ஆதித்யநாத் வெற்றிக்குப் பாடுபட்ட மகன் என்கவுண்டரில் கொலை - தந்தை வேதனை

சுமித் குர்ஜரின் புகைப்படத்துடன் அவரது தாய் ஷ்யாம்வதி படத்தின் காப்புரிமை PRIYANKA DUBEY/BBC
Image caption சுமித் குர்ஜரின் புகைப்படத்துடன் அவரது தாய் ஷ்யாம்வதி

உத்தரபிரதேசத்தில் நடைபெறும் என்கவுண்டர்கள் தொடர்பான பிபிசி தொடரின் சிறப்பு புலனாய்வின் மூன்றாம் பகுதி இது. மனித உரிமைகள் தினத்தை ஒட்டி இன்று இது வெளியாகிறது.

"பாஜக வேட்பாளராக யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்றபோது, என் மகன் ஐந்தாயிரம் ரூபாய்க்கு லட்டு வாங்கி விநியோகித்தான். அந்த வெற்றியை கொண்டாடிய சுமித்தின் முயற்சியால்தான் 900 வாக்குகள் பாஜக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கிடைத்தது. அப்படி கட்சிக்காக உழைத்த என் மகனுக்கு இப்போது என்ன நேர்ந்திருக்கிறது? எந்தத் தவறுமே செய்யாத அவனை கொன்று விட்டார்கள்."

டெல்லியில் இருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் உத்தரபிரதேசத்தின் மேற்குப் பகுதியில், சிர்சிடா கிராமத்தை சேர்ந்த சுமித் குர்ஜரின் தந்தை கோபத்தால் கொதித்துப் போயிருக்கிறார்.

தனது மகன் என்கவுண்டரில் கொல்லப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணையை அவர் கோருகிறார்.

சுமித்தின் வீட்டிற்குள் நுழைந்ததும் அவரது தாயார் ஷ்யாம்வதி அழுதுக் கொண்டே வரவேற்றார்.

"பணமோ, சொத்தோ எதுவுமே வேண்டாம். என்னுடைய மகனின் மரணத்தை சிபிஐ விசாரித்தால் போதும். என் மகனை போலி என்கவுண்டரில் போலீஸ் கொன்றுவிட்டது." என்று விம்முகிறார் ஷ்யாம்வதி.

2017 அக்டோபர் மூன்றாம் தேதியன்று கிரேட்டர் நொய்டாவில் நடந்த ஒரு போலீஸ் என்கவுண்டரில் சுமித் கொல்லப்பட்டார்.

எளிய விவசாய இளைஞராக அனைவராலும் அறியப்படும் சுமித், கொலை, திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாகக்கூறிய போலீஸ், அவரைப் பற்றிய தகவல் வழங்குபவர்களுக்கு ஐம்பது ஆயிரம் ரூபாய் வெகுமதியும் அறிவித்தது.

படத்தின் காப்புரிமை TWITTER @CMOFFICEUP

என்கவுண்டர் நடைபெற்ற நாளில் இருந்தே இதை கொலை என்று கூறும் சுமித்தின் குடும்பத்தினர், உயர்நிலை விசாரணை வேண்டும் என்று கோருகின்றனர்.

தற்போது சுமித் இறந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், நிர்வாகமோ அல்லது போலீசோ எந்தவித கடுமையான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

கடந்த ஒரு வருட காலத்தில் மீரட் போலீஸ் மண்டலத்தில் 860 என்கவுண்டர்கள் நடந்துள்ளது என்பதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது அவசியமாகிறது.

இந்த 860 என்கவுண்டர்களிலும், 384 'குற்றவாளிகள்' காயமடைந்தனர், 40 பேர் கொல்லப்பட்டனர். மீரட் மண்டலத்தின் இந்த புள்ளிவிவரங்களுடன் மாநிலத்தின் மொத்த தரவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், மாநிலத்தில் மீரட் மண்டலத்தில் மட்டுமே 32% என்கவுண்டர்கள் நடந்திருக்கிறது என்பது புரிகிறது.

படத்தின் காப்புரிமை PRIYANKA DUBEY/BBC
Image caption நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்கள்

'தவறாக அடையாளம் காணப்பட்டார்'

செப்டம்பர் 30ஆம் தேதி பிற்பகல் சிர்சிடா கிராமத்தில் இருந்து சுமார் எட்டு கி.மீ தொலைவில் உள்ள ஒரு சிறிய கடையில் நின்று தேநீர் குடித்துக் கொண்டிருந்தார் 22 வயது சுமித் என்று என்கவுண்டரை நேரில் பார்த்த சாட்சி ஒருவர் கூறுகிறார்.

கேரட் பயிரிட்டிருந்த அவர், தனது வயலுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் வாங்க அங்கே வந்திருந்தார். திடீரென்று ஒரு வெள்ளை டொயோட்டா கார் வந்து சந்தையில் நின்றது; சாதாரண ஆடைகள் அணிந்திருந்த நான்கு அல்லது ஐந்து பேர் சுமித்தை நோக்கி நடந்து வந்தார்கள்.

"சுமித் கடத்தப்படுகிறார் என்றே அங்கு இருந்த அனைவருக்கும் தோன்றியது, அவருக்கும் அப்படித்தான் தோன்றியிருக்கும் என நினைக்கிறேன்.

ஏனெனில் அவரது கைகளும் கால்களும் முதுகோடு சேர்த்து பிணைக்கப்பட்டு காரில் தள்ளப்பட்டபோது, அவர் உதவி கோரி கத்தினார் அவரை ஒரு கொடூரமான குற்றவாளியாக கருதிய போலீசார்தான் அவரை குண்டுகட்டாகத் தூக்கிச் சென்றார்கள் என்பது பிறகுதான் எங்களுக்கு தெரிய வந்தது."

பிபிசியின் புலனாய்வில் சுமித் குர்ஜர் தவறாக அடையாளம் காணப்பட்டார் என்பது புலனாகியது.

தகவல்களின்படி, நொய்டா மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் வசித்த 35 வயது சுமித் குர்ஜர் என்பவருக்கு பதிலாக 22 வயது சுமித் குர்ஜரை போலீஸ் பிடித்துச் சென்றது.

இரண்டு சுமித்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கொல்லப்பட்ட சுமித் ஒரு சாதாரண விவசாயி.

"துடிப்பான இளைஞர், திறமையானவர். நாங்கள் எப்போதுமே சோளம் விளைவித்ததில்லை. ஆனால் கடந்த விதைப்பின்போது, மூன்று ஏக்கர் நிலத்தில் சோளம் விதைத்து நல்ல லாபம் பார்த்தான் சுமித்.

இந்த முறை கேரட் பயிரிட்டிருந்தான். பேராசை இல்லாத ஒரு நல்ல மனிதன். விவசாய வேலைகளை பார்த்துக் கொண்டு, வீட்டுக்கு நல்ல பிள்ளையாக அனைவரிடமும் அன்பும் பாசமுமாக நடந்துக் கொள்வான். சுமித் யாரையும் புண்படுத்தியதேயில்லை" என்று கூறி வருத்தப்படுகின்றனர் கிராமத்து மக்கள்.

சுமித் குர்ஜர் என்கவுண்டர்: குடும்பத்தினரின் தரப்பு

சுமித் இறந்த நாளன்று நடைபெற்ற சம்பவங்களை நினைவுகூரும் அவரது சித்தப்பா மகன் பிரவீன், "செப்டம்பர் 30ஆம் தேதி, போலீசார் சுமித்தின் கை-கால்களை கட்டி காரில் கொண்டு சென்றதை நாங்கள் கேள்விப்பட்டதும் உடனடியாக பாக்பத் காவல்துறை எஸ்.பியை சந்தித்து பேசினோம்.

முதலமைச்சரின் புகார் செல்லுக்கு ஃபேக்ஸ் அனுப்பினோம். அனைவரையும் சென்று பார்த்தோம், கெஞ்சினோம். ஆனால் யாருமே எங்கள் குறைகளை காது கொடுத்து கேட்கவில்லை" என்று சொல்லி வருந்துகிறார்.

"பிறகு ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு சோதனைக்கு வந்த போலீசார் சுமித்தின் ஆதார் அட்டை மற்றும் பிற ஆவணங்கள் அனைத்தையும் எடுத்துச் சென்றார்கள்.

அவன் நொய்டாவில் இருப்பதாக எங்கள் உறவினர்களில் ஒருவருக்கு தெரியவந்தது. உடனே நாங்கள் நொய்டாவுக்கு சென்று காவல்துறை எஸ்.பியை சந்தித்தோம்.

சுமித்திடம் விசாரணை நடைபெறுவதாக போலீசார் தெரிவித்தார்கள். 'விசாரணை முடிந்ததும் அனுப்பி வைத்துவிடுவோம். சுமித்தை வைத்துக் கொண்டு நாங்கள் என்ன ஊறுகாயா போடப் போகிறோம்?' என்று அவர்கள் கேட்டார்கள்.

ஆனால், அக்டோபர் இரண்டாம் தேதியன்று சுமித் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார்கள். அன்று இரவே சுமித் ஒரு தலைமறைவு குற்றவாளி என்று காவல்துறை அறிவித்தது."

"ஒரு சில மணி நேரத்திலேயே அவனைப் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

அக்டோபர் இரண்டாம் தேதியன்றும் எங்கள் வீட்டில் மீண்டும் தேடுதல் வேட்டை நடத்துவதற்காக போலீஸ் வந்தது. அப்போதுதான் சுமித்தை என்கவுண்டர் செய்வார்களோ என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டது.

எனவே காவல்துறை, அரசுத்துறை என எல்லா இடங்களிலும் எங்களுக்கு தெரிந்த அனைவரையும் தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துச் சொன்னோம்.

"நிறைய முயற்சி செய்தோம். ஆனால் அக்டோபர் மூன்றாம் தேதியன்று இரவு எட்டு மணிக்கு நொய்டா போலீஸ் சுமித்தை என்கவுண்டர் செய்துவிட்டது."

என்கவுண்டர் முடிந்த இரண்டு நாட்கள்வரை சுமித்தின் சடலத்தை அவரது குடும்பத்தினருக்கு போலீசார் காட்டவில்லை.

"கிரேட்டர் நொய்டாவில் பிரேத பரிசோதனை செய்யும் இடத்திற்கு வெளியே நாங்கள் மறியல் செய்தோம். அங்கு ஊடகங்கள் வந்து எங்களிடம் தகவல்களை கேட்டறியத் தொடங்கிய பிறகுதான் சுமித்தின் சடலத்தை எங்களிடம் ஒப்படைத்தார்கள். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை இதுவரை எங்களுக்கு கொடுக்கப்படவில்லை."

தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் சுமித் குடும்பத்தினர் புகார் அளித்திருக்கின்றனர்.

2017, அக்டோபர் மாதம் 14ஆம் தேதி தேசிய மனித உரிமைகள் குழு, சுமித்தின் உறவினர்களைச் சந்திப்பதற்காக உத்தரபிரதேச மாநிலத்திற்கு வந்தது. என்கவுண்டர் தொடர்பாக உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல்களின்படி மாஜிஸ்ட்ரேட் விசாரணையை மேற்கொள்ளாதது ஏன்? என்பது போன்ற பல கேள்விகளை போலீசாரிடம் எழுப்பியது.

உத்தரப்பிரதேச காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய தேசிய மனித உரிமை ஆணையம், குடும்பத்தினருக்கு பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்காதது குறித்து கண்டனம் வெளியிட்டிருந்தது.

மேலும் விதிமுறைகளின் படி, மனித உரிமைகள் ஆணையத்தை ஏன் போலீஸார் தொடர்பு கொள்ளவில்லை என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. இதன்பிறகுதான் சுமித்தின் பிரேத பரிசோதனை அறிக்கை அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.

அதன்படி, வயிற்றின் வலதுபுறத்தில் குண்டு பாய்ந்து சுமித்தின் மரணம் நிகழ்ந்திருக்கிறது என்பது தெரியவந்தது.

சுமித்தின் என்கவுண்டர் விவகாரத்தை சிபிஐ விசாரணை செய்யவேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் அவரது சடலம் கிடைத்த இரண்டு நாட்கள் வரை இறுதி சடங்குகள் செய்யாமல் காத்துக் கொண்டிருந்தனர்.

"மிகவும் மோசமாக தாக்கப்பட்டிருந்தான் சுமித. அவனது முதுகெலும்பு மூன்று இடங்களில் உடைந்திருந்தது. ஒரு கண் வெளியில் பிதுங்கியிருந்தது. தலை உடைந்திருந்தது. பற்களும் உடைந்திருந்தன.

அவனது சிதைக்கப்பட்டிருந்த உடலை பார்க்கும்போது, அது மனிதர்கள் செய்த காரியமல்ல, மிருகங்கள் அடித்துக் கொன்றதுபோல் தோன்றியது" என்று சுமித்தின் உறவினர் கோபிநாத் என்பவர் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை PRIYANKA DUBEY/BBC
Image caption சுமித்தின் பெற்றோர்

போலீஸ் என்கவுண்டருக்கு எதிராக பாக்பத் மற்றும் நொய்டா நீதிமன்றங்களில் சுமித்தின் குடும்பத்தினர் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் (CRPC) பிரிவு 156 (3)இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆனால் நீதிமன்றத்தை அணுகக்கூடாது என்று, உள்ளூர் போலீசார் பல விதங்களிலும் அழுத்தம் கொடுக்க முயற்சித்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.

"நீதிமன்றத்தை அணுகக்கூடாது என்பதற்காக பலவிதமான பிரச்சனைகளை கொடுத்தார்கள். 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் என்மீதும் எனது இரு சகோதரர்களின் மீதும் பாலியல் வல்லுறவு வழக்கு, கொலை, கொள்ளை, அடிதடி, கெட்ட வார்த்தைகளில் திட்டியது என எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தார்கள்.

ஒரே சமயத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரின் மேல் வழக்கு போட்டால் நாங்கள் வேறுவழியில்லாமல் பின்வாங்கிவிடுவோம் என்று அழுத்தம் கொடுத்தார்கள். ஆனால், உயர்நீதி மன்றத்தில் இருந்து ஸ்டே ஆர்டர் வாங்கி வழக்குகளை எதிர்கொண்டோம்'' என்று சொல்கிறார் பிரவீன்.

''எங்கள் மீது பாலியல் வல்லுறவு புகார் கொடுத்த பெண் கோரக்பூரை சேர்ந்தவர், நாங்கள் மூவருமே அவரை பார்த்ததுகூட இல்லை. வழக்கு நீதிமன்றத்தில் நிற்கவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி எங்களை விடுதலை செய்து வழக்கை முடித்துவைத்தார்.

ஆனால் அதற்குள் எங்கள் குடும்பம் முழுவதும் எதிர்கொண்ட பிரச்சனைகளும், பட்ட வேதனைகளும் வார்த்தைகளால் சொல்லி மாளாது.

வழக்கிற்காக 3-4 லட்ச ரூபாய் செலவானது. எங்கள் சகோதரரின் வழக்கில் சமரசம் செய்து கொண்டால், எங்கள் மூவரின் மீதான வழக்குகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாக போலீஸ் தொடர்ந்து எங்களுடன் பேசியது.

ஆனால் எந்த பிரச்சனை வந்தாலும் எதிர்கொள்வோம் என்று நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக எதிர்த்து நின்றோம்'' என்று சொல்கிறார் பிரவீன்.

தங்களது உறவினர்களுக்கு பணம் கொடுத்து அதன்மூலம் எங்களை வழக்கை திரும்பப்பெறும் கீழ்தரமான முயற்சிகளிலும் காவல்துறை ஈடுபட்டதாக குற்றம் சாட்டுகிறார் சுமித்தின் தந்தை கர்ம் சிங்.

''இரண்டு கோடி ரூபாய் வரை பணம் கொடுப்பதாக பேரம் பேசினார்கள். இரண்டல்ல, இருபது கோடி ரூபாய் கொடுத்தாலும் நாங்கள் பின்வாங்க மாட்டோம். எங்கள் குடும்பத்தின் நிம்மதியையே கெடுத்து, வாழ்க்கையை நரகமாக்கி விட்டார்கள்.

ஆனால் அதற்காக நாங்கள் எங்கள் மகனின் சாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற போராட்டத்தை கைவிட மாட்டோம்'' என்று உறுதியாக சொன்னாலும், அவர் கண்களில் இருந்து வழியும் கண்ணீர் நிற்கவேயில்லை.

காவல்துறையின் தரப்பு

2017 அக்டோபர் மூன்றாம் தேதியன்று இரவு, வங்கியில் ஏடிஎம்க்கு பணம் நிரப்ப சென்ற வேனில் இருந்த பணத்தை கொள்ளையடித்த நான்கு பேரை பிடிப்பதற்காக நொய்டாவின் எஸ்.டி.எம் கிராஸிங் பகுதியில் காவல்துறை சோதனைச்சாவடியை அமைத்தது.

அங்கு வந்த வெண்ணிற சஃபைர் டிசையர் வண்டி தடுப்பு அரண்களை உடைத்துக் கொண்டு தப்பிக்க முயற்சி செய்தனர். போலீசார் வாகனத்தின் பின் தொடர்ந்தபோது, ஒரு குடியிருப்பு பகுதியின் தடுப்பு சுவரில் மோதிய பிறகு,காரில் இருந்த மூன்று பேர் தப்பிச் சென்றுவிட்டனர்.

ஒருவன் தப்பிச் செல்ல முயன்றபோது போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டதில் சப் இன்ஸ்பெக்டர் காயமடைந்தார். தற்காப்புக்காக போலீஸார் சுட்டத்தில் சுமித் என்ற அந்த நபர் இறந்துவிட்டார்- இந்த என்கவுண்டர் பற்றிய காவல்துறையின் விளக்கம் இதுதான்.

போலீசாரின் கூற்றுப்படி அவர்கள் தேநீர் கடையில் நின்றுக் கொண்டிருந்த சுமித்தை செப்டம்பர் 30ஆம் தேதியன்று குண்டுகட்டாய் தூக்கிச் செல்லவில்லை.

அதை நேரில் பார்த்த கிராம மக்களின் சாட்சியங்கள் பொய். அதோடு அக்டோபர் இரண்டாம் தேதி இரவு, சுமித் தலைமறைவாக இருப்பதாகவும் அவரைப் பற்றிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வெகுமதி அளிப்பதாகவும் சொன்னபோது, சுமித் தலைமறைவாக இருந்தார்.

இந்த விவகாரம் பற்றி மீரட் பிராந்திய காவல்துறைத் தலைவர் பிரசாந்த் குமாரிடம் பேசினோம். சுமித் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டார் என்பதை அவர் அடியோடு மறுக்கிறார்.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையை சிறப்பாக பராமரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக புன்னகையுடன் தெரிவித்த அவர், "2012 முதல் 2017 வரை இந்த காவல் நிலையத்தை நடத்திக் கொண்டிருந்தது குற்றவாளிகள்தான். இங்கு போலீசார் இப்போதுதான் பணியாற்றத் தொடங்கியிருக்கின்றனர்" என்று வெளிப்படையாக கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை saabaar: karam Singh gurjar
Image caption பாஜகவின் வெற்றியை கொண்டாடும் சுமித்

சுமித் விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தின் நோட்டிஸ், நீதிமன்ற வழக்குகள், வழக்கை திரும்பிப் பெறுவதற்காக பேசப்பட்ட பேரங்கள் என பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

"நீதிமன்றத்தை அணுகுவது அவர்களின் உரிமை. குற்றவாளியை என்கவுண்டரில் கொல்வது எங்களுடைய கொள்கை அல்ல.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட சட்டரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது, தற்காப்புக்காக மேற்கொள்ளும் கடைசி உபாயம்தான் துப்பாக்கிப் பிரயோகம்'' என்று அவர் தெரிவித்தார்.

"போலீஸ் யாருக்கும் எந்தவொரு அழுத்தத்தையும் கொடுக்கவில்லை, இது அடிப்படை ஆதாரமற்றது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பினர் இப்படி பேசுவது இயல்பானதே. நீதிமன்றத்தை அணுகுவதும், சிபிஐ விசாரணை கோருவதும் அவர்களின் விருப்பம். நீதிமன்ற விசாரணையில் காவல்துறை மீது தவறு இருப்பதாக தெரியவந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சுமித் குர்ஜர் கொள்ளையடித்துவிட்டு, கொலை செய்துவிட்டு தப்பித்து ஓடினார். மனித உரிமைகள் என்பது மனிதர்களுக்கானது, குற்றவாளிகளுக்கானது அல்ல" என்கிறார் மீரட் பிராந்திய காவல்துறைத் தலைவர் பிரசாந்த் குமார்.

என்கவுண்டர்

மேற்கு உத்தரப்பிரதேசத்தில் குறிப்பாக மீரட் மண்டலத்தில் கடந்த ஒரு வருடமாக ஏன் என்கவுண்டர்கள் அதிகரித்துவருகிறது என்ற கேள்வி எழுகிறது.

இதை தெரிந்து கொள்வதற்காக மீரட் மண்டலத்தில் பல போலீஸ் அதிகாரிகளுடன் பேசினோம். மாநில எண்கவுண்டர் சிறப்புக் குழுவில் நீண்ட காலமாக இணைந்து பணியாற்றும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தனது பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

பல நேரங்களில் 'சிறப்பாக செயல்படும் அதிகாரி' என்ற பெயரை வாங்குவதற்காக காவல்துறையில் உள்ள சில அதிகாரிகள் என்கவுண்டர்கள் நடத்துவார்கள் என்று அதிர்ச்சியான தகவலை தெரிவித்தார்.

"சுஷீல் மூஞ்ச், பதன் சிங் பதோ போன்ற மிகப்பெரிய 'ஆசாமி'களின் பெயரில் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டதே? அவர்களுக்கு எதாவது நடந்ததா?

ஆனால் திருட்டு அல்லது வழிப்பறி போன்ற சிறிய அளவிலான குற்றங்களில் ஈடுபடும் உள்ளூர் ரெளடிகளை என்கவுண்டரில் கொல்லும் போக்கு அதிகரித்திருக்கிறது.

ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டவர்கள் எல்லாம் என்கவுண்டர்களில் தாக்கப்படுகிறார்கள்.

''என்கவுண்டர் நடத்தும் போக்கும், போட்டியும் முதன்முதலில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது.

அப்போதைய காவல்துறை தலைவர் பிர்ஜ்லால், என்கவுண்டர் செய்பவர்களுக்கு பதவி உயர்வும், பரிசும் வழங்கப்படும் என்று அறிவித்தார். இப்போது பாஜகவின் ஆட்சி வந்தபிறகும் அதே நடைமுறை தொடர்கிறது.''

''இதன்பிறகு என்கவுண்டர் நடத்தி அரசின் நன்மதிப்பை பெற வேண்டும் என உயரதிகாரிகளிடையே போட்டி மனப்பான்மை தொடங்கிவிட்டது.

இந்த மனப்போக்கு மேலதிகாரிகளிடம் இருந்து காவல்துறையின் கீழ்மட்டம் வரை பரவிவிட்டது. காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பணியில் இருப்பவருக்கு ஒரு என்கவுண்டருக்கு பிறகு காவல்நிலைய பொறுப்பாளர் என பதவி உயர்வு கொடுக்கப்பட்டால் வேறு என்ன நடக்கும்?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

படத்தின் காப்புரிமை PRIYANKA DUBEY/BBC
Image caption மின்சாரத் துறை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஷர்மா

அரசியல் எதிர்ப்பு

சுமித், பாஜக ஆதரவாளர் என்று அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள். "என் மகன் மீது ஏதாவது சந்தேகம் இருந்தால், வேறு எதாவது நடவடிக்கை எடுத்திருக்கலாம், அவனை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றிருக்கலாம்.

துடிப்பான இளைஞனான எங்கள் சுமித்தை கொன்றுவிட்டது இந்த அரசு. பாக்பத் மற்றும் நொய்டாவில் உள்ள குர்ஜர் பஞ்சாயத்தை கூட்டுவேன். தேர்தலில் இங்குள்ள 20 கிராமங்களில் இருந்து பாஜகவுக்கு ஒரு வாக்குகூட விழாமல் தடுப்போம்.

மக்களிடம் வாக்கு சேகரிக்க அவர்கள் வந்தால் கல்லெடுத்து அடிப்போம்" என்று சுமித்தின் தந்தை கர்ம் சிங் ஆவேசமாக பேசுகிறார்.

அரசு தரப்பு

சிர்சடாவில் குர்ஜர்களின் அரசியல் ரீதியிலான எதிர்ப்பு பற்றி மாநில அரசின் மின்துறை அமைச்சர் மற்றும் மாநில அரசின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் சர்மாவிடம் கேள்வி எழுப்பினோம்.

"மாநிலத்தில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே மாநில அரசின் முதல் கடமை" என்று அவர் கூறினார்.

இதற்கு முன்னர் இங்கு சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் காங்கிரஸ் என ஆட்சியில் இருந்த கூட்டணி கட்சிகள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டன.

எங்கள் அரசு பாதுகாப்பு அளிப்பது குற்றவாளிகளுக்கு அல்ல, மக்களுக்கே. குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும், போலிஸ் அதற்கேற்ற முறையில் பதிலளிக்கும். தவறு செய்தவர்கள் யாரும் மன்னிக்கப்பட மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: