“மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததற்கு யார் காரணம்?” - நிர்மலா தேவி வாக்குமூலம்

நிர்மலா தேவி

பட மூலாதாரம், Facebook

நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: 'மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததற்கு யார் காரணம்?'

"மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததற்கு யார் காரணம்?" என்ற தகவல் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் நிர்மலா தேவி அளித்த வாக்குமூலம் வழியாக தற்போது வெளியாகியுள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

"இந்த ஆண்டு (2018) பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி தேர்வுத்தாள் திருத்தும் பணிக்கான அழைப்பு உத்தரவு எனக்கு வந்தது. கல்லூரி செயலாளர் அனுமதியுடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு நான் வந்தேன். அந்த சமயத்தில் நான் அங்கிருந்த முருகனை சென்று சந்தித்து, வழிநடத்துவது விஷயமாகவும், புத்தாக்கப் பயிற்சி விஷயமாகவும் அவரிடம் ஞாபகப்படுத்திவிட்டு வந்தேன்.

அதன்பிறகு, மார்ச் 7-ந் தேதி புத்தாக்கப் பயிற்சியில் நான் சேர்வதற்கான உத்தரவு கல்லூரி அலுவலகத்திற்கு வந்தது. அந்த தகவலை பார்த்துவிட்டு, முருகனிடம் நான் செல்போனில் தெரிவித்தேன். நான் அங்கு வரும்போது அவரை நேரில் சந்திப்பதாகவும் கூறினேன். மார்ச் 9-ந் தேதி காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு சென்று புத்தாக்கப் பயிற்சியில் சேர்ந்தேன். மதிய உணவுக்காக அங்குள்ள கேண்டீனுக்கு சென்றபோது, முருகனுக்கு போன் செய்து, அவரை பார்க்க விரும்புவதாக கூறினேன். அவரது துறை அலுவலகத்துக்கு வரச்சொன்னதால், அங்கு சென்றேன்.

அப்போது முருகன் என்னிடம், "என்னம்மா இப்போது நிலைமை சரியாகிவிட்டதா?. கல்லூரி மாணவிகளிடம் பேசி ஏற்பாடு செய்ய முடியுமா?" என்று மீண்டும் கேட்டார். "நான் சில மாணவிகளின் விவரங்களை தெரிந்துவைத்துள்ளேன். அவர்களிடம் பேசி ஏற்பாடு செய்கிறேன்" என்று கூறினேன். அதன்பிறகு, கருப்பசாமி என்பவரின் செல்போன் எண்ணை முருகன் என்னிடம் கொடுத்து, பல்கலைக்கழகத்தில் எந்த உதவி வேண்டுமானாலும் அவரை தொடர்பு கொள்ளுமாறு என்னிடம் கூறினார். கருப்பசாமியை நான் நேரில் சந்தித்து பேசினேன்.

மார்ச் 12-ந் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நான் இருந்தபோது, கருப்பசாமி எனக்கு போன் செய்து, தொலைதூர கல்வி அலுவலகத்துக்கு வரும்படி கூறினார். உடனே, நான் அங்கு சென்றேன். அங்கு கருப்பசாமி இயக்குனரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவருடைய பெயர் எனக்கு தெரியாது.

முருகன் மற்றும் கருப்பசாமி இருவரும் என்னிடம் தொடர்ந்து நேரிலும், போனிலும் கேட்டுக்கொண்டதால், மார்ச் 12-ந் தேதி இரவு முதலே நான் என்னுடைய செல்போனில் இருந்து, எங்கள் கல்லூரி கணிதத்துறையில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு சூசகமாக பல எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். இந்த விஷயத்தை உடன் படிக்கும் மேலும் 3 மாணவிகளுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்டேன்." என்று நிர்மலா சி.பி.சி.ஐ.டியிடம் வாக்குமூலம் அளித்ததாக கூறுகிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், இந்து தமிழ்

தினமணி: 'வி.வி. குழும நிறுவனங்களின் 30 வங்கிக் கணக்குகள் முடக்கம் '

வி.வி. குழும நிறுவனங்களில் நடத்தப்பட்டு வரும் வருமான வரிச்சோதனைக்கு இடையே அக்குழுமத்தின் 30 வங்கிக் கணக்குகள், 24 வங்கி லாக்கர்கள் முடக்கப்பட்டிருப்பதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Facebook

"திருநெல்வேலி மாவட்டம் கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் வி.வி. குழும நிறுவனம், தென் மாவட்ட கடற்கரைகளில் தாதுமணலை எடுத்து, அதில் இருந்து கார்னெட், ரூட்டைல், இலுமனைட், சிலிக்கான் போன்ற தாதுக்களைப் பிரித்தெடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிறுவனம் அரசின் பல்வேறு விதிமுறைகளை மீறியதாக, கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் கடற்கரையில் மணல் எடுக்கத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இந் நிறுவனம் முறைகேடான வழியில் கிடைத்த பணம் மூலம் நூற்பாலை, சர்க்கரை ஆலை, நட்சத்திர ஹோட்டல், கல்குவாரி போன்ற தொழில்களில் முதலீடு செய்வதாக வருமானவரித்துறைக்கு புகார்கள் வந்தன.

அதன் அடிப்படையில் வருமான வரித்துறையினர், வி.வி.குழும நிறுவனத்துக்கு சொந்தமான தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள், உரிமையாளர், உறவினர், அலுவலக அதிகாரிகள் ஆகியோர் வீடுகளில் கடந்த வியாழக்கிழமை திடீர் சோதனை செய்தனர். இச்சோதனை சென்னையில் 38 இடங்கள் உள்பட மொத்தம் 100 இடங்களில் நடைபெற்றது.

இந்த சோதனை சென்னை உள்பட பெரும்பாலான இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இந்நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கீரைக்காரன்தட்டு கிராமத்தில் உள்ள குழுமத்தின் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 10 இடங்களில் திங்கள்கிழமை 5-ஆவது நாளாக இச்சோதனை நீடித்தது.

இதுவரை நடைபெற்ற சோதனைகளில், அந்த நிறுவனத்தில் முறைகேடான வழியில் கிடைத்த பணம் புதிய முதலீடாகப்பட்டிருப்பது தொடர்பான ஆவணங்களும், வருமான வரி ஏய்ப்புத் தொடர்பான ஆவணங்களும் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அத்துடன் கடந்த 2013ஆம் ஆண்டு தமிழகத்தில் தாது மணல் எடுக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், வி.வி. குழும நிறுவனம் தடையை மீறி தாது மணலை எடுத்து, அதில் கனிமங்களை பிரித்தெடுத்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்குக் கடத்தியிருப்பது வருமானவரித் துறைக்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பான ஆவணங்களையும் கைப்பற்றியிருப்பதாக வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஏற்கெனவே கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் வைகுண்டராஜனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், அவரை குழுமத்தின் தலைமையிடம் உள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்துக்கு வர அதிகாரிகள் அழைத்திருந்தனர். அதைத் தொடர்ந்து அவர் திங்கள்கிழமை தலைமையகம் அமைந்துள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்துக்கு சென்றார். அவரிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் தாங்கள் கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.

30 வங்கிக் கணக்குகள் முடக்கம்: அதைத் தொடர்ந்து, வைகுண்டராஜனுக்கு சொந்தமான 30 வங்கிக் கணக்குகளையும், 24 வங்கி லாக்கர்களையும் முடக்கும் நடவடிக்கையை வருமான வரித்துறை எடுத்துள்ளது. பண பரிவர்த்தனை தொடர்பாக வருமான வரித் துறையினரின் விசாரணையில் முடிவு எட்டப்பட்டப் பிறகே வங்கிக் கணக்குகள், வங்கி லாக்கர்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகள் கைவிடப்படும் எனத் தெரிகிறது." என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'காலையிலும் பட்டாசு'

தீபாவளி அன்று காலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதிக்க கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி உள்ளது என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Getty Images

உச்சநீதிமன்றம் அக்டோபர் 23 அளித்த தீர்ப்பில் தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்து இருந்தது. இந்த சூழலில் பண்பாட்டு நம்பிக்கைகளை மேற்கொள் காட்டி காலையிலும் இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி கோரி உள்ளது தமிழ்நாடு அரசு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :