பட்டேல் சிலை: உலகளவில் பொறியாளர்களுக்கு வழிகாட்டும் விதமாக அமைகிறதா?

  • தேவான்ஷூ பண்டிட்
  • பிபிசி குஜராத்திக்காக..
સરદાર પટેલની પ્રતિમા

பட மூலாதாரம், statueofunity.in

ஒற்றுமையின் சிலை எனக்கூறி உலகின் மிகவும் பெரிய சிலையாக கட்டப்படுட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை இன்று (31.10.2018) குஜராத்தில் திறக்கப்படவுள்ளது.

நர்மதா நதியில் ஓர் குட்டித் தீவான சாது பெட்டில் இச்சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் உயரம் 182 மீட்டர்கள். சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய ஒருமைப்பாட்டு தொண்டு நிறுவனம்தான் ஒற்றுமைக்கான சிலை திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறது.

இத்திட்டத்தில் பொறியியல் ரீதியாக சில முக்கிய உயரங்கள் எட்டப்பட்டுள்ளன.

அடிமட்டத்தில் இருந்து கணக்கெடுத்தால் மொத்த உயரம் 182 மீட்டர்கள். சிலையின் உயரம் 157 மீட்டர்கள், 25 அடி பீடத்தின் மீது சர்தார் பட்டேல் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. இது அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட இரு மடங்கு உயரமானது.

இந்த திட்டத்துக்குக்கான பிரதான வேலைக்கான ஒப்பந்த செலவு 2,332 கோடிகள். மொத்த திட்டமும் 42 மாதங்களில் முடிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த செலவு 3000 கோடி ஆகும்.

2012-2013-ல் இத்திட்டம் துவங்கப்பட்டது. ஆகஸ்ட் 2012-ல் 'டர்னர் கன்சல்டன்ட்' திட்ட மேலாண்மை ஆலோசகராக தேர்ந்தெடுக்கப்பட்டது. இதே நிறுவனம்தான் துபாயில் புர்ஜ் கலீஃபா திட்டத்தை நிறைவேற்றியது.

திட்ட மேலாண்மை ஆலோசகரின் வேலை என்னவெனில் ஒப்பந்ததாரரை தேர்ந்தெடுப்பது, நியமிப்பது, கட்டுமான முறையை சோதித்து அனுமதிப்பது, தினசரி பணிகளை பார்வையிடுவது, வேலை முழுமையான தரத்துடன் நடக்கிறதா என பரிசோதிப்பது, பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் ஒழுங்காக பின்பற்றப்படுகின்றவா என சோதிப்பது உள்ளிட்டவை அடங்கும்.

பட மூலாதாரம், Getty Images

2014-ல் எல் & டி நிறுவனம் இபிசி என அழைக்கப்படும் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரராக தேர்ந்தெடுக்கப்பட்டது. வடிவமைப்பு அணிக்கு எல் & டி நிறுவனம் தனது சொந்த அணியை பயன்படுத்தியது மேலும் வுட்ஸ் பெக்காட் கட்டுமான நிறுவனத்திடமிருந்து உதவி பெற்றது. கட்டுமான வடிவமைப்புக்கு அரூப் இந்தியா நிறுவனத்துடன் அணி சேர்ந்தது எல் & டி.

வடிவமைப்பை பரிசோதிக்கும் பொறுப்பு ஏஜீஸ் இந்தியா மற்றும் டாடா கன்சல்டன்ட்ஸ் மற்றும் என்ஜினியர்ஸுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலையை உறுதிச் சான்றுக்கான மேலாண்மை என்கிறார்கள்.

உறுதிச் சான்றுக்கான மேலாண்மை நிறுவனமானது அடிப்படை வடிவமைப்பு தத்துவத்தை சோதிக்கும் பணியையும் கான்க்ரீட் பீம் அளவு படிப்படியாக சரியாக அமைக்கப்படுகிறதா என்பதை பரிசோதிக்கும்.

சர்தார் சரோவர் நிகம் நிறுவனமானது அமெரிக்க கட்டுமான நிறுவனமான மைக்கேல் கிரேவ்ஸ் மற்றும் மின்ஹார்ட் ஆகியவற்றை ஒருங்கிணைந்த வடிவமைப்பு அணியில் சேர்த்துக்கொண்டது. இவர்களின் வேலை இத்திட்டத்தின் தொழில்நுட்ப அம்சங்களை சோதிப்பதே. இது மட்டுமின்றி சுமார் முப்பது சிறு மற்றும் பெரு கன்சல்டன்ட் நிறுவனங்கள் நிகாம், பிஎம்சி மற்றும் பிரதான ஒப்பந்ததாரர் ஆகியவற்றால் வேலைக்கு எடுக்கப்பட்டது.

அந்நிறுவனங்கள் பல்வேறு தளங்களில் குறிப்பாக வடிவமைப்பு முதல் கடந்த நூறு ஆண்டுகளுகளின் வெள்ளம் மற்றும் நீர் வள இயலின் தரவுகள் குறித்த ஆய்வுக்கு விளம்பரம் வடிவமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காண வல்லுனர்களாக விளங்கின.

ஒற்றுமைக்கான சிலை குறித்த பணியானது அடித்தளம் அமைப்பது, நிமிர்த்துவது என இரண்டு பிரதான வேலையாக பிரிக்கப்பட்டது. முதலில் அடித்தளம் போடுவதிலிருந்து பணி துவங்கியது. அதன்பிறகு அடுத்தடுத்த இடை மட்டங்கள் கட்டப்பட்டது இறுதியாக சிலையின் பீடம் கட்டப்பட்டது.

இடை நிலை மட்டம் கட்டமைக்கப்பட்டவுடன் உள்ளக சுவர் எழுப்பப்பட்டது. அதன் பிறகு மக்கள் பார்க்கும் கூடம் கட்டமைக்கப்பட்டது. இந்த இடத்தில் 200 பேர் வரை கூடி நின்று பார்க்கமுடியும்.

பட மூலாதாரம், Getty Images

இந்த கலை காட்சிக்கூடத்தில் இருந்து பிரதமர் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் தொடக்கவிழா முடிந்தபிறகு பகிரப்படும்.

இவ்வளவு பெரிய சிலையை அமைக்கும்போது சிலையின் கனம் மீது பிரதான கவனம் குவிகிறது. புயலோ, நிலநடுக்கமோ, வெள்ளமோ, புயல் காற்றின் விளைவுகளையோ தாங்கும் வண்ணம் இதன் எடை இருக்க வேண்டுமல்லவா. ஒற்றுமையின் சிலையின் மொத்த எடை சுமார் 67 ஆயிரம் மெட்ரிக் டன்கள். இந்த சிலை அமைந்துள்ள பகுதியானது நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்புக்கான மூன்றாவது மண்டலத்த்தில் இருக்கிறது.

இருப்பினும் நான்காவது மண்டலமாக இருந்தாலும் எப்படி பாதிக்கப்படாமல் இருக்குமோ அதை கருத்தில் கொண்டு அதற்கேற்ற எடையுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டாலும் பாதுகாப்பாக இருப்பதற்கான தொழில்நுட்பங்களுடன் இவை கட்டமைக்கப்பட்டுள்ளது.

அடித்தளம் போடுவதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு செய்யப்பட்ட மற்ற பூகோள தொழில்நுட்ப ஆய்வுகள் ஒருபுறமிருக்க லேடார் தொழில்நுட்பம் பயன்படுத்தி இத்தளத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சிலை அமைந்திருக்கும் பகுதியின் அடிப்பகுதியில் குவார்ட்ஸ், மைக்கா மற்றும் மற்ற சில பொருள்கள் கலந்திருக்கக்கூடிய விரிசல் விட்ட பாறைகள் இருக்கின்றன.

மேலும் சர்தார் சரோவர் அணையும் அருகே இருக்கிறது. அடித்தளம் தோண்டும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் கட்டுப்பாடுடன் வெடிபொருள்கள் வைத்து வெடிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

அடித்தளமானது சுமார் 45 மீட்டர் அளவுக்கு ஆழமாக போடப்பட்டிருக்கிறது. ஆம் இதற்கு பூமி பூஜை போட்ட விவரங்களை முழுமையாக தெரிந்துகொள்ள நீங்கள் இன்னும் 15 கட்டுரைகள் கூட படிக்க வேண்டியதிருக்கலாம்.

உயரமானதாக கட்டமைக்கப்படும் எந்தவொரு விஷயத்துக்கும் புயல் காற்றை சமாளிக்கும் வண்ணம் எப்படி கட்டுவது என்பதுதான் கட்டடம் வடிவமைப்பில் மிகப்பெரிய சவால். புயல் காற்று சிலைக்கு 90 டிகிரியில் பெரும் அழுத்தத்தோடு வீசினால் சிலையே தூக்கி எறியப்படும். மேலும் இந்த சிலை ஆற்று கரையோரம் அருகே அமைந்துள்ளதால் ஆற்றின் மேல் காற்று செல்லும்போது இன்னும் பிரச்னை அதிகம்.

ஆகவே காற்றின் சுமைக்கு ஏற்றவாறு கணித்து ஒரு வடிவமைப்பு தயாரிப்பது என்பது எளிதான காரியமல்ல. இதனால்தான் சர்வதேச அளவில் பிரபல நிறுவனமான ஆர் டபிள்யூ ஐ டி இந்த வடிவைப்பை உருவாக்குவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.

சிலை வடிவத்தின் எல்லைப்புற அடுக்கில் காற்றின் சுரங்க பாதை விளைவு ஏற்படும் பகுதியின் வானூர்திப் பொருள்மீள்மையியல் குறித்து பரிசோதனை செய்தது இந்நிறுவனம். பின்னர் அதற்கேற்ப வடிவமைப்பாளர்களுக்கு உள்ளீடுகள் கொடுக்கப்பட்டு வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டது. இந்த சிலையானது ஒரு நொடிக்கு 60 மீட்டர் அளவுக்கு வீசும் காற்றின் எடையினை தாங்கும் வண்ணம் ஒற்றுமைக்கான சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு சிலைக்கும் இதய பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது மிகப்பெரிதாக இருக்க வேண்டும். பாதம் சிறிதாக இருக்கலாம். இது கட்டுமான வடிவைமைப்பில் வழக்கத்துக்கு மாறானது. பொதுவாக கால் பகுதி பெரிதாகவும் இதய பகுதி சிறிதாகவும்தான் கோபுரங்கள் போன்றவற்றுக்கு அமைக்கப்பட்டிருக்கும். ஆகவே இந்த வடிவமைப்பில் சிலை வடிப்பதும் கடினம்.

பட மூலாதாரம், Getty Images

உயரம் மற்றும் அகலம் சரியாக இருக்க வேண்டும் என்பதாக சிலை கட்டமைப்புக்கு பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் அடித்தள கட்டமைப்பும் இந்த காரணத்தால்தான் மிகச்சவாலான ஒன்றாக அமைந்தது.

பிரதான கட்டமைப்பானது இரண்டு முட்டை வடிவ உள்ளக சுவர்களால் ஆனது. இதன் உயரம் 152 மீட்டர்கள். சிலையின் இரண்டு கால் இருக்கும் பகுதியும் உள்ளக சுவராக பயன்படுத்தப்பட்டது. உள்ளக சுவர் தொழில்நுட்பமானது மிக உயரமான கட்டடங்களை கட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. சிலையின் உள்ளக சுவர் என்பது முட்டை வடிவ சிலிண்டர் போன்று இருக்கும் .

பீடத்திலிருந்து துவங்கும் இதன் அகலம் 850 மிமி ஆகவும் மேலே உயரமாக செல்ல செல்ல அகலம் 450 மிமி ஆகவும் இருக்கும்.

இங்கே உயர் ரக கான்க்ரீட் சுவர் அமைப்பதற்கு நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற சிறப்பு வாய்ந்த சிலைகள் குறைந்தது நூறு வருடங்களாவது நீடித்திருக்க வேண்டும். ஆகவே நன்றாக உழைக்கக்கூடிய கான்கிரீட் அவசியம்.

வழக்கமாக பயன்படுத்தும் கான்கிரீட்டில் 10-15 விரிசல்கள் விழத் துவங்கும். ஆனால் பழைய காலத்து நினைவு சின்னங்களை பார்த்தால் அவை 400 - 500 ஆண்டுகள் பழமையானவையாக இருக்கும். இவை கான்கிரீட் அல்லது எஃகு ஆகியவற்றால் செய்யப்பட்டதல்ல.

இத்திட்டத்தில் 22,500 மெட்ரிக் டன்,சிமெண்ட் , 5700 மெட்ரிக் டன் எஃகு, 18,500 டன் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளதாக மதிப்பிடப்படுகிறது. எஃகு பயன்பாடு என்பது தவிர்க்கமுடியாத ஒரு பிரச்னையாக இருக்கும். ஏனெனில் சில ஆண்டுகளில் எஃகு துருப்பிடிக்கத் துவங்கிவிடும். நல்ல கான்கிரீட் எனில் துருப்பிடிக்க இன்னும் கொஞ்ச காலம் ஆகும். எனினும் துருப்பிடிப்பது நிச்சயம்.

பட மூலாதாரம், Getty Images

துருப்பிடிக்க எஃகு எவ்வளவு நல்ல கான்கிரீட்டையும் உடைக்க வல்லது. ஆகவே ஒற்றுமையின் சிலை திட்டத்திற்கு எம்65 வகை கான்கிரீட் பயன்படுத்தப்பட்டுள்ளது. எம் 65 என்பது 65 மெகா பாஸ்கல் வலு கொண்ட கான்கிரிட்.

இந்த சிலையின் வடிவமானது 12,000 வெண்கல பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் எடை மட்டும் சுமார் 1850 டன். இந்த வெண்கல பேனல்கள் சீனாவில் செய்யப்பட்டவை. இது சற்று அரசியல் பரபரப்பையும் கிளப்பியது. ஒவ்வொரு பேனலும் வெவ்வேறு அளவில் இருக்கும் மேலும் சிலை வடிவமைப்புக்கு ஏற்றவாறு தயார் செய்ய வேண்டும். பொதுவாக 5 X 6 மீட்டர் அளவிலான கட்டைகள் பயன்படுத்தப்படும். இது முப்பரிமாணமாக இருக்கும் என்பதால் ஏதாவதொரு பகுதி தட்டையாக இருப்பதே பெரியவிஷயம் தான். ஆகவே தேவைக்கேற்ற வடிவில் வெண்கல பட்டை தயாரிப்பதும் சிரமம். இவ்வேலை சி என் சி இயந்திரம் மூலம் முடிக்கப்பட்டது.

வெண்கல பேனல்கள் இந்தியாவில் தயாரித்திருக்கலாம்தான் ஆனால் எவ்வளவு வேகத்தில் முடிக்கப்பட்டிருக்கும் என்பது பெரிய கேள்வி. எல் & டி பொறியியல் வல்லுநர்கள் இந்த பேனல்களை உரிய சட்டத்தில் பொருத்தியதே மிக முக்கியமான சாதனை.

ஒட்டுமொத்தமாக சொல்ல வேண்டுமென்றால் உலகின் மிக உயரமான இந்த சிலை வடிவமைக்கும் திட்டத்தில் ஒரு கல்கூட வீணாகவில்லை. அதற்கு உலகின் மிகச்சிறந்த பொறியியல் மற்றும் கட்டமைப்பு வல்லுநர்கள் காரணம்.

அழகாகவும், உறுதியாகவும், பல ஆண்டுகாலம் நீடிக்கும் வகையில் உயர் ரகத்தில் சிலை வடிவமைக்க வேண்டும் என்பதில் கவனம் கொள்ளப்பட்டது. இந்த பகுதி சுற்றுலாவாசிகளை மிகப்பெரிய அளவில் ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதுமட்டுமல்ல இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட விதம் ஆர்வமூட்டக்கூடியதாகவும் முக்கியமாக சொல்ல வேண்டுமெனில் உலகம் முழுவதுள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் திட்ட மேலாண்மைக்கான ஆய்வுக்கும் , திட்டமிடுதல், வடிவமைப்பு போன்றவற்றுக்கான ஆய்வுக்கும் பேசப்படும்.

( இந்த கட்டுரையானது வல்லுநர் ஒருவரால் எழுதப்பட்டது)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :