"மற்ற கர்நாடக இசை சபாக்களும் இதே போன்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்": என். முரளி

மியூசிக் ஆகாதெமியின் தலைவர் என். முரளி
படக்குறிப்பு,

மியூசிக் ஆகாதெமியின் தலைவர் என். முரளி

#MeToo விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கர்நாடக இசைக் கலைஞர்களான ரவி கிரண், ஓ.எஸ். தியாகராஜன், மன்னார்குடி ஈஸ்வரன், ஸ்ரீ முஷ்ணம் வி ராஜாராவ், வயலின் கலைஞரான நாகை ஸ்ரீராம், ஆர். ரமேஷ், திருவாரூர் வைத்தியநாதன் ஆகியோர் மீதும் பாலியல் புகார்கள் சொல்லப்பட்டன. இந்தப் புகார்களுக்குள்ளான 7 கர்நாடக இசைக் கலைஞர்களை இந்த ஆண்டு டிசம்பர் சீஸனில் மேடை ஏற்றப்போவதில்லையென சென்னையின் மிகப் பிரபலமான 'தி மியூசிக் ஆகாதெமி' எனப்படும் சங்கீத வித்வத் சபை முடிவெடுத்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார் மியூசிக் ஆகாதெமியின் தலைவர் என். முரளி. அந்தப் பேட்டியிலிருந்து.

கே. #MeToo விவகாரத்தில் பாலியல் குற்றம்சாட்டப்பட்டதையடுத்து 7 கலைஞர்களை மேடையேற்றப் போவதில்லையென அறிவித்திருக்கிறீர்கள். இம்மாதிரி புகார்கள் வருவது இதுதான் முதல் முறையா?

என். முரளி: இது போன்ற பேச்சுகள் இதற்கு முன்பும் இருந்திருக்கின்றன. ஆனால், யாரும் வெளிப்படையாகக் குற்றம்சாட்ட தயங்கினார்கள். ஆனால், இப்போது இந்த "மீ டு" விவகாரம் ஒரு புயலைப் போல தாக்கியிருக்கிறது. இம்மாதிரி கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளிப்படையாக வந்து சொல்லும்போது நாங்கள் வேடிக்கை பார்க்க முடியாது. ஆகையால் இந்த புகாருக்குள்ளான 7 கலைஞர்களை இந்த ஆண்டு டிசம்பர் சீஸனில் எங்களுடைய சபாவில் மேடையேற்றுவதில்லையென முடிவுசெய்திருக்கிறோம்.

புகாருக்குள்ளானவுடனேயே இந்த முடிவுக்கு நாங்கள் வந்துவிடவில்லை. பலரிடம் விசாரித்து அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையானவையாக இருக்க முடியுமா என்றெல்லாம் பார்த்துத்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். ஏப்ரல் மாதமே எங்களுடைய கச்சேரிகள் முடிவுசெய்யப்பட்டுவிட்டன. குற்றச்சாட்டுகள் இப்போதுதான் வெளிவந்திருப்பதால், அவர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

கே. #MeToo புகாருக்குள்ளான கலைஞர்கள் மீது இம்மாதிரி நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்ற முடிவுக்கு எப்படி வந்தீர்கள்?

ப. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வெளிப்படையாக சமூக வலைதளங்களில் தங்கள் அடையாளங்களுடன் குற்றச்சாட்டை முன்வைத்தார்கள். சிலர் பெயர் சொல்லாமல் இதனை முன்வைத்தார்கள். சிலர் வேறொருவர் மூலம் செய்தார்கள். இதில் சிலரது பெயர் மட்டும் வெளிவந்தது. சிலர் என்ன நடந்தது என்பதை விரிவாகச் சொல்லியிருந்தார்கள். இதில் சம்பந்தப்பட்ட பலரது பெயர்கள் எங்கள் நிகழ்ச்சி நிரலில் இல்லை. ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் எங்கள் பட்டியலில் இருந்தால், அவர்களைக் கவனத்தில் கொண்டும். குற்றச்சாட்டு மட்டும் போதாதே.. அதனால், சில அளவீடுகளை வைத்துக்கொண்டோம். ஒருவர் சில சம்பவங்களில் சம்பந்தப்பட்டு, அதில் ஒன்றிரண்டு மிக மோசமானவையாக இருந்தால், அவர்களைப் பற்றி நன்றாக அறிந்தவர்களிடம் விசாரித்து இந்த முடிவுக்கு வந்தோம்.

கே. எந்தக் இசைக் கலைஞராவது நேரடியாக உங்களிடம் இது தொடர்பாக புகார் சொல்லியிருக்கிறார்களா?

ப. இல்லை. எல்லோருக்கும் பயம் இருந்தது. எல்லாத் துறைகளிலும் அந்த பயம் இருக்கிறது. குற்றம் சொல்லும் பெண்களையே குற்றம்சாட்டுகிறார்கள் இங்கே. ஆனால், இந்த மீடு இயக்கத்திற்குப் பிறகு இவர்களுக்கு ஒரு தைரியம் வந்திருக்கிறது.

கே. #MeToo ஹாஷ்டாகுடன் சமூக வலைதளங்களில் சொல்லப்படுவது குற்றச்சாட்டுகள்தான். அவற்றைவைத்து மட்டும் நீங்கள் முடிவெடுப்பது, சம்பந்தப்பட்ட கலைஞர்கள் குறித்து நீங்கள் ஒரு முன்முடிவுக்கு வருவதைப்போல இருக்காதா?

ப. இவை குற்றச்சாட்டுகள் மட்டும்தான் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், சம்பந்தப்பட்டவர்களை குற்றவாளிகள் என நாங்கள் தீர்ப்பளிக்கவில்லையே. நாங்க சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்கவில்லை. இந்த விவகாரம் மியூசிக் அகாதெமிக்கு வெளியில் நடந்திருந்தால் எங்களால் என்ன செய்ய முடியும்? ஆனால், இங்கே நடக்கும் விழாவில் யார் பங்கு கொள்வது, பங்கு கொள்ளக்கூடாது என்பது எங்கள் அதிகாரத்தில் வருகிறது. அந்த அடிப்படையில்தான் நாங்கள் இவர்களை நீக்கிவிட்டோம்.

பட மூலாதாரம், TWITTER

படக்குறிப்பு,

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார்

கே. மியூசிக் அகாதெமியின் இந்த நடவடிக்கை சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கு ஒரு பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தும் அல்லவா..

ப. நாங்கள் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாகவே அவர்களது செயல்பாடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் வந்துவிட்டனவே. நாங்கள் நடவடிக்கை எடுத்துதானா கெட்ட பெயர் வரவேண்டும்? இந்த குற்றச்சாட்டுகளை நாங்கள் சுமத்தவில்லை. வந்த குற்றச்சாட்டுகளை நாங்கள் கவனத்தில் கொண்டோம். அவ்வளவுதான். மியூசிக் அகாதெமி துவங்கி 90 ஆண்டுகளாகிவிட்டன. எங்கள் நம்பகத் தன்மையையும் பாரம்பரியத்தையும் நாங்கள் காப்பாற்ற வேண்டும். எந்த கலைஞரும் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளட்டும்; மியூசிக் அகாதெமியில் கச்சேரி கிடைக்கும் என்றால் அதுவும் தவறல்லவா?

கே. மியூசிக் அகாதெமிக்குள் இம்மாதிரி நடந்தால் அதனை விசாரிக்க உங்களிடம் அமைப்பு இருக்கிறதா?

ப. பப்பு வேணுகோபால் ராவ் என ஒரு செயலர் எங்களிடம் இருந்தார். அமெரிக்காவைச் சேர்ந்த ராயசர்க்கார் என்பவர், கடந்த ஆண்டு இம்மாதிரி முறைகேடாக நடந்துகொண்ட பல கல்வியாளர்களின் பெயர்களை வெளியிட்டார். அதில் பப்பு வேணுகோபால் ராவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. உடனே நாங்கள், இதில் மியூசிக் அகாதெமியின் பெயரும் அடிபடுகிறது. என்ன நடவடிக்கை எடுப்பது என யோசிக்கப்போகிறோம் என்று சொன்னோம். அவர் அந்த அழுத்தத்திலேயே ராஜினாமா செய்துவிட்டார். இதற்குப் பிறகுதான் விசாகா நெறிமுறைகள், 2013ஆம் ஆண்டின் பாலியல் வன்முறை தொடர்பான சட்டம் ஆகியவற்றை வைத்து, அகாதெமிக்குள்ளேயே புகார் அளிக்கக்கூடிய ஒரு கமிட்டியை உருவாக்கியிருக்கிறோம். பப்பு வேணுகோபால் ராவ் பெயர் அடிபட்டதுதான் எங்களுக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்தது. ஆனால், இந்தக் கமிட்டியால் அகாதெமிக்குள் நடக்கும் விவகாரங்களை மட்டும்தான் விசாரிக்க முடியும்.

கே. இந்த முடிவை எடுக்கும் முன்பாக, குற்றம்சாட்டப்பட்ட கலைஞர்களைத் தொடர்புகொண்டீர்களா?

ப. அவர்களைத் தொடர்பு கொண்டு விளக்கமெல்லாம் கேட்கவில்லை. ஆனால், எங்களுக்குள் பேசி இப்படி ஒரு முடிவுக்கு வந்தவுடன் இது தொடர்பான அறிவிப்பை அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தோம். முகவரிக்கும் அனுப்பினோம். சிலர் பதிலேதும் சொல்லவில்லை. சிலர் நாங்கள் அம்மாதிரி இல்லை என்று சொன்னார்கள். ரவிகிரண் போன்றவர்கள் இதை மறுத்தார்கள். அவர், நான் முன்பே இந்தக் கச்சேரியில் கலந்துகொள்ளப் போவதில்லையென முடிவெடுத்ததாக சொன்னார். ஆனால், எங்கள் கடிதம் போவதற்கு முன்பாக அவர் அதைத் தெரிவிக்கவில்லை. அவர் நிகழ்ச்சியை ரத்துசெய்வதாக சொன்னவுடன் அதைச் சொல்கிறார். ஆனால், நாங்கள் விசாரணை ஆணையமல்ல. அதனால், அனைவரையும் கூப்பிட்டு முடிவெடுக்க வேண்டியதில்லை.

கே. இனி இந்த விவகாரத்தில் அடுத்ததாக என்ன செய்ய வேண்டுமென நினைக்கிறீர்கள்?

ப. இம்மாதிரி குற்றங்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு நாங்கள் எடுத்த நடவடிக்கை ஒரு மனத்தடையாக அமையும். மற்ற கர்நாடக இசை சபாக்களும் இதே போன்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். நாங்கள் பேசியபோது, சிலர் செய்யப்போவதாக சொன்னார்கள். சிலர், பொதுவாக ஒரு கமிட்டி அமைத்து முடிவெடுக்கலாம் என்றார்கள். ஆனால், அம்மாதிரி கமிட்டி அமைத்தால் எந்த கலைஞர் அதன் முன்பாக ஆஜராவார்? #MeToo மாதிரி முயற்சிகளுக்கு ஆதரவு வரும்போது அம்மாதிரி குற்றங்கள் குறையலாம். சங்கீத வித்வத் சபை சென்னையின் மிக முக்கியமான அமைப்பு. நாங்கள் செய்தால் மற்றவர்களும் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கே. மார்கழி மாத சீஸனில் கச்சேரிகளை நடத்தும் பிற சபைகளிடம் இது தொடர்பாக பேசினீர்களா?

ப. அவர்களும் பேசினார்கள். நாங்களும் பேசினோம். நாங்கள் முடிவெடுத்த பிறகு எங்கள் முடிவை அவர்களுக்குத் தெரிவித்தோம். அவர்களைப் பொறுத்தவரை, ஒரு கமிட்டி அமைத்து விசாரிக்கலாம் என நினைத்தார்கள். ஆனால், சீஸன் நெருங்கிக்கொண்டிருக்கும்போது அதற்கெல்லாம் அவகாசமில்லை.

இந்தக் குற்றச்சாட்டுகளை வெறும் புகாராக மட்டும் பார்க்கக்கூடாது. பலர் விரிவாக சம்பவங்களை விவரித்திருக்கிறார்கள். இப்படியெல்லாம் ஒருவர் கற்பனை செய்வது கடினம்.

காணொளிக் குறிப்பு,

எது பாலியல் துன்புறுத்தல்? - விளக்கும் காணொளி

கே. இம்மாதிரி சமூக ஊடகங்களில் வந்த செய்திகளை மட்டும் வைத்து, நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்குவது கடுமையான நடவடிக்கை என்ற விமர்சனங்களும் இருக்கின்றன.

ப. நாங்கள் சட்ட ரீதியாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. எங்கள் விழாவில் கலந்துகொள்ளாமல் தடுத்திருக்கிறோம். இது கடுமை என்று சொல்ல முடியாது. இது சரியான நடவடிக்கை. பலரும் இதனை வரவேற்றிருக்கிறார்கள். நாங்கள் வழிகாட்டினால்தான் மற்றவர்களும் செயல்படுவார்கள். சிறிய சபாக்களுக்கு இது ஒரு தூண்டுகோலாக அமையும். எது சரியானது என நினைக்கிறோமோ அதைச் செய்திருக்கிறோம். இந்த நடவடிக்கை கடுமை என்றால், அவர்கள் ஏன் இம்மாதிரி செயல்களில் இறங்க வேண்டும்?

இதை கடுமை என்றால், பெண்கள் எவ்வளவு துன்பப்பட்டிருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள். நாங்கள் மிகக் குறைந்தபட்சமாகவே செயல்பட்டிருக்கிறோம். இதை சரி என்றே நினைக்கிறோம். கமிட்டியின் பிற உறுப்பினர்களும் இதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் இந்த முடிவெடுத்த பிறகு வேறு இரண்டு கலைஞர்களின் பெயர்களும் அடிபட்டன. ஆனால், பெயர்களை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. உறுதியான தரவுகள், சம்பவங்கள் சுட்டிக்காட்டப்பட்டவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

கே. இந்த ஏழு பேரும் இந்த ஆண்டு மியூசிக் அகாதெமி நிகழ்வில் பங்கேற்க முடியாது. ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் என்ன செய்யப்போகிறீர்கள்?

ப. இந்தத் தருணத்தில் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறோம். எதிர்காலம் குறித்து தெரியவில்லை. இது குறித்து கமிட்டி கலந்து பேசித்தான் முடிவெடுக்க வேண்டும். விழாவுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கின்றன. அதனால் இத்தகைய நடவடிக்கையை எடுத்தோம். இப்படி நீக்கப்பட்டவர்கள் இடம்பெற்றிருந்த இடத்தில் வேறு கலைஞர்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறோம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :