இந்தோனீசிய விபத்து: தீபாவளிக்கு வருவார் என காத்திருந்த இந்திய விமானியின் குடும்பம்

இந்திய விமானி பவ்யா சுனேஜா

பட மூலாதாரம், BHAVYE SUNEJA FACEBOOK

படக்குறிப்பு,

இந்திய விமானி பவ்யா சுனேஜா

"அவர் எங்கள் குழந்தை போல. ஒவ்வொரு தீபாவளிக்கும் அவர் இங்கு வருவார். இந்த முறையும் அவரது வருகைக்காக குடும்ப நபர்கள் காத்திருந்தனர். அவர் இறந்து விட்டார் என்பதை நம்பமுடியவில்லை."

கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தை ஓட்டிய இந்திய விமானி பவ்யா சுனேஜா குறித்து பேசிய அனில் குப்தா, அவரது பக்கத்து வீட்டிலேயே வசிக்கிறார். "எங்கள் முன்தான் அவர் வளர்ந்தார். எப்போது பார்த்தாலும் நன்றாக பேசுவார்."

31 வயதான பவ்யா சுனேஜா உயிரிழந்ததை ஜகார்த்தாவில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. இவர்தான் அந்த விமானத்தின் கேப்டனாக இருந்தார்.

டெல்லியில் உள்ள மயூர் விஹார் பகுதியில் உள்ள அவரது வீடு, இந்த செய்தியினை கேட்டதில் இருந்து சோகத்தில் மூழ்கியுள்ளது. அவர் தீபாவளி பண்டிகைக்காக வீட்டிற்கு வரஇருந்தார். அவரது பெற்றோரும், தங்கையும் பவ்யாவுக்காக காத்திருந்தனர்.

பவ்யாவின் தந்தை குல்ஷன் சுனேஜா, பேச தொடங்குவதற்கு முன்னாலே அவரது கண்களில் நீர் வழிந்தது. மகனுக்காக பிரார்த்தனை செய்து கொள்ளும்படி அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டனர்.

பட மூலாதாரம், AFP

பண்டிகைக்காக காத்திருந்த வீட்டில் ஊடகத்தினர் திரண்டுள்ளனர்.

"மொத்த குடும்பமுமே சோகத்தில் உள்ளது. யாரும் ஏதும் பேசும் நிலையில் இல்லை. குடும்பத்தினர் இந்தோனீசியாவிற்கு செல்ல உள்ளனர். அங்கு சென்ற பிறகே அடுத்து என்ன என்பது தெரிய வரும்" என்று பவ்யாவின் மாமா தெரிவித்தார்.

வாட்ஸ் ஆப் மூலமாகவே தங்களுக்கு தகவல் தெரிந்ததாக கூறுகிறார் பல்யேவின் காலனியில் குடியிருக்கும் கமல் நரூலா.

"பவ்யாவின் தந்தை குல்ஷனை தினமும் சந்திப்பேன். எப்போதாவது பவ்யாவை பற்றி பேசுவார். தனது மகன் செட்டில் ஆகிவிட்டதை நினைத்து மகிழ்ச்சி கொள்வார். மகனை இழந்து தவிக்கும் அவரது வருத்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது" என்று கமல் நரூலா கூறினார்.

அனுபவம் வாய்ந்த விமானி

பவ்யா மிகவும் அனுபவம் வாய்ந்த விமானி. 6,000 மணி நேரம் பறக்கும் நேரம் அனுபவம் அவருக்கு இருந்தது.

ஷின்ஷியா மெலினா, நொய்விடா அங்கில்லா, எல்வியானி சொலிக்ஹா, தமயந்தி சிமரமடா, மேரி உல்யன்டா மற்றும் டேனி மௌலா உள்ளிட்ட 6 கேபின் உறுப்பினர்கள் அவருடன் இருந்தார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :