பிரதமர் நரேந்திர மோதிக்கு சர்தார் பட்டேலை ஏன் பிடிக்கும்?

  • கன்ஷ்யாம் ஷா
  • பிபிசி குஜராத்திக்காக…
சர்தார் பட்டேலை ஏன் பிடிக்கும்?

பட மூலாதாரம், copyrightPHOTO DIVISION

(பிபிசி குஜராத்தியின் ரவி பர்மர், பேராசிரியர் கன்ஷ்யாம் ஷாவிடம் எடுத்த பேட்டியே இக்கட்டுரை. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் அவருடையதே. இதில் உள்ள கருத்துகள் எதற்கும் பிபிசி பொறுப்பல்ல)

பிரதமர் நரேந்திர மோதிக்கும் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கும் உள்ள ஒரு பொதுவான தொடர்பு, குஜராத். நாட்டின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் பட்டேல் மற்றும் தற்போதைய பிரதமர் நரேந்திர மோதி இருவரும் குஜராத்தில் பிறந்தவர்கள்.

2003ஆம் ஆண்டு முதல் பிரதமர் நரேந்திர மோதியின் பேச்சை கேட்டால் நமக்கு தெரியும். அவர் குஜராத் குறித்தும் பட்டேல் குறித்தும் அதிகம் பேசியுள்ளார்.

தனது வலுவான பின்பத்தை காண்பிக்க, மோதிக்கு நன்கு அறிந்த முகம் ஒன்று வேண்டும். அந்த முகம்தான் சர்தார் பட்டேல். ஏனெனில் குஜராத் மக்களின் மனதில் அவரது முகம் நன்கு அறியப்பட்டது.

இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட பட்டேல், கடினமாக முடிவுகள் எடுப்பதற்கும் நல்லாட்சிக்கும் அறியப்பட்டார். சர்தார் பட்டேலின் குணங்கள் தனக்கும் உள்ளதாக மோதி காட்டிக் கொள்ள வேண்டும்.

மோதியின் பேச்சுகளில் சர்தார் பட்டேல்

2006ஆம் ஆண்டிற்கு பிறகே, தனது பேச்சுகளில் பிரதமர் நரேந்திர மோதி, பட்டேல் குறித்து பேச ஆரம்பித்தார். அதற்கு முன்னதாக பெரிதாக பேசியதில்லை.

2004ல் தேசிய ஜனநாயக முன்னணி மத்தியில் ஆட்சி அதிகாரத்தை இழந்தது. இதனையடுத்து தன் அரசியல் தந்திரங்களை மாற்றினார் பிரதமர் நரேந்திர மோதி.

2005-06ஆம் ஆண்டில், மத்தியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி குஜராத் மாநிலத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக கூறி மோதி குற்றஞ்சாட்டினார். காங்கிரஸ் அரசு குஜராத்திற்கு அநீதி அளிக்கிறது என்ற பொருளே மோதியின் முக்கிய பேச்சானது.

சர்தார் பட்டேலுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக நேருவின் குடும்பத்தை விமர்சிக்கத் தொடங்கினார் மோதி. இதனை பெரிய விஷயமாக்கி, நேருவுக்கும் பட்டேலுக்கு இடையே சண்டை இருந்ததாக, பட்டேலுக்கு போதிய மரியாதை அளிக்கப்படவில்லை என்றும் மோதி பரப்புரை ஆற்றினார்.

குஜராத்திற்கு காங்கிரஸ் அநீதி இழைத்துவிட்டது என்பதை பரப்ப சர்தார் பட்டேலின் பெயரை அவர் பயன்படுத்தினார்.

சர்தார் பட்டேல், மோதி மற்றும் இந்துத்வா

பல்வேறு மத நம்பிக்கைகளுக்கு இடையில் ஒற்றுமை என்ற விஷயத்தை நம்பினார் மகாத்மா காந்தி. எனினும் இதில் சர்தார் பட்டேலுக்கும், காந்திக்கும் கருத்து வேறுபாடு இருந்தது.

சர்தார் பட்டேல் இந்து மதத்தை பின்பற்றினார். அதே போலதான் மோதியும். முஸ்லிம்களுக்கு எதிராக பட்டேலுக்கு காழ்புணர்ச்சி இருந்தாலும், அவர் இந்துத்தவாவையோ அல்லது இந்து ராஷ்டிரா மீதோ நம்பிக்கை வைத்ததில்லை.

முஸ்லிம்களையும் சமமான குடிமக்களாகவே பட்டேல் கருதினார். மதத்தின் பெயரில் மக்களை பிரிப்பதற்கு அவர் என்றுமே துணை நின்றதில்லை.

காந்தி இந்து கலாசாரத்தை குறித்து எப்போதும் பேசுவார். வேதங்கள், உபணிஷத்களை எப்போதும் குறிப்பிடுவார். ஆனால், சர்தார் இதுகுறித்து எப்போதும் பேசியதில்லை.

பட மூலாதாரம், Getty Images

மோதி மற்றும் பட்டேலுக்கு இடையேயான வேறுபாடுகள்

மிகப்பெரிய சர்தார் பட்டேலின் சிலையை நிறுவ 3000 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார் பிரதமர் மோதி. ஆனால், உள்ளூர் விவசாயிகளுக்கும் பழங்குடி மக்களுக்கும் இதனால் எந்த பலனும் இல்லை.

இந்தப்பகுதியில் நீர்பாசன வசதிகள் இல்லை. பழங்குடி மக்களின் நிலம் தொடர்பாக தீர்க்கப்படாத பல பிரச்சனைகள் உள்ளன. இதையெல்லாம் தீர்க்க எந்த நடவடிக்கைகளையும் அவர் எடுக்கவில்லை.

மறுபக்கத்தில் சர்தார் பட்டேல் விவசாயிகள் உரிமைக்காக எப்போதும் அவர்களுடன் நின்றுருக்கிறார். விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிடக் கூடாது என்றும் தொழிலாளிகள், கூலிகளுக்குகூட அவர் கேடு நினைத்ததில்லை.

சமூகத்தின் உயர்மட்ட மற்றும் கீழ் வகுப்பு மக்களுக்கு இடையில் எந்த விதத்திலும் பதற்றம் வந்துவிடக் கூடாது என்று நினைத்தார்.

பட மூலாதாரம், Getty Images

அவர்களுக்குள் ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்று நம்பினார். ஏழைகள், பழங்குடி மக்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிராக அவர் இருந்ததில்லை. எனினும், அவர்கள் போராட்டத்தில் அவர்களுடன் பட்டேல் இருக்கவில்லை.

அப்படி என்றால், கீழ் வகுப்பு மக்களின் பிரச்சனைகளுக்கு பட்டேல் முன்னுரிமை அளிக்க மாட்டார் என்று அர்த்தம். மோதியும் அதையே செய்கிறார்.

இந்த பெரிய சிலைக்கு பின் உள்ள அகங்காரம்

குஜராத்தில் தண்ணீர் பற்றாக்குறை என்பது பெரிய பிரச்சனையாக உருவாகி வருகிறது. இந்த பெரிய பட்டேல் சிலை அமைந்துள்ள இடத்தினால், விவசாயிகள் பலர் தங்கள் நிலங்களை இழந்துள்ளனர்.

ஆனால், அதை பற்றியெல்லாம் பிரதமர் நரேந்திர மோதிக்கு கவலை இல்லை. அவருக்கு தான் என்ற அகங்காரமே முக்கியம். அதுவே உலகின் உயரமான சிலையை அமைக்க வழிவகையாக இருந்தது.

சர்தார் பட்டேலின் உயர்ந்த நிலைக்கு சமமாக தன் பெயரையும் வைத்து, வரும் தலைமுறையினர் பட்டேலை குறிப்பிடும் போது இவரையும் குறிப்பிட வேண்டும் என்று மோதி நினைக்கிறார்.

சர்தார் பட்டேல், மோதி மற்றும் தேர்தல்

பட மூலாதாரம், TWITTER/AMIT SHAH

சர்தார் பட்டேலின் பெரிய சிலையை நிறுவவதால், பட்டிதார்களுக்கு இடையே உள்ள அதிருப்தியை மோதி போக்கிவிடுவார் என்று பலரும் நம்புகின்றனர். இதனால் வரும் தேர்தல்களில் பட்டிதார்களின் வாக்குகளை பெற முடியும் என்று மோதி நம்புவதாக தெரிகிறது. ஆனால், அது அவ்வளவு சுலபமானது அல்ல.

சௌராஷ்டிராவில் உள்ள விவசாயிகளை நாம் பார்த்தால், அவர்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். விவசாயிகளின் அதிருப்தி கடந்த முறை தேர்தலை பாதித்தது.

பட்டேலின் சிலையை வைத்து, பட்டிதார்களை சமாதானப்படுத்தலாம் என்று பிரதமர் மோதி நினைத்தால் அது எளிமையான காரியம் அல்ல.

எப்படி இருந்தாலும் பணக்கார பட்டிதார்கள் மோதிக்கு ஆதரவு அளிப்பார்கள். ஆனால், விவசாயிகள், ஏழை மக்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து கேள்வி எழுப்புபவர்களின் ஆதரவு அவருக்கு நிச்சயம் கிடைக்காது.

குஜராத்தை தவிர எந்த மாநிலங்களிலும் இந்த ஒற்றுமைக்கான சிலை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. குஜராத்திற்கு வெளியே யாருக்கும் இதற்கும் எந்த சம்மந்தமுமில்லை. அதனால், சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை பிரதமர் மோதிக்கு வரும் தேர்தலில் எந்த வகையிலும் உதவாது என்று கூறுவதில் தவறில்லை.

2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை இது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :