மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: சாத்வி, புரோஹித் உள்ளிட்டவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு

சாத்வி, புரோஹித் உள்ளிட்டவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு

பட மூலாதாரம், PTI

2008- ஆம் ஆண்டு நடந்த மலேகான் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் தன்னை விடுவிக்க வேண்டுமென குற்றம் சாட்டப்பட்ட லெப்டினண்ட் கலோனல்பிரசாத் புரோஹித் தாக்கல் செய்த மனுவை என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்த மனு தள்ளுபடியை அடுத்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரசாத் புரோஹித், சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட 7 பேரின் மீது தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) பயங்கரவாத சதி தொடர்பான குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 2-ஆம் தேதியன்று நடக்கவுள்ளது.

மகாராஷ்ட்ரா மாநில தலைநகரான மும்பையில் இருந்து சற்று தொலைவில் உள்ள மலேகான் நகரில் கடந்த 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதியன்று முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் இரட்டை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 101 பேர் காயமடைந்தனர்.

மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த குண்டுவெடிப்புகளில் ஒரு மோட்டார் சைக்கிள் பயன்படுத்தப்பட்டது என்று கூறப்பட்டது

இந்த வழக்கை முதலில் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்தனர். ராணுவ லெப்டினண்ட் கலோனல் ஸ்ரீகாந்த் புரோஹித் மற்றும் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்டோர் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றனர்.

பட மூலாதாரம், Reuters

2008-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சாத்வி உள்ளிட்டவர்கள் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :