முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை: மருத்துவமனையில் ஜெயலலிதா மயக்கத்தில் இருந்தார்

நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகின்றோம்.

தி இந்து (ஆங்கிலம்) - ஆளுநர் சந்திக்க சென்றபோது மயக்கத்தில் இருந்தார் ஜெயலலிதா

படத்தின் காப்புரிமை Getty Images

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை 2016ஆம் ஆண்டு, அக்டோபர் ஒன்றாம் தேதி அப்போலோ மருத்துவமனை சென்று தாம் சந்தித்தபோது அவர் மயக்கத்தில் இருந்ததாக முன்னாள் தமிழக ஆளுநர் வித்தியாசாகர் ராவ், அப்போதைய குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜியிடம் தெரிவித்ததாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அக்டோபர் 6-ம் தேதி ஆளுநர் ராவ் , பிரனாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், ஆளுநர் அலுவலகத்திடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அந்த கேள்விகளுக்கான பதிலில் இந்த கடிதம் குறித்து தெரிய வந்துள்ளது.

தினமணி : டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்புகள்

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழகத்தில் நாள்தோறும் 80 பேர் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்புகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதாக மாநில சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் வியாழக்கிழமை அன்று திடீர் ஆய்வு மேற்கொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழகத்தில் 2,700 அரசு மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் நாளொன்றுக்கு 50 பேர் டெங்கு பாதிப்பாலும், 30 பேர் பன்றிக் காய்ச்சல் பாதிப்பாலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில் 23 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இந்தாண்டு டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது என்றார் அவர்.

வட இந்தியாவில் டெங்கு, பன்றி காய்ச்சலுக்கு 625 பேர் வரை இறந்துள்ள நிலையில், தமிழகத்தில் இதுவரை டெங்கு பாதிப்பால் 7 பேரும், பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் 15 பேரும் இறந்துள்ளனர். பன்றிக் காய்ச்சலை தடுக்கும் மாத்திரைகள் 20 லட்சம் வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் நிலவேம்பு குடிநீர், கபசுர கசாயம் ஆகியவையும் அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான அளவு வழங்கப்பட்டுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் கூறியதாக அச்செய்தி மேலும் விவரிக்கிறது.

தினமலர் கார்டூன்

படத்தின் காப்புரிமை DINAMALAR

தினகரன் : பிரதமர் மோதி குறித்து விமர்சனம் - நடிகை ரம்யாவிற்கு எதிர்ப்பு

படத்தின் காப்புரிமை Hindustan Times

பிரதமர் நரேந்திர மோதி குறித்து, ட்விட்டரில் பிரபல நடிகையும் காங்கிரஸை சேர்ந்தவருமான ரம்யாவிற்கு பதிவிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தினகரன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உயரமான சர்தார் பட்டேலின் சிலையை நேற்று முன்தினம் மோதி திறந்து வைத்தார். அந்த விழாவில் பட்டேல் சிலையின் அருகே பிரதமர் மோதி நின்று மலர் தூவுவது போல புகைப்படங்கள் வெளியாகின. அந்த புகைப்படத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட நடிகை ரம்யா அதனுடன் வெளியிட்ட கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதற்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில பா.ஜ.க செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், "இதுதான் காங்கிரசின் உண்மையான கலாசாரம். பிரதமரை விமர்சிக்கும் எந்த வாய்ப்பையும் அவர்கள் தவற விடுவதில்லை" என்றார். ஆனால், தனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் இதற்காக மறுப்பு தெரிவிக்க முடியாது என்றும் திவ்யா கூறியதாக அந்நாளிதழ் செய்தி மேலும் விவரிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :