#MeToo மாயா கிருஷ்ணன் மீது மாடல் அழகி, நடிகை அனன்யா ராம்பிரசாத் பாலியல் புகார்

சித்தரிப்புக்காக Metoo

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சித்தரிப்புக்காக

நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: 'நடிகை மீது இன்னொரு நடிகை புகார் #MeToo'

'மீ டூ'வில் நடிகை மீது இன்னொரு நடிகை புகார் தெரிவித்துள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

தமிழில் 2015-ல் 'வானவில்' படத்தில் அறிமுகமானவர் மாயா கிருஷ்ணன். தொடர்ந்து தனுசின் தொடரி, ஜோதிகாவுடன் மகளிர் மட்டும், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், விக்ரமுடன் துருவநட்சத்திரம் படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் 2.0 படத்திலும் நடித்துள்ளார்.

மாயா கிருஷ்ணன் மீது மாடல் அழகியும், நடிகையுமான அனன்யா ராம்பிரசாத் 'மீ டூ'வில் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் என்கிறது அந்த செய்தி.

"நடிகை மாயா கிருஷ்ணன் பாலியல் ரீதியாக என்னை துன்புறுத்தினார். அவரை 2016-ல் சந்தித்தேன். அப்போது எனக்கு வயது 18. மாயா எனக்கு வழிகாட்டியாக நிறைய ஆலோசனைகள் கூறினார். அவரை முழுமையாக நம்ப ஆரம்பித்தேன். அடுத்த சில மாதங்களில் இருவரும் நெருக்கமாக பழகினோம்.

பட மூலாதாரம், TARAOBRIENILLUSTRATION

ஒரு கட்டத்தில் மாயா தன்னுடன் மட்டும்தான் நான் பழக வேண்டும் என்று செயல்பட ஆரம்பித்தார். எனது எல்லா முடிவுகளையும் அவரே எடுக்க தொடங்கினார். என்மீது ஆதிக்கம் செலுத்தவும் தொடங்கினார். மெதுவாக எனது நண்பர்களை துண்டித்து அவர்கள் என்னை வெறுக்க செய்தார். எனது பெற்றோர்களையும் ஒதுக்க செய்தார்.

நான் தன்னம்பிக்கையையும், சுயமரியாதையையும் இழக்க தொடங்கினேன். என் வாழ்க்கை முழுவதையும் ஆக்கிரமித்தார். என்னை கட்டிப்பிடித்தார். முத்தமிட்டார். பாலியல் ரீதியாகவும் பயன்படுத்தினார். அவருடன் ஒரே அறையில் ஒரே மெத்தையில் தூங்குவது சாதாரண விஷயமானது. ஒரு கட்டத்தில் தவறாக சிக்கியதை உணர்ந்தேன். பிறகு அதில் இருந்து மீண்டு மன நல மருத்துவரிடம் சிகிச்சை பெற்றேன்." என்று அனன்யா கூறி இருப்பதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

'மேல்முறையீடு இல்லை: தினகரன்'

எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவது இல்லை என்றும், இடைத்தேர்தலை சந்திக்கப் போவதாகவும் டி.டி.வி.தினகரன் அறிவித்தார் என்கிறது தினத்தந்தி நாளிதழின் மற்றொரு செய்தி.

"முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை யாரும் மிரட்டவில்லை. அப்படி மிரட்டி இருந்தால் அவர் தவறு செய்துள்ளார் என்று தானே அர்த்தம். 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யமாட்டோம்.

அந்த 18 தொகுதிகள் மற்றும் திருப்பரங்குன்றம், திருவாரூர் என 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளோம். தேர்தல் எப்போது வந்தாலும் நாங்கள் மாபெரும் வெற்றி பெறுவோம்." என்று அவர் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தினமணி: 'கடன் விவகாரம்: ஆர்பிஐ-யுடன் ஆலோசிக்க மத்திய அரசு முடிவு'

வங்கிகளின் கடன் விவகாரம் உள்ளிட்ட சில முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கிக்கு (ஆர்பிஐ) மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

"அண்மைக் காலமாக வாராக் கடன் உள்ளிட்ட பிரச்னைகளில் மத்திய அரசுக்கும், ஆர்பிஐ-க்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்நிலையில், ஆலோசனை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆர்பிஐ சட்டத்தின் 7-ஆவது பிரிவின் கீழ் இந்த ஆலோசனைக்கான நோட்டீஸை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இப்பிரிவின் கீழ் ஆர்பிஐ-க்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்புவது இதுவே முதல்முறையாகும்.

பட மூலாதாரம், Getty Images

ஆலோசனைக்கு அழைப்பு விடுத்துள்ளது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஆர்பிஐ-யின் செயல்பாட்டு சுதந்திரம் என்பது ஆர்பிஐ சட்டத்துக்குள்பட்டதுதான். இப்போது, அரசு அனுப்பியுள்ள நோட்டீஸை ஆர்பிஐ ஏற்றுக் கொள்ள வேண்டும். மத்திய அரசு மற்றும் ஆர்பிஐ-யின் செயல்பாடுகள் பொது நலன் சார்ந்ததாகவும், நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆர்பிஐ சட்டப் பிரிவு 7-இன்படி மத்திய அரசு நோட்டீஸ் அளிக்கும்போது, ஆர்பிஐ ஆளுநருடன் ஆலோசனை நடத்திய பிறகு, ஆர்பிஐ எவ்வாறு செயல்பட வேண்டும் என்று உத்தரவு அளிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. மிகவும் முக்கியமான தருணங்களிலும், பொது நலன் கருதியும் இந்த பிரிவை மத்திய அரசு கையாள முடியும். இந்திய வரலாற்றில் இப்போதுதான் மத்திய அரசு முதல்முறையாக இந்த சட்டப் பிரிவின்கீழ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நிதிக் கொள்கைகளை வகுப்பது தொடர்பாக ஆர்பிஐ-க்கு உள்ள தனிப்பட்ட உரிமைகள் தொடர்பாக மத்திய நிதியமைச்சகத்துக்கும், ஆர்பிஐ-க்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை கருத்துத் தெரிவித்த ஜேட்லி, சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து, கடந்த 2008 முதல் 2014-ஆம் ஆண்டு வரை நமது நாட்டில் பொருளாதார வளர்ச்சியை எப்படியாவது செயற்கையாக உருவாக்க வேண்டும் என்பதற்காக, அப்போதைய மத்திய அரசு, பகுத்தறியாமல் அனைவருக்கும் கடன் கொடுக்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிட்டது. அதேநேரத்தில் ஆர்பிஐயும் கடன் அளிப்பதில் வரம்புகள் இல்லாமல் வங்கிகள் செயல்படுவதை கண்காணித்து உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று ஆர்பிஐ-யை நேரடியாகக் குற்றம்சாட்டி இருந்தார்.

முன்னதாக, மத்திய அரசால் ஆர்பிஐ நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறது. இதன் காரணமாக ஆர்பிஐ தனது கொள்கைகளை விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று ஆர்பிஐ துணை கவர்னர் வி. ஆச்சார்யா விமர்சித்திருந்தார்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

இந்து தமிழ்: "ரஃபால் விமான விலை விவரம் சமர்ப்பிக்க வேண்டும்"

"பிரான்ஸ் நாட்டிடம் இருந்து வாங்கவுள்ள 36 ரஃபால் போர் விமானங்களின் விலை விவரங்களை சீலிட்ட உறையில் 10 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ரகசிய தகவல்களை பகிரங்கமாக வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது" என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

"மனுதாரர்கள் யாரும் ரஃபால் போர் விமானங்களை வாங்க கூடாது என்றோ அதன் திறன் குறித்தோ, அவற்றில் உள்ள கருவிகள் குறித்தோ கேள்வி எழுப்பவில்லை. ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான நடைமுறைகள், விலை விவரங்களை மட்டும்தான் கோருகின்றனர்.

ரஃபால் போர் விமானங்களின் விலை விவரங்கள், ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை எல்லோரும் அறிந்து கொள்ளும்வகையில் மத்திய அரசு வெளியிட வேண்டும். இதில் ரகசிய விவரங்கள் தவிர மற்றவற்றை சீலிடப்பட்ட உறையில் 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு 7 நாட்களுக்குள் மனுதாரர்கள் தங்கள் பதில் மனுக்களை தாக்கல் செய்யலாம்.

மேலும், விலை விவரங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள இயலாது என்றால், அதற்கான காரணங்களுடன் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யலாம்." என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், ஆம் ஆத்மியைச் சேர்ந்த சஞ்சய் சிங் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'தொடங்கியது வடகிழக்கு பருவநிலை'

வடகிழக்கு பருவநிலை தமிழகத்தில் தொடங்கியது என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Getty Images

சென்னை மற்றும் புதுச்சேரி கடற்கரை ஒட்டிய பகுதிகளில் அடுத்த 24 மணி நேரங்களில் மழை பெய்யும், அதற்கு அடுத்த 48 மணி நேரங்களில் பிற பகுதிகளில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையத்தின் துணை இயக்குநர் எஸ் பாலசந்திரன் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: