டெல்லியில் தமிழக மாணவி ஸ்ரீமதி தூக்குப்போட்டு தற்கொலை - காரணம் என்ன?

டெல்லியில் தமிழக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - காரணம் என்ன?

நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: 'டெல்லியில் தமிழக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை'

டெல்லியில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படிக்கச் சென்ற தமிழக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

"ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 45). இவருடைய மனைவி தேவி (43). இவர்களுடைய மகள் ஸ்ரீமதி (20), மகன் வருண்ஸ்ரீ (16).

ஸ்ரீமதி கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. படித்து முடித்தார். ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத விரும்பியதால் அவருடைய பெற்றோர் ஸ்ரீமதியை டெல்லியில் உள்ள ஒரு ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் 6 மாதங்களுக்கு முன் சேர்த்துவிட்டனர். அந்த பயிற்சி மையத்தின் அருகே உள்ள மாடி கட்டிடத்தில் அறை வாடகைக்கு எடுத்து ஸ்ரீமதி தங்கியிருந்தார். அவருடன் நெல்லையை சேர்ந்த மாணவி ஒருவரும் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஸ்ரீமதியுடன் தங்கியிருந்த மாணவி வெளியில் சென்றுவிட்டு சிறிது நேரம் கழித்து அறைக்கு திரும்பினார். அப்போது ஸ்ரீமதி அறையில் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி ஐ.ஏ.எஸ். பயிற்சி மைய நிர்வாகிகளுக்கு அவர் தகவல் கொடுத்தார்.

அவர்களும், அந்த கட்டிடத்தில் தங்கியிருந்தவர்களும் அங்கு வந்தனர். இதுகுறித்து டெல்லி கரோல்பாக் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் ஸ்ரீமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராம்மனோகர் லோகியா ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர் என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

”ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. டெல்லியில் தங்கியிருந்து படிப்பதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் பெற்றோரிடம் கூறிவந்ததாக தோழிகள் தெரிவித்தனர்.

இது குறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். ஸ்ரீமதியின் அறையில் இருந்து ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில், தற்கொலை செய்ய தான் எடுத்த முடிவை குறிப்பிட்டு மன்னிக்கும்படி வேண்டியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.” என்கிறது அச்செய்தி.

பட மூலாதாரம், இந்து தமிழ்

தினமணி: "சற்று ஏமாற்றம்தான். ஆனால் வருத்தம் இல்லை"

பட மூலாதாரம், Getty Images

இபிஎஸ்-ஓபிஎஸ் அணியுடன் என்றுமே சேர வாய்ப்பில்லை என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

"அதிமுகவில் 90 சதவீதம் தொண்டர்கள் தங்கள் பக்கம் இருப்பதாக இபிஎஸ்-ஓபிஎஸ் இருவரும் கூறுகின்றனர். ஆனால், எங்கள் அணியில் இருப்பவர்களைத் திரும்ப வேண்டும் என அழைப்பு விடுக்கின்றனர்.இது அவர்களது பயத்தையும், பலவீனத்தையும் காட்டுகிறது.

18 சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர்களை அவமானப்படுத்திவிட்டு, நீர் அடித்து நீர் விலகாது எனக் கூறும் அவர்களிடம் சென்றால் ஆசிட் அடிப்பதற்கு சமம். என்றைக்கும் அவர்களுடன் நாங்கள் சேரும் வாய்ப்பு இல்லை. தேர்தலின்போது மக்கள் ஆதரவு யாருக்கு எனத் தெரியும். 18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு சற்று ஏமாற்றம்தான். ஆனால் வருத்தம் இல்லை என்றார்." என்று கூறியதாக சொல்கிறது அந்நாளிதழ் செய்தி.

"தமிழக முதல்வருக்கு எதிரான டெண்டர் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மடியில் கனமில்லை எனக் கூறுவதிலிருந்து விசாரணைக்கு முதல்வர் பயந்து போயிருக்கிறார் எனத் தெரிகிறது. கோவையில் முதல்வர் என்னை பார்த்து மகானா என பேசியுள்ளார். நான் மகானும் அல்ல, அவர் புனிதரும் அல்ல. ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர், கட்சியில் உறுப்பினராக இல்லாதவரைப் பற்றி பேசுகிறீர்களே என என்னைப் பற்றி முதல்வர் கூறுகிறார். 2016 டிச.2-ஆம் தேதி சசிகலா தலைமையில் பொதுக்குழுவை கூட்டித்தான் என்னை நியமனம் செய்தனர். மேலும் எடப்பாடி பழனிசாமியை முதல்வராகவும், கட்சியில் என்னை துணைப் பொதுச் செயலாளராக சசிகலா தான் நியமித்தார். எங்களது கட்சி விதிப்படி ஒருவரை நியமிப்பது, நீக்குவது ஆகிய உரிமைகள் பொதுச் செயலாளருக்குத் தான் உண்டு.

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அரவக்குறிச்சி தொகுதியில் டெபாசிட் பெற்றால் நான் அரசியலை விட்டே விலகுவதாக கரூரைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார். செந்தில்பாலாஜிக்கு ஒரு காலத்தில் பையை தூக்கிக் கொண்டு இருந்தவர், இப்போது பதவி ஆசையில் இப்படி பேசிக்கொண்டிருக்கிறார்.

அதிமுவினர் ஒற்றுமையாக இருப்போம் என இபிஎஸ், ஓபிஎஸ் அழைப்பு விடுத்திருப்பது தோல்வி பயம் தான் காரணம் என்பது வெளிச்சமாகியுள்ளது. 90 சதவீதத் தொண்டர்கள் எங்களிடம் இருக்கிறார்கள்." என்று அவர் கூறியதாகவும் விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

இந்து தமிழ்: 'உண்மையான பிரச்சினைகளை தவிர்க்கவே வங்கிகள் இணைப்பு நடவடிக்கை'

பட மூலாதாரம், Getty Images

வங்கிகள் இணைப்பு நடவடிக்கை என்பது உண்மையான வங்கிப் பிரச்சினைகளைத் தவிர்க்கவும் நாட்டின் கவனத்தை திசை திருப்பவும் மேற்கொள்ளப் படுகிறது என வங்கி ஊழியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

"வங்கிகளை இணைப்பது மற்றும் அவற்றை தனியார் மயமாக்குவது என்பதை, வங்கிகளை சீரமைக்கும் கொள்கையில் மத்திய அரசு கடந்த 25 ஆண்டுகளாக ஒரு அஜெண்டாவாக கடைப்பிடித்து வருகிறது.

இதற்காக, கடந்த 1991-ம் ஆண்டு அமைக்கப்பட்ட நரசிம்மன் கமிட்டி முதல் கடந்த 2016-ம் ஆண்டு அமைக் கப்பட்ட கியான் சங்கம் வரை தொடர்ச்சியாக பல்வேறு கமிட்டிகள் அமைக்கப்பட்டன. அவை அனைத்தும் வங்கிகளை இணைப்பது மற்றும் தனியார் மயம் செய்ய வேண்டும் என ஒரே பல்லவியை பாடி வருகின்றன. இதை வங்கி ஊழியர் சங்கம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது." என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார் என்கிறது அச்செய்தி.

மேலும், "பரோடா வங்கி, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய 3 வங்கிகளை இணைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஏற்கெனவே, கடந்த ஆண்டு பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகள் இணைக்கப்பட்டதால் எவ்வித பயனும் ஏற்பட வில்லை. மாறாக, வங்கிக் கிளைகள் மூடப்பட்டதால் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால், புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை.

மேலும், வங்கிகளின் வர்த் தகம் பாதிக்கப்பட்டதோடு, வாராக் கடன் பிரச்சினையில் வங்கிகள் கவனம் செலுத்த முடியாமல், அப்பிரச்சினை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிகளவு சேவைக் கட்டணம் மற்றும் அபராதம் விதிப்பது அவர்களுக்கு பெரிய சுமையை ஏற்படுத்தியுள்ளது.

வங்கிகள் தற்போது வாராக் கடன் சுமைகள் மற்றும் நஷ்டம் உள்ளிட்ட பெரிய சவால் களை சந்தித்து வருகின்றன. எனவே, வாராக் கடன்களை வசூலிப்பதுதான் இப்பிரச்சினைக் குத் தீர்வாக அமையும். அத்து டன், வங்கிகள் இணைப்பு நட வடிக்கை என்பது, உண்மையான வங்கிப் பிரச்சினைகளைத் தவிர்க்கவும், நாட்டின் கவனத்தை திசை திருப்பும் வகையிலும் அமைந்துள்ளது." என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'காஷ்மீர் கிளர்ச்சி புதிய பரிணாமம்'

கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் காஷ்மீரில் இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் மூவர் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பால் துல்லிய துப்பாக்கித் தாக்குதல் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டது காஷ்மீர் கிளர்ச்சி புதிய பரிணாமத்தை எட்டி இருப்பதை காட்டுகிறது என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

செப்டம்பரில் நடைபெற்ற துல்லிய துப்பாக்கித் தாக்குதல்களின்போது, சம்பவ இடத்துக்கு அருகே உள்ள சிறு குன்றுகளின் மீதிருந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இரவுநேரத்திலும் இலக்கை குறிவைக்கும் வசதிகள் கொண்ட துப்பாக்கிகள் அவர்களிடம் இருப்பதாக தெரிகிறது என்று ஒரு அதிகாரி கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :