நரேந்திர மோதி-ஷின்சோ அபேவின் சந்திப்புகளால் இந்தியா பெற்ற நன்மைகள் என்ன?

  • பிபிசி இந்தி சேவை
  • புதுடெல்லி
மோதி

பட மூலாதாரம், Getty Images

இந்திய பிரதமர் நரேந்திர மோதி அரசுமுறைப் பயணமாக சனிக்கிழமையன்று ஜப்பானுக்கு சென்றுள்ளார். அங்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை திங்கள்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

2014ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோதி, அபேயை 12வது முறையாக சந்தித்தார் இரு தலைவர்களும் கலந்து கொள்ளும் ஐந்தாவது உச்சி மாநாடு இது.

இரு நாடுகளுக்கும் இடையில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது, பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவது போன்றவை முக்கியமாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

அதோடு, இரு நாடுகளுக்கும் இடையில் செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ், ஆளில்லா விமானம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான தொழில்நுட்ப விஷயங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஜப்பானின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் பிரதமர் நரேந்திர மோதியும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் ஆலோசனை நடத்தினர்.

ஜப்பான் பயணத்திற்கு முன் டிவிட்டரில் செய்தி வெளியிட்ட பிரதமர் மோதி, 'இது ஷின்சோவுடனான என்னுடைய 12வது சந்திப்பு' என்று தெரிவித்திருந்தார்.

'கீழை நாடுகளை நோக்கிய கொள்கை'யில் பொருளாதார மற்றும் தொழில்நுட்பத் துறையில், ஜப்பான், இந்தியாவுடைய நம்பிக்கைக்குரிய கூட்டாளி என்றும் மோதி குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

மோதியின் ஜப்பான் பயணம் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது?

கடந்த வாரம்தான் அரசுமுறை பயணமாக சீனாவுக்கு சென்று திரும்பியிருக்கிறார் ஷின்சோ அபே என்பதால், இந்தியப் பிரதமரின் தற்போதைய ஜப்பான் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

மலாயா பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் டாக்டர் ராகுல் மிஸ்ராவின் கருத்துப்படி, "இந்தியா, கடந்த இரு ஆண்டுகளாக டோக்லாம் பிரச்சனை தொடர்பாக சீனாவை புதிய கோணத்தில் அணுகுகிறது. இந்தியாவும், ஜப்பானும் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதைத் தவிர, இந்தியா-பசிபிக் பிராந்தியத்தில் உத்தி ரீதியிலான ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளன".

"இரு நாடுகளும் துரித கதியில் பரஸ்பரம் நெருங்கி வருகின்றன. ஆசியாவின் மிக சக்தி மிக்க நாடுகளாக சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா இருப்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டிருந்தாலும், சீனா ஒரு சவால் மிகுந்த நாடாகவே பார்க்கப்படுகிறது. உலக விவகாரங்களில் முக்கிய பங்காற்ற விரும்பினால், இந்தியவும் ஜப்பானும் நெருக்கமாவது அவசியமானது" என்கிறார் பேராசிரியர் டாக்டர் ராகுல் மிஸ்ரா.

பட மூலாதாரம், Getty Images

மோதி-அபே சந்திப்புகளால் இந்தியாவுக்கு கிடைத்த நன்மை என்ன?

2014இல் இந்தியப் பிரதமராக மோதி பதவியேற்ற பிறகு, அவர் மூன்றாவது முறையாக ஜப்பான் பயணம் மேற்கொண்டுள்ளார். 2014, 2015 மற்றும் 2017 என, ஷின்சோ அபே மூன்று முறை இந்தியா வருகை தந்துள்ளார்.

இரு பிரதமர்களும் 11 முறை சந்தித்துள்ள நிலையில் அதன் பலனாக இந்தியாவுக்கு கிடைத்தது என்ன?

"சிறப்பு மூலோபாய மற்றும் உலகளாவிய கூட்டாண்மை (Special Strategic Global Partnership). இது, மோதி தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு ஏற்பட்ட முன்னேற்றம். 'மேக் இன் இண்டியா' என்ற பெயரில் இந்தியாவிலேயே தயாரிப்பது என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஜப்பானுடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்ட பல திட்டங்கள் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதால், பிரச்சனை இந்தியாவின் தரப்பில் தான் உள்ளது. ஆனால் ஜப்பான் இந்த திட்டம் தொடர்பாக மிகவும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்குகிறது" என்று ராகுல் மிஸ்ரா கூறினார்.

"15 பில்லியன் முதலீட்டிலான புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அதன் பெருமை மோதி அரசுக்கே சேரும். வங்கதேசம், நேபாளம், இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளும் இந்தத் திட்டத்திற்கு தேவையான முதலீட்டில் பங்களிக்கலாம் என்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது ஒரு பொருளாதார ரீதியிலான கூட்டுறவாக பார்க்கப்பட வேண்டும். இந்தியாவின் பலவீனத்தை குறைக்க ஜப்பான் உதவி செய்கிறது. கடந்த 70 ஆண்டுகளில் வரலாற்றில் நடந்திராத விஷயமாக, இந்தியப் பெருங்கடலில் தனக்கு இருக்கும் ஓரளவு செல்வாக்கை காப்பாற்றிக் கொள்வதற்காக இந்தியாவில் முதலீடு செய்வதற்கு தயாராக இருக்கிறது ஜப்பான்" என்று தெரிவித்தார் ராகுல் மிஸ்ரா.

பட மூலாதாரம், PTI

இரண்டு தலைவர்களும், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் பற்றி கலந்தாலோசித்தார்கள் என்பதோடு, இந்திய-பசிபிக் பிராந்தியம் தொடர்பான விஷயங்களையும் அவர்கள் கலந்தாலோசித்தார்கள்.

"இந்திய கடற்படை மற்றும் ஜப்பானின் ராணுவம் இடையே, ஆயுத பரிமாற்றம் மற்றும் எரிபொருள் நிரப்புவது தொடர்பான ஒப்பந்தம் மிகவும் முக்கியமானது. அடுத்து வரும் ஓரிரண்டு ஆண்டுகளில் இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அது இந்திய கடற்படைக்கு மிகவும் நன்மை பயப்பதாக இருக்கும்" என்று சொல்கிறார் பேராசிரியர் டாக்டர் ராகுல் மிஸ்ரா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :