரம், AFP

இந்தியாவில் பேரிடர் மேலாண்மை அமைப்பு ஓரளவிற்கு சிறந்த முறையில் இருக்கிறது என்றாலும், இதனை மேலும் மேம்படுத்த அதற்கு மேலும் வளங்கள் வேண்டும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் இந்தியா பெரிய இலக்குகள் வைத்துள்ளது.

அடுத்து என்ன என்பதே இங்கு எழுப்பப்படும் முக்கிய கேள்வியாகும்.

பருவநிலை அறிக்கை குறித்து மீண்டும் விவாதிக்க சர்வதேச நாடுகள் மீண்டும் அடுத்த இரண்டு மாதங்களில் போலந்தின் கடோவைசில் சந்திக்க உள்ளன.

இந்த அறிக்கையில் இருக்கும் பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்படும். குறிப்பாக தெற்காசிய நாடுகளின் பார்வையில் இருந்து இவை தீவிரமாக பார்க்கப்படும்.

தற்போது கார்பன் அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கான தந்திரத்தை இந்தியா வகுத்து வருகிறது.

அதே போல புதுப்பிக்கத்தக்க ஆற்றலையும் இலக்காக வைத்துள்ளது. ஆனால், அதற்கேற்ப இங்கு பல சவால்கள் உள்ளன.

பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றலை சேமிக்க தேவை இருக்கும் நிலையில், இதற்கான பேட்டரிகளின் விலை கட்டுப்படியாகும் அளவுக்கு குறையவில்லை.

இரண்டாவதாக, இந்தியாவில் அதிகமான போக்குவரத்து தேவை உள்ளது. தற்போது இங்கு சைக்கிள்களும், ரிக்ஷாக்களும் அதிகமாக உள்ளன.

தனிநபர் வருமானம் அதிகரிக்க, பலரும் மோட்டர்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு மாறி வருகிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இந்தியாவில் அதிகமான போக்குவரத்து தேவை உள்ளது. இதனால் அதிகளவிலான கார்பன் எமிஷன் ஏற்படலாம்

இதனை கட்டுப்படுத்த இந்திய மின்சக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த வேண்டும். மேலும், பேருந்து, ரயில் சேவை உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து கட்டமைப்புகளை வலுப்படுத்தி, நீடித்த நிலைத்த போக்குவரத்து முறைக்கு வழிசெய்ய வேண்டும்.

இதற்கு தேவைப்படும் தொழில்நுட்பம் மற்றும் நிதி எங்கு இருக்கிறது என்பது குறித்த தெளிவு இல்லாததால் இது ஒரு பெரும் சவாலாக இருக்கும்.

2050ஆம் ஆண்டிற்குள் கரியமில வாயு வெளியாவதை பெருமளவு குறைக்க வேண்டும் என்றால், இதற்கான தீர்வுகள் குறித்து இன்றே யோசிக்க வேண்டும்.

இந்த பிரச்சனைக்கான தீர்வுகளை தெற்காசிய நாடுகள் தாங்களாகவே தீர்த்துக் கொள்ள முடியாது என்பதினால், இலக்குகளை அடைய சர்வதேச ஒத்துழைப்பு இங்கு மிக முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

பிரிட்டனின் கிழக்கு ஆங்க்லியா பல்கலைக்கழகத்தில் பி எச் டி (ஆற்றல் பொருளாதாரம்) செய்து வருகிறார் ஆயுஷி அவஸ்தி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :