இலங்கை பிரதமராக பதவியேற்ற ராஜபக்ஷ - தமிழக அரசியல் கட்சிகளின் கருத்து என்ன?

இலங்கை பிரதமராக பதவியேற்ற ராஜபக்ஷ

இலங்கையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்ற நிகழ்வு தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் ராஜபக்ஷவின் பதவியேற்பு தமிழர்களுக்கு எதிரானதாக இருக்கும் என சிலர் கருதும் வேளையில், ஆளும் அதிமுக மட்டும் இதுவரை ஆதிகாரபூர்வமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

2015 தேர்தலுக்குப் பிறகு, பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்கவேவை, ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன திடீரென பதவியில் இருந்து நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக வெள்ளிக்கிழமை நியமித்தார். இதனால் இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதில் குழப்பம் நீடிக்கிறது.

இந்நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை விவகாரத்தில் இந்திய அரசாங்கம் எடுத்த முடிவும் ஒரு காரணம் என்ற எண்ணமும் எழுந்துள்ளது.

தமிழத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள திமுக, இலங்கை விவகாரத்தை மத்தியில் ஆளும் பாஜக சரியாக கையாளவில்லை என கடுமையாக விமர்சித்துள்ளது.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் அதிர்ச்சியடையும் வகையில் இலங்கையின் பிரதமராக திடீரெனப் பதவியேற்று இருக்கிறார் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ என்று கூறியுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின், இலங்கை அரசில் நடைபெற்றுள்ள இந்தத் தலைகீழ் மாற்றங்கள், ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கும் பதற்றத்தையும், அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

''ஒரே இரவில் இலங்கை அரசில் நடந்துள்ள மாற்றங்கள் பல மர்மங்களை உள்ளடக்கிய நிலையில், அவை அனைத்துமே வாழ்வுரிமை மறுக்கப்பட்டும் சிதைக்கப்பட்டும் வதைபடுகின்ற ஈழத்தமிழர்களுக்கு பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கியுள்ளன. அதுபோலவே தமிழக மீனவர்களையும் கவலை கொள்ள வைத்துள்ளது. எனவே இந்தியாவை ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும் அதன் வெளியுறவுத்துறையும் தமிழர்கள் நலன் கருதியும் இந்திய குடிமக்களான தமிழக மீனவர்களின் பாதுகாப்பு கருதியும் இலங்கை அரசியல் பிரமுகர்களின் இந்திய வருகை குறித்தும், ரா உளவுப் பிரிவு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்தும் தெளிவுபடுத்த வேண்டும்,'' என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், FACEBOOK/MK STALIN

அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் கருத்து தெரிவிக்காத நிலையில், அமைச்சர் ஜெயகுமாரிடம் பிபிசி தமிழ் கேட்டபோது,அதிமுகவின் உயர்மட்ட குழு கூடி முடிவுசெய்த பிறகுதான் கருத்து தெரிவிக்க முடியும் என்று கூறினார். ''இந்த விவகாரம் மிகவும் முக்கியமானது என்பதாலும், அரசியல் கொள்கை முடிவு தொடர்பானது என்பதாலும் உயர்மட்ட குழுகூடிதான் எந்த கருத்தையும் சொல்லமுடியும்,''என்று தெரிவித்தார்.

ராஜபக்ஷ பதவியேற்றுள்ளது ஈழத்தமிழர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல, இந்தியாவுக்கும் எதிரானது என்கிறார் ஈழத்தமிழர் உரிமைகளுக்காக போராடிவரும் பழ நெடுமாறன். ''சிங்கள தலைவர்களுக்கு மத்தியில் பகைமை இருந்தாலும், ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்து கொள்வார்கள். இந்தியா வெளியுறவுத்துறை விவகாரங்களைக் கையாளுவதில் படுதோல்வி அடைந்துவிட்டது என்பதை இந்த நிகழ்வு உறுதிபடுத்திவிட்டது. இலங்கை பிரச்சனையைப் பொருத்தவரை பாஜக மற்றும் காங்கிரஸ் என இரண்டு கட்சிகளும் ஒருவிதமான நிலைப்பாட்டைத்தான் எடுத்திருக்கிறார்கள். தற்போது சீனா வெற்றிபெற்றுள்ளது,''என்கிறார் பழநெடுமாறன்.

மேலும் இந்த நேரத்தில் ஈழத்தில் உள்ள தமிழ்கட்சிகள் ஒன்றுபட்டு செயல்படவேண்டும் என்றும் உலகத்தமிழர்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்றும் கூறுகிறார் பழ நெடுமாறன்.

இலங்கையில் இனப்படுகொலையாளிகள் கூட்டணி சேர்ந்திருப்பதை இந்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல ராஜபக்ஷவின் நியமனம் அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ள அன்புமணி ராமதாஸ், தனது அறிக்கையில் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்று சாதாரணமாக கடந்துபோய்விட முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும், இலங்கை அதிபராக மஹிந்த இருந்தபோது, இந்தியா அவருக்கு உதவினாலும், அவர் சீனாவுக்கு மட்டுமே ஆதரவாக இருந்தார் என்று நினைவுகூர்ந்தார்.

''ரணில் விக்கிரமசிங்கவே இந்தியாவின் ஆதரவாளர் என்று கூறப்படும் நிலையில், அவர் பதவி நீக்கப்படுவதை இந்தியா முன்கூட்டியே அறிந்து ராஜிய நடவடிக்கைகளின் மூலம் தடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாமல் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை இந்தியா தனக்குத் தானே தேடிக்கொண்டிருக்கிறது,''என்று கூறி அன்புமணி மத்திய பாஜகவின் நடைமுறையை விமர்சித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :