நெருப்புடன் விளையாடாதீர்கள் - அமித் ஷா; பா.ஜ.க ஆதரவில் இயங்கவில்லை - பினராயி விஜயன்

அமித்ஷா

நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகின்றோம்.

தினமணி: 'நெருப்புடன் விளையாட வேண்டாம்'

கேரளத்தில் ஐயப்ப பக்தர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்துவதை சகித்துக் கொண்டிருக்க முடியாது என்று கூறிய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, நெருப்புடன் விளையாட நினைத்தால் கடுமையான விளைவுகளை முதல்வர் பினராயி விஜயன் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

சபரிமலையில் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் அவர் கூறினார். போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஐயப்ப பக்தர்களை போலீஸார் ஒடுக்கி வருகின்றனர். இந்த விவகாரத்தில், கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி காவல் துறையைப் பயன்படுத்துகிறது.

ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் உள்பட சுமார் 2,000 பக்தர்கள் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று அவர் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

அமித் ஷாவின் கருத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடி கொடுத்துள்ளார் என்று கூறும் அந்நாளிதழ் செய்தி, "பாஜகவின் ஆதரவில் மாநில அரசு இயங்கவில்லை. இந்த அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு."

ஜனநாயக சிந்தனை கொண்டவர்கள் அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். மேலும், அவரது கருத்து உச்சநீதிமன்றம் மற்றும் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும்' என்று விஜயன் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'விலகியவர்களே வாருங்கள்'

18 எம்.எல்.ஏ. தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்த இரண்டு தினங்களில் கட்சி மீது மனகசப்பில் இருக்கும் அனைவருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியு, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் அழைப்பு விடுத்துள்ளனர். தவறான வழிக்காட்டலால் கட்சியைவிட்டு விலகியவர்கள் அனைவரும் மீண்டும் கட்சிக்கு திரும்பலாம் என அவர்கள் இருவரும் கூறியதாக விவரிக்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

"அன்புடனும், நேசத்துடனும் தாங்கள் அழைக்கிறோம்" என்று பழனிசாமியும், பன்னீர்செல்வமும் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது அந்நாளிதழ்.

இந்து தமிழ்: 'கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்'

கீழடியில் ஒரு ஏக்கர் பரப்பில் ரூ.2 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் அதற் கான நிதியையும் இடத்தையும் தமிழக அரசு ஒதுக்கிவிட்டதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

"கீழடியில் 13 ஆயிரத்துக்கும் அதிகமான பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இதில் பாதி எங்களிடம் உள்ளது. மீதிப் பாதி மத்திய தொல்லியல் துறையினரிடம் உள்ளது. இவற்றை காட்சிப் படுத்த ரூ.2 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்க உள்ளோம். இதற்காகத் தமிழக அரசு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்கி யுள்ளது. இவற்றை வகைப்படுத்து வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. "

"திருவள்ளூர் மாவட்டம், பட்டரைப் பெரும்புதூரில் 1 லட்சத்து 30 ஆயிரம் ஆண்டு களுக்கு முன் மனிதன் இருந்த தற்கு உரிய சான்றுகள் கிடைத் துள்ளன. இங்கிருந்துதான் ஆப் பிரிக்காவுக்கு மனிதர்கள் சென்றி ருக்கிறார்கள் என்பதற்கெல்லாம் சான்றுகள் கிடைத்துள்ளன. மத்திய தொல்லியல் துறை சார்பில் 125 அகழ் வாய்வுகளும் மாநிலத்தில் 40 அகழ் வாய்வுகளும் சில பல்கலைக்கழகங் கள் 50 அகழ்வாய்வுகளையும் செய்துள்ளன."

"அகழ்வாராய்ச்சிகள் மூலம் 1 லட்சத்து 22 ஆயிரம் பொருட்கள் கிடைத்துள் ளன. இதில் 36 அருங்காட்சியகங் கள் மூலம்3-ல் ஒரு பங்குதான் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. அகழ்வா ராய்ச்சியில் கிடைத்த அரும் பொருட்களைக் காட்சிப்படுத்த மேலும் 4 அருங்காட்சியகங்கள் விரைவில் தொடங்கப்படும்," என்று கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

'அர்ஜுன் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு'

கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜுன் மீது அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் பெங்களூரு போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்கிறது இந்து தமிழ் நாளிதழின் மற்றொரு செய்தி.

"அண்மையில் சமூக வலை தளங்களில் பரபரப்பாக பேசப் படும் 'மீ டூ' இயக்கம் மூலம், கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் தெரிவித்தார். இதற்கு அர்ஜுன் மறுப்பு தெரிவித்த நிலையில், ஸ்ருதி தன்னிடம் பணம் பறிக்க முயல்வதாக குற்றம்சாட்டினார். இதனிடையே கன்னட திரைப்பட வர்த்தக சபை அர்ஜுன் மற்றும் ஸ்ருதி ஆகிய இரு தரப்பையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.

இதையடுத்து அர்ஜுன் தன் மீது பாலியல் புகார் தெரிவித்த நடிகை ஸ்ருதியிடம் ரூ. 5 கோடி கேட்டு பெங்களூரு குடிமையியல் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடுத்தார். இதற்கு வழக்கை சட்டப்படி எதிர்கொண்டு, ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்போவதாக ஸ்ருதி பதிலளித்தார். இந்நிலையில் அர்ஜுனின் மேலாளர் பிரஷாந்த் சம்பர்கி, சமூக வலைத்தளங்களில் ஸ்ருதி, அர்ஜுன் பெயரில் போலி கணக்குகள் தொடங்கி, தவறாக பயன்படுத்துவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகை ஸ்ருதி பெங்களூரு கப்பன் பூங்கா காவல் நிலையத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்தார். அதில், ''2015-ம் ஆண்டு நவம்பரில் 'நிபுணன்' திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது அர்ஜுன் என்னிடம் காட்சிக்கு தேவையில்லாத அளவுக்கு நெருக்கமாக நடித்தார். பாலியல் ரீதியாக என்னை சீண்டினார். இதனால் கடும் மன உளைச்சலுக்காக ஆளானேன்.

நான் புதுமுக நடிகையாக இருந்ததால் அப்போது பாலியல் தொல்லைக் குறித்து வெளிப் படையாக கூறமுடியவில்லை. தற்போது 'மீ டூ' மூலமாக சமூக வலைதளத்தில் புகார் தெரிவித்தேன். என்னைப் போலவே 4 பெண்கள் அர்ஜுன் மீது பாலியல் புகார் தெரிவித் துள்ளனர். எனது புகாரின் காரண மாக அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தினர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்'' என குறிப்பிட்டுள்ளார்.

நடிகை ஸ்ருதி ஹரிஹரனின் புகாரின் பேரில் போலீஸார் நடிகர் அர்ஜுன் மீது இந்திய தண்டனை சட்டம் 354 ஏ, 509, 506, 354 ஆகிய 4 நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கில் விரைவில் அர்ஜுனி டம் விசாரிக்க முடிவு செய்துள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தினத்தந்தி: 'அரசு மருத்துவக் கல்லூரிகளில் எத்தனை காலியிடம் உள்ளது?'

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் எத்தனை இடங்கள் உள்ளன?, அதில் தற்போது எத்தனை இடங்கள் காலியாக உள்ளன? என்பது உள்ளிட்ட விவரங்களை இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதாக கூறுகிறது தினத்தந்தி நாளிதழ்.

"இந்திய மருத்துவ கவுன்சில் சுட்டிக் காட்டிய குறைகளை நிவர்த்தி செய்யாததால், காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பொன்னையா ராமஜெயம் மருத்துவக் கல்லூரியில், மாணவர்களை சேர்க்க தடை விதிக்கப்பட்டது.

இதனால் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், தங்களை வேறு கல்லூரிகளுக்கு மாற்றம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், தமிழகத்தில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எத்தனை இடங்கள் உள்ளன?, அதில் எத்தனை மாணவர்களை சேர்க்க முடியும்? என்பது குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இந்தநிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எச்.ராஜசேகர், பல தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இதுபோன்ற பிரச்சினைகள் நிலவி வருவதால் பாதிக்கப்பட்ட மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ப்பதற்கு பரிந்துரைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் எத்தனை இடங்கள் உள்ளன?, அதில் தற்போது எத்தனை இடங்கள் காலியாக உள்ளன? என்பது உள்ளிட்ட விவரங்களை இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை வருகிற நவம்பர் 16-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :