வைரமுத்துவை அழுக்குப்படுத்த நினைக்கிறவர்கள் அனுதாபத்திற்குரியவர்கள் - கபிலன் வைரமுத்து

கபிலன்

பட மூலாதாரம், Facebook/Kabilan Vairamuthu

பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்துவால் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக மீ டூ என்ற தலைப்பில் பதிவிட்டதற்கு, தற்போது வைரமுத்துவின் இளைய மகன் கபிலன் வைரமுத்து தனது தந்தை மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சட்டரீதியாக பதிவாகட்டும் என்றும், உண்மை வெல்லட்டும்என்றும் தெரிவித்துள்ளார்.

வைரமுத்து மிகவும் ஏழ்மையான பின்னணியில் இருந்து முன்னேறி வந்த விவரங்களை பகிர்ந்துள்ள கபிலன் வைரமுத்து, தனது தந்தை மீது சுமத்தப்படும் பழிகளுக்கு அரசியல் உள்நோக்கம் இருப்பதாக சிலர் சொல்கிறார்கள் என்றும், அப்படி இல்லை என்றும் சிலர் வாதாடுகிறார்கள் என்பதாலும், அது எப்படி இருந்தாலும் அவை சட்டரீதியாக பதிவாகட்டும், உண்மை வெல்லட்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

"மேலும் இந்தப் பிரச்சனையை ஒரு பிரம்மாண்டமான பொழுதுபோக்காகச் சித்தரித்து நாட்டில் நிகழும் வேறு பல பிரச்சனைகளில் இருந்து நம்மை முற்றிலும் திசை திருப்பும் முயற்சிகளுக்கு யாரும் இடம் கொடுக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்றும் கூறியுள்ளார்.

மீ டூ விவாதம் தொடங்கி இத்தனை நாட்களாக ஏன் எதுவும் பேசவில்லை என்பதை விளக்கியுள்ள கபிலன், ''எதையும் விரிவாக எழுதுகிற மனநிலை சில நாட்களாக வாய்க்கவில்லை. அதையும் மீறி இந்தப் பதிவு அவசியமென கருதுகிறேன்." என்று பதவிட்டுள்ளார்.

எந்த ஆதாரமும் தொலைநோக்கமும் இல்லாமல் பொதுவெளியில் ஆண் பெண்ணின் மீதும், பெண் ஆணின் மீதும் பழிசொல்லும் போக்கு மிகவும் அபாயகரமானது என்று தெரிவித்துள்ள அவர், ''மீ டு (Metoo) என்ற இந்த உலகளாவிய அமைப்பு எதை நோக்கியது, அது எங்கே திசை மாறுகிறது என தீர்க்கமாகச் சொல்லும் பக்குவம் எனக்கில்லை. ஆனால் பெண்ணுரிமைக்காக நம் முன்னோடி தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும் அவர்களின் கருத்தியலும் இதுபோன்ற அமைப்புகளைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுமென நம்புகிறேன்.''என்கிறார்.

வைரமுத்துவின் எழுத்தை விட அவரது வாழ்க்கை பெருமை வாய்ந்தது, பாடம் நிறைந்தது, அவரது பெருமைகளை அழுக்குப்படுத்த நினைக்கிறவர்கள் அனுதாபத்திற்குரியவர்கள் என்று தெரிவித்துள்ள அவர், இளைஞர்களுக்கு ஒரு தன்னம்பிக்கை முன்னுதாரணம் வைரமுத்து எனவும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :