கேரளா 96 வயது மாணவியின் வெற்றிக் கதை - கெளரவிக்கும் கேரளா முதல்வர்

  • பிரமிளா கிருஷ்ணன்
  • பிபிசி தமிழ்
கேரளா 96 வயது மாணவியின் வெற்றிக் கதை

பட மூலாதாரம், Aksharaleksham department

மூன்றாம் வகுப்பு படிப்பை முடித்து கேரளா முதல்வர் பினராயி விஜயனிடம் சான்றிதழ் பெறவுள்ள மாநிலத்தின் இளம் மாணவி கார்த்தியாயினி அம்மாவுக்கு வயது 96.

இளவயதில் குடும்ப சூழல் காரணமாக பள்ளிக்கூடத்திற்கு செல்லமுடியாத கார்த்தியாயினி அம்மா, தனது 96வது வயதில் கேரளா அரசாங்கத்தின் வயது வந்தோருக்கு கல்வி வழங்கும் அக்ஷராலட்சம் என்ற திட்டத்தின் கீழ் படித்து, தேர்வில் 98/100 மதிப்பெண்கள் பெற்று தேர்வு சான்றிதழை முதல்வரிடம் பெறவுள்ளார்.

கிராமத்திற்கு பெருமை தேடித்தந்த பாட்டி

கேரளாவில் ஆலப்புழா பகுதியில் செப்பேடு கிராமத்தைச் சேர்ந்த கார்த்தியாயினி அம்மாவிடம் இந்த வயதில் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது என்று கேட்டால், தனது கொள்ளு பேர குழந்தைகளை கைகாட்டுகிறார்.

நான்காம் வகுப்பு படிக்கும் கொள்ளு பேத்தி அஞ்சனாவின் வண்ணப்புத்தகங்களைப் பார்த்த பாட்டி, அந்த குழந்தை தனது நண்பர்களுடன் படிப்பதை பார்த்து தானும் படிக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார்.

அதேநேரத்தில், அக்ஷராலட்சம் திட்டத்தின் கீழ் கல்வி கற்காதவர்களை தேடிப்பிடித்து அடிப்படை கல்வியை கற்றுத்தரும் ஆசிரியர் சதி கார்த்தியாயினி அம்மாவிடம் படிக்க விருப்பம் உள்ளதா என்று கேட்கவே, உடனே தயாராகிவிட்டார் இந்த இளம் மாணவி.

''நான் இதுவரை பல முதியவர்களுக்கு கற்பித்துள்ளேன். ஆனால் கார்த்தியாயினி அம்மாவை ஒரு சந்தேகத்துடன்தான் அணுகினேன்.

அவர் படிப்பதற்கு ஒத்துகொண்டபோது கூட எனக்கு நம்பிக்கை வரவில்லை. ஆனால் தினமும் பாடங்களை சொல்லிக்கொடுக்கும்போது அவர் கவனமாக இருப்பது, சந்தேகங்களை கேட்பது என துறுதுறுவென இருந்ததால், அவரது ஆர்வம் என்னை தொற்றிக்கொண்டது.

பட மூலாதாரம், Aksharaleksham department

அவரது வீட்டுக்குச் சென்று பாடங்களை சொல்லிக் கொடுத்தேன். எளிமையான கூட்டல்,கழித்தல் கணக்குகள், வாய்ப்பாடு, மலையாள மொழியின் எழுத்துக்கள், சிறிய பாடல்கள் என கற்பித்தேன்.

அவர் பெயரை எழுதவைத்தேன்,''என்று தனது மாணவியால் ஊக்கமடைந்த விவரத்தை பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ஆசிரியர் சதி.

கணக்கில் சதம் எடுத்த கார்த்தியாயினி

கார்த்தியாயினி அம்மா பெற்ற மதிப்பெண்களை பற்றி பேசிய அக்ஷரலக்ஷம் திட்டத்தின் இயக்குநர் பி.ஸ்ரீகலா மற்றும் செய்தி தொடர்பாளர் பிரதீப் குமார்''100 மதிப்பெண்களுக்கு தேர்வு வைத்தோம். இதில் கார்த்தியாயினி அம்மா கணிதத்தில் 30/30, எழுத்து பயிற்சியில் 30/30, வாசிக்கும் பயிற்சியில் 28/30 என 98/100 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இந்த ஆண்டு அக்ஷரலக்ஷம் தேர்வு எழுதிய 43,330 நபர்களில் மிகவும் வயது மூத்தவர் கார்த்தியாயினி அம்மா தான். கல்லாமையை ஒழிக்க கேரளா எடுத்த முயற்சிக்கு எடுத்துக்காட்டாக கார்த்தியாயினி உள்ளார்,''என்றனர்.

கார்த்தியாயினி அம்மாவின் முயற்சியால் அவரது நெருங்கிய உறவினர்கள் பலரும் தாங்களும் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்துடன் புத்தகங்களை கையில் எடுத்துள்ளனர் என்கிறார் ஆசிரியர் சதி.

கார்த்தியாயினி அம்மாவின் மருமகன் ராமசந்திரன் தற்போது அவரின் சக வகுப்பு தோழனாக மாறிவிட்டார். ''என் மருமகனும் நானும் ஒன்றாக படித்து, தேர்வு எழுதினோம். ஆனால் அவர் படித்ததில் பாதியை மறந்துவிட்டார். நான் எல்லா கேள்விகளுக்கும் பதில் எழுதிவிட்டேன்,''என புன்னகை பூக்கிறார் பாட்டி கார்த்தியாயினி.

நாம் சந்திக்க சென்றிருந்தபோது கார்த்தியாயினி அம்மா தான் எழுத்துக்களை எழுதி பழகிய புத்தகங்களை ஆர்வமாக காண்பித்தார்.

''நான் அடுத்து நான்காம் வகுப்பு படிக்கப்போகிறேன். விரைவில் எட்டு, பத்து என என்னுடைய நூறாவது வயதில் பத்தாம் வகுப்பை முடித்துவிடுவேன். அரசாங்க வேலை கிடைத்தால் இன்னும் சந்தோசபடுவேன்,'' என ஆனந்தமாய் பேசுகிறார்.

மீண்டும் குழந்தையாக மாறிய பாட்டி

வயதை ஒரு தடையாக கருதாத கார்த்தியாயினி அம்மாவுக்கு அவரது குடும்பத்தினர் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்.

''எங்களுக்கு முதலில் ஆச்சரியமாக இருந்தது . ஆனால் அம்மாவின் முயற்சியைப் பார்த்தபோது, அவருக்கு ஆதரவாக இருப்பது அவசியம் என்பதை தெரிந்துகொண்டோம்.

கொள்ளு பேத்தியின் புத்தகங்களை அவரால் வாசிக்கமுடிகிறது என்று ஆனந்தப்படுகிறார். சில சமயம் குழந்தைகளிடம் சந்தேகங்களை கேட்டு அவரது வீட்டுபாடங்களை முறையாக செய்துமுடிப்பார்.

அவர் மூன்றாம் வகுப்பு தேர்வானதில் இருந்து, அவரை சந்திக்க பல செய்தியாளர்கள், உள்ளூர் அரசியல்வாதிகள் என பலர் வருகிறார்கள்.

96 வயதில் எங்கள் குடும்பத்திற்கும், எங்கள் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார் எங்கள் பாட்டி,''என பெருமிதம் கொள்கிறார் பேத்தி ரெஜிதா.

உடல் தளர்ந்தாலும், உள்ளம் தளராத கார்த்தியாயினி அம்மா நிறைய படிக்க வேண்டும், எழுத வேண்டும் என்கிற உணர்வோடு ஒவ்வொரு நாளையும் கழிக்கிறார் என பகிர்ந்தார் மற்றொரு பேத்தி சஜீதா.

''என்னுடைய குழந்தைகள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியுடன் பாடங்களை எழுதுகிறார்களோ, என் பாட்டியும் அவர்களைப் போலவே இருக்கிறார்.

வயதானவர்கள் மீண்டும் குழந்தை பருவத்திற்கு போய்விடுவார்கள் என்பதை நேரடியாக பார்க்கிறோம். எங்கள் பாட்டியை முதல்வர் கௌரவிக்கிறார் என்பது எங்களுக்கு கிடைத்த பெருமை.

வயதானவர்களை ஊக்கப்படுத்தினால், அவர்கள் மீண்டும் இளமையாவார்கள் என்பதற்கு எங்கள் பாட்டி சிறந்த உதாரணம்,'' என்கிறார் சஜீதா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: