முசிறி பட்டினம்: 2,000 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர்களின் பானைக் கழிவறைகள் கண்டுபிடிப்பு

2000 ஆண்டுகளுக்கு முன்பு கழிவறைகள், வணிகம் என செழித்து இருந்த தமிழக நாகரிகம் படத்தின் காப்புரிமை Kerala Council For Historical Research

கேரளாவின் கடலோர நகரமான முசிறி பட்டினம் பகுதியில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் மத்தியில் தனிநபர் கழிவறைகள் பயன்பாட்டில் இருந்தன என்று தெரியவந்துள்ளது.

மனித இனம் பரிணாம வளர்ச்சி பெற்றுவந்த ஒவ்வொரு காலத்திலும் குறிப்பிட்ட அளவு தொழில்நுட்ப அறிவு உயர்ந்துகொண்டே வந்துள்ளது. கற்காலம் தொடங்கி இன்று வரை மனிதர்கள் பயன்படுத்திய பொருட்களை ஆய்வு செய்தால் அவர்கள் வாழ்ந்த காலத்தைப் பற்றி கணிக்கமுடியும். இந்த அடிப்படையில், கேரளாவில் உள்ள முசிறி அல்லது முசிறிப்பட்டினம் என்ற பகுதியில் ஆய்வு செய்த தொல்லியல்துறை நிபுணர்கள், 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்கள் கழிவறைகள் கட்டி, பயன்படுத்தியுள்ளனர் என்று கண்டறிவந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Kerala Council For Historical Research

சென்னையில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் பட்டினம் பகுதியின் வரலாறு, அங்கு தொல்லியல் ஆய்வில் கிடைத்த பல்வேறு பொருட்களின் விவரங்களை 'பாமா'(PAMA) என்ற தனியார் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர் செரியன் விளக்கமாக எடுத்துரைத்தார்.

கழிவுபானைகள்

''வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், தமிழகம் என்பது பரந்துவிரிந்து, இன்றுள்ள தமிழ்நாடு,கேரளா,ஆந்திரா, கர்நாடகா என தென்னிந்தியாவின் பெரும்பகுதியை உள்ளடக்கியதாக இருந்திருக்கும் என்றே கருதுகிறோம். அதில் பட்டினம் நகரம் முக்கியமான துறைமுகமாக இருந்தது. இங்கு கழிவறைகள் இருந்ததற்கான சான்றாக கழிவுப் பானைகள் கிடைத்துள்ளன,''என்கிறார் பட்டினம் பகுதியில் ஆய்வு நடத்தும் தொல்லியல் ஆய்வாளர் செரியன்.

''ஆறு பானைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, கடைசியாக வைக்கப்பட்ட பானை கூம்பு வடிவில் மண்ணில் புதைக்கப்பட்டு இருந்தது. இந்த கழிவறை வெஸ்டர்ன் டாய்லெட் என்று அறியப்படும் கழிவறையை ஒத்திருந்தது. இதே அமைப்பில் ஆறு கழிவறைகளை இதே இடத்தில் கண்டறிந்தோம்,''என்று விளக்கினார் செரியன்.

படத்தின் காப்புரிமை Kerala Council For Historical Research

2006 முதல் 2016 வரை பட்டினம் பகுதியில் பாமா நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது. பட்டினம் துறைமுகத்திற்கு வந்துசென்ற வணிகர்கள் அரேபியா, சீனா, ஓமான், ஸ்பெயின், எகிப்து போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதால், அந்த நாடுகளைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர்களையும் இந்த ஆய்வில் பாமா ஈடுபடுத்தியுள்ளது. ''பட்டினம் பகுதியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்தன. அதில் குறிப்பிடத்தக்க அளவு பானை ஓடுகள் கிடைத்தன. வீடுகளில் கூரை அமைக்க பயன்படுத்தப்பட்ட ஓடுகள் கிடைத்தன. சுமார் ஏழுரை கிலோ மிளகும் கிடைத்தது,''என்று கூறினார் செரியன்.

‘கடல் கடந்த வணிகம்’

பல்வேறு நாடுகளில் இருந்து வரும் வணிகர்களுக்கு பட்டினம் நகரம் எவ்வாறு ஒரு இணைப்பு நகரமாக இருந்தது என்பதை ஆதாரங்களுடன் பேசிய அவர், ''இரும்புக் காலம் முடிந்து, வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், இந்தியாவின் மேற்கில் உள்ள அரேபிய நாடுகள் மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து வரும் வணிகர்கள் பட்டினம் நகரத்தில் வாணிபம் செய்ததற்கு அடையாளமாக பல வெளிநாட்டு ரத்தின கற்கள் அகழ்வாய்வில் கிடைத்தன. 146 நாணயங்களை கண்டறிந்தோம். விதவிதமான குடுவைகள் கிடைத்தன. அந்த குடுவைகளை கூர்ந்துநோக்கியபோது, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் கொண்டுவந்த குடுவைகள் அவை என்று தெரிந்தது. அதற்கு சாட்சியாக மேல்பகுதியில் ஒவ்வொரு நாட்டின் பிரத்தேயேக அலங்கார வேலைப்பாடுகள் தெரிந்தன. அதேபோல படகுகளை கட்டிவைப்பதற்கான இரும்பு கம்பிகள் இருந்தன,''என்று கூறுகிறார் செரியன்.

படத்தின் காப்புரிமை Kerala Council For Historical Research

''பட்டினம் நகரம் பல்வேறு நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு ஒரு நுழைவாயிலாக இருந்தது என்று நம்புகிறோம். எங்களுக்கு கிடைத்த எலும்புத் துண்டுகளை டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தியபோது, அவை மேற்கு மற்றும் தெற்கு ஆசியப்பகுதி, மற்றும் ஐரோப்பியப் பகுதியில் இருந்து வந்தவர்களின் எலும்புகள் அவை என்று கண்டறிந்தோம்,''என்கிறார் செரியன்.

அதேபோல தமிழகத்தில் அகழ்வாய்வு நடக்கும் கீழடி மற்றும் அழகன்குளம் போன்ற இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களுக்கும், பட்டினத்தில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களுக்கும் ஒற்றுமை இருப்பதை உறுதி செய்யமுடிந்தது என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்