வல்லபாய் படேல் சிலை பெயர்ப்பலகை மொழிபெயர்ப்பு குளறுபடி உண்மையா, பொய்யா?

'ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி' பலகை: உண்மையா, பொய்யா?

பட மூலாதாரம், Getty Images

குஜராத்தில் 3000 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்ட வல்லபாய் படேல் சிலைக்கு அருகே வைத்த பெயர்ப் பலகையில் 'Statue of Unity' என்பது தவறாக 'ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி' என்று தமிழில்பெயர்ப்பு செய்யப்பட்டு இருந்தது என்ற செய்தி நேற்று (புதன்கிழமை) வைரலாக பரவியது.

பலர் இதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, "3000 கோடியில் நிறுவப்பட்ட ஒரு சிலை அருகே சரியான தமிழில் கூட பெயர்ப் பலகை வைக்க முடியாதா?" என்று கேள்வி எழுப்பி இருந்தனர்.

சிலர், நீட் வினாத் தாளை மொழி பெயர்த்ததும், 'ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி' ஐ மொழிப்பெயர்த்ததும் ஒருவர்தானா என்று கிண்டல் செய்தனர்.

ஆனால், இன்று அப்படி ஒரு பலகையே அங்கே வைக்கப்படவில்லை என்றும், தமிழ் தவறாக மொழி பெயர்க்கப்படவில்லை என்றும் மறுத்து பலர் சமூக ஊடகங்களில் பதிவு செய்கின்றனர். அது வெறும் போட்டாஷாப் வேலை என்றனர் சிலர்.

உண்மைப் பரிசோதனை

இதையடுத்து இந்த படம் உண்மையா? இப்படி ஒரு பலகை வைக்கப்பட்டது உண்மையா? என்று பிபிசி தமிழ் விசாரணையில் இறங்கியது. அப்போது பிபிசி குஜராத்தி செய்தியாளர் தேஜஸ் வைத்யா சிலையை சுற்றிலும் எடுத்த பல படங்களில் தவறான மொழி பெயர்ப்புடன் கூடிய இந்தப் பலகையும் இருந்தது தெரியவந்தது.

உண்மை... நூறு சதவீதம் உண்மை

"அந்த பலகை இருந்தது நூறு சதவீதம் உண்மை. அது மறைக்கப்பட்டிருந்தது. அதையும் மீறி எழுதியிருந்தது வெளியில் தெரிந்தது. அதை நான் தான் புகைப்படம் எடுத்தேன்" என்கிறார் பிபிசி குஜராத்தி சேவையின் செய்தியாளர் தேஜஸ் வைத்யா.

பட மூலாதாரம், தேஜஸ் வைத்யா

படக்குறிப்பு,

தேஜஸ் வைத்யா எடுத்த புகைப்படம்

அவர், "நான் இந்தப் புகைப்படத்தை அக்டோபர் 30 ஆம் தேதி பிற்பகல் எடுத்தேன். அந்த சிலையை சுற்றி வைக்கப்பட்ட பல்வேறு அறிவிப்புப் பலகைகளையும் படம் எடுத்தேன்" என்கிறார் அவர்.

மேலும் அவர், "இப்போது அந்த பலகை அங்கு உள்ளதா, இல்லையா? என்று தெரியவில்லை" என்கிறார்.

என்ன சொல்கிறார்கள் அதிகாரிகள்?

"சிலையை சுற்றி இருக்கும் அறிவிப்புப் பலகைகள் எல்லாவற்றையும் லார்சன் & டூப்ரோ நிறுவனமே தயாரித்தது. சமூக ஊடகங்களில் அது பற்றிப் பேசப்படும் கருத்துகளை அடுத்து அந்த நிறுவனத்துடன் பேசினோம். அதை அகற்றிவிட்டதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள். இந்தப் புகைப்படம் இரண்டு நாள்கள் முன்பு எடுக்கப்பட்டது. எனினும் அந்தப் பலகை அகற்றப்படாமல் இருந்தால் நாங்கள் உடனடியாக அகற்றிவிடுவோம்" என்று பிபிசி குஜராத்தி சேவையிடம் தெரிவித்தார் சர்தார் சரோவர் நர்மதா நிகாம் லிமிட்டட் நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குநர் சந்தீப்குமார்.

அரபியிலும் அபத்தம்

அரபி வரிவடிவம் பல மொழிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. "ஸ்டேட்டுக்கே ஓப்பி..." என்று தமிழில் எழுதியிருக்கும் அதே பலகையில் இரண்டு இடங்களில் அரபி வரிவடிவத்திலும் இந்த statue of unity என்பது வரி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த இரண்டும் என்ன மொழி என்றே சொல்ல முடியாத வகையில் அபத்தமாக இருப்பதாக பிபிசி மானிடரிங் பிரிவில் பணியாற்றும் தாரிக் குறிப்பிடுகிறார்.

எதிர்ப்பு

இந்த 182 மீட்டர் உயர படேல் சிலை, சர்தார் சரோவர் அணைக்கு அருகில் அமைந்துள்ளது. சிலையின் கட்டுமானத்துக்கும், அதன் பிரம்மாண்ட திறப்பு விழாவிற்கும் உள்ளூர் பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

சிலை வைக்கப்பட்ட பகுதியை சேர்ந்த மக்கள் சிலையின் கட்டுமானத்திற்கு நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சிலையின் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட பணத்தை பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தியிருக்கலாம் என பழங்குடியின மக்கள் தெரிவித்தனர்.

ஆனால், இந்த சிலை மாவட்டப் பொருளாதாரத்தை உயர்த்தும் என்று அரசாங்கம் நம்புகிறது. ஏனெனில் "ஆண்டுக்கு 2.5 மில்லியன் பார்வையாளர்கள் அங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பு அதிகரிப்பதோடு, அப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வருகையும் அதிகரிக்கும்" என்கின்றனர் அரசு அதிகாரிகள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: