தேனி நியூட்ரினோ திட்டம்: தடை குறித்து என்ன சொல்கிறார்கள் ஆர்வலர்கள்?

நியூட்ரினோ

தேனி நியூட்ரினோ ஆய்வகத் திட்டப் பணிகளை தேசிய வனவிலங்கு வாரியத்தின் அனுமதி இல்லாமல் செயல்படுத்தக்கூடாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அளித்த அனுமதியை ரத்து செய்ய முடியாது என்றும் தீர்ப்பாயம் கூறியுள்ளது.

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தை செயல்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை எதிர்த்து, பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இத்திட்டம் தொடர்பாக மக்களின் கருத்தை கேட்க வேண்டும் என்றும் சட்டவிதிகளுக்கு புறம்பாக இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த புது டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வெள்ளிக்கிழமை தமது தீர்ப்பை வழங்கியது.

இத்தீர்ப்பு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பூவுலகின் சுந்தர்ராஜன், இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக தெரிவித்தார்.

முக்கிய மூன்று அனுமதிகள்

தேசிய பசுமை தீர்ப்பாயம் நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன்.

மூன்று முக்கியமான அனுமதியை பெற்ற பின்னர்தான் இந்த திட்டத்தை செயல்படுத்தமுடியும்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல், வனவிலங்கு நலவாரியம் மற்றும் தமிழ்நாடு மாசுகட்டுப்பட்டு வாரியம் என மூன்று நிறுவனங்களிடம் இருந்து இதற்கு ஒப்புதல் பெறவேண்டும்.

தற்போது மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் மட்டுமே ஒப்புதல் பெற்றுள்ளார்கள்.

மற்ற இரண்டு நிறுவனங்களிடம் அனுமதி பெறாத காரணத்தால், நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கொடுத்த ஒப்புதலை திரும்பபெறவேண்டும்.

இதனை முன்மொழிந்து உச்சநீதிமன்றத்தில் நாங்கள் மேல்முறையீடு செய்யவுள்ளோம்,''என்கிறார் சுந்தர்ராஜன்.

குறிப்பாக, தமிழ்நாட்டில் கட்டமைக்கவுள்ள நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழக அளவிலான துறையிடம் அனுமதி பெறாமல், மத்திய அமைச்சகத்திடம் பெற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

மத்திய அமைச்சகம் மேல்முறையீடு செய்தால், அதை விசாரிக்கும் அமைப்பாக செயல்பட வேண்டும். ஆனால் இந்த திட்டத்தில், மத்திய அமைச்சகம் தாமாக முன்வந்து ஒப்புதல் கொடுத்திருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

செயல்படுத்தபடும் வழிமுறைகளில் நியூட்ரினோ திட்டம்

ஆனால் பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு வந்த பின்னர் நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தபடும் என்பதில் குழப்பம் தேவையில்லை என்கிறார் நியூட்ரினோ நோக்கு கூடம் திட்டத்தின் அறிவியல் செய்தி தொடர்பாளர் த. வி. வெங்கடேஸ்வரன்.

''நியூட்ரினோ திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குமாறு கோரி மூன்று அரசு நிறுவனங்களுக்கும் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது எங்களுக்கு மத்திய அமைச்சகத்தின் ஒப்புதல் உள்ளது. மற்ற இரண்டு நிறுவனங்களிடம் ஒப்புதல் வந்தவுடன் திட்டத்தை தொடங்கலாம் என்று பசுமைதீர்ப்பாயம் கூறுகிறது.

இந்த தீர்ப்பு நியூட்ரினோ திட்டத்திற்கு பின்னடைவு என்று கூற முடியாது. இடைக்காலதடை என்பது ஒப்புதல் அறிக்கை பெறப்படும்வரை மட்டுமே என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

இந்த திட்டத்திற்கு பசுமை தீர்ப்பாயம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சான்றிதழ் பெறும் வேலைகளை மட்டுமே செய்யவேண்டியுள்ளது என்று எளிமையாக புரிந்துகொள்ளலாம்,''என்கிறார் வெங்கடேஸ்வரன்.

பணிகளை விரைவாக முடிக்க வாய்ப்பு

அதேசமயம் தேனியில் அமையவுள்ள நியூட்ரினோ நோக்கு கூடம் திட்டத்தில் அமெரிக்கன் கல்லூரி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டுவருகிறது.

அதனை முன்னெடுத்துவரும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இயற்பியல்துறை உதவி பேராசிரியர் ஸ்டீபன் இன்பநாதனிடம் இந்த தீர்ப்பு குறித்து பேசினோம்.

''தற்போது பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ள தீர்ப்பு நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த தேவையான பணிகளை துரிதமாக முடிக்க கொடுக்கப்பட்ட வாய்ப்பாக இருப்பதை பார்க்கிறோம்.

நியூட்ரினோ நோக்கு கூடம் அமைந்தால் அதில் பணிபுரிய மாணவர்கள் தயாராகிவருகிறார்கள். அந்த நோக்கு கூடத்தில் வைக்கப்படவுள்ள கருவிகள் இந்தியாவில் தாயார் செய்யப்படும்.

அந்த ஆய்வுகளில் நம் நாட்டைச் சேர்ந்த மாணவர்களும் வேலைசெய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இந்த தீர்ப்பை தொடர்ந்து நியூட்ரினோ திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்று நம்புகிறோம்,''என்று கூறுகிறார் உதவி பேராசிரியர் ஸ்டீபன்.

நியூட்ரினோ என்றால் என்ன?

இவ்வுலகில் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் பொருள்கள் (Matter) எனலாம். இப்பொருள்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவை.

ஒருகாலக்கட்டத்தில் அணுவே இவ்வுலகில் இருக்கும் இறுதித்துகள் என நம்பப்பட்டது. 'அணு' (Atom) என்பதற்கான விளக்கம் (லத்தீன மொழியில்) 'பிளக்க முடியாதது' என்பதாகும்.

இயற்பியல் ஆய்வுகள் தொடரத் தொடர, அணுவும், எலக்ட்ரான் (electron), புரோட்டான் (proton), நியூட்ரான் (neutron) ஆகியவைகளால் ஆனவை எனக் கண்டறியப்பட்டது. இவைகளை அணுத் துகள்கள் (Atomic particles) எனக் கூறுவர்.

மேலும், புரோட்டானும் நியூட்ரானும் ஒன்று சேர்த்து இருக்கும் பகுதி அணுக்கரு (Nuclei) என சொல்கிறது அறிவியல்.

அணுவினுள் பல்வேறு உட்துகள்கள் (Subatomic particles) இருப்பதாகவும் பிறகு கண்டறியப்பட்டது. அணு உட்துகள்களை மூலத்துகள் (எதனாலும் உருவாக்கப்படாதவை) மற்றும் கலவைத் துகள்கள் எனப் பிரித்தனர்.

எலக்ட்ரான் ஒரு மூலத்துகள் ஆகும். அதில் எதிர்மறை மின்னூட்டம் (negative charge) உள்ளது. புரோட்டானில் நேர்மறை மின்னூட்டம் (positive charge) உள்ளது. நியூட்ரான் எவ்விதமான மின்னூட்டமும் இல்லாத அணுத்துகள் ஆகும்.

முதலில் நியூட்ரினோவிற்கும் நியூற்றான் என்ற பெயரே இருந்தது. இரண்டையும் வேறுபடுத்தவே பிற்காலத்தில் இத்தாலிய மொழியில் நியூட்ரினோ என்று பெயரை மாற்றியமைத்தனர். இத்தாலிய மொழியில் அதற்கான அர்த்தம் "A little neutral one" என்பதாகும்.

சூரியனில் இருந்து பூமியை நோக்கி பொழிந்து வரும் காஸ்மிக் கதிர்களில் இருந்து உருவாகும் ஒரு துகளே நியூட்ரினோ.

அது வானில் இருந்து இப்புவி நோக்கி பெரு மழையாக நம் கண்ணுக்கு புலப்படாத வண்ணம் பொழிந்துகொண்டேதான் இருக்கிறது.

நமது உடலின் ஒவ்வொரு சதுர சென்டிமீட்டர் பரப்பளவிலும் 60 லட்சம் நியூட்ரினோ துகள்கள் ஊடுருவிக்கொண்டே இருக்கிறது.

இதனைப் படித்துக் கொண்டிருக்கும் போதே பல கோடி நியூட்ரினோக்கள் உங்கள் உடலை ஊடுருவி இருக்கும்.

இயற்கையாக உருவாகும் நியூட்ரினோக்களால் எவ்வித பாதகமும் இல்லை. அது எப்பொருளுடனும் எவ்வித வினையும் புரியாது.

அது இவ்வுலகில் சிறு துரும்பைக்கூட ஒரு பொருட்டாக மதிக்காது. நமது கண்ணுக்கு எவ்விதம் அது புலப்படவே படாதோ அதுபோலத்தான் அதன் பாதையில் நமது மண்ணில் எப்பொருளுக்கும் அத்துகளுக்கு தடங்கல் ஏற்படுத்தக்கூடிய வல்லமை இல்லை என சொல்லலாம்.

இருக்கும் அணுத்துகள்களிலேயே மிக குறைந்த நிறை கொண்டதான இந்நியூட்ரினோ ஒளியின் வேகத்தில் பயணிக்கக் கூடிய வல்லமை பெற்றது. இது வருவதும் தெரியாது போவதும் தெரியாது.

1965 இல் வான்வெளியில் இருந்து வந்துக்கொண்டிருந்த நியூட்ரினோவை (Atmospheric neutrino) உலகிலேயே முதன்முறையாக, டாடா ஆராய்ச்சி கழகமும் ஜப்பானின் ஒசாகா பல்கலைக்கழகமும் இங்கிலாந்தின் டர்ஹாம் பல்கலைக்கழகமும் இணைந்து கோலார் தங்க வயலில் நடந்த ஆய்வில் பதிவு செய்தனர்.

அப்பொழுதிலிருந்தே இந்திய இயற்பியலாளர்களுக்கு நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் ஆவல் இருந்து வந்தது.

1989 இல் இருந்து அதற்கான திட்டமிடல் இருந்து வந்தாலும், பல்வேறு காரணங்களால் காலம் இழுத்துக்கொண்டே சென்றது.

2002 நியூட்ரினோ ஆய்விற்காக நோபல் பரிசு கிடைத்ததை அடுத்து, இந்திய அணுசக்தி கழகமும் (Department of atomic energy) இத்திட்டத்தில் முழுவீச்சில் இறங்கியதை அடுத்து இந்திய துணைக்கண்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

தகவல்: அறிவியலாளர் விஜய்சங்கர் அசோகன், சுவீடன் (விஜய்சங்கர் அசோகன் இத்திட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வருகிறார். இந்த நியூட்ரினோ தொடர்பாக பிசாசு துகள் என்னும் புத்தகம் எழுதி உள்ளார்.)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: