59 நிமிடங்களில், 1 கோடி ரூபாய் வரை கடன் - பிரதமர் மோதியின் தீபாவளி பரிசு

நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகின்றோம்.

தினமலர் : பிரதமர் மோதியின் தீபாவளி பரிசு

பட மூலாதாரம், TOSHIFUMI KITAMURA

குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், 59 நிமிடங்களில், 1 கோடி ரூபாய் வரை கடன் உதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி அறிவித்துள்ளதாக தினமலர் நாளிதழ் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், தொழிலாளர் சட்டங்களில் தளர்வு, கம்பெனி சட்டங்களில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தீபாவளி பரிசாக அறிவித்துள்ளார் என அச்செய்தி கூறுகிறது. தில்லியில் நடந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கான நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி பேசியபோது, ஜி.எஸ்.டி செலுத்தும் சிறு குறு தொழில் செய்வோரை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு தொழில் கடன் வழங்க, தனி இணையதளம் உருவாக்கப்பட உள்ளது. இந்த இணையதளம் மூலம் விண்ணப்பிப்போருக்கு, 59 நிமிடங்களில், 1 கோடி ரூபாய் வரை, கடன் வழங்கப்படும்.

ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்யும் நிறுவனங்கள் வாங்கியுள்ள, 1 கோடி ரூபாய் வரையிலான கடன் தொகை மீதான வட்டியில், 2 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியம், 3 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக உயர்த்தப்படும்.

சிறிய தொழிற்சாலைகள், ஆண்டுக்கு ஒரு முறை கணக்கு தாக்கல் செய்யும்படி, தொழிலாளர் சட்டம் தளர்த்தப்படும். கம்பெனி சட்டத்தின் கீழ், சிறிய குற்றங்களுக்கான அபராத தொகையை குறைக்க, சட்ட திருத்தம் செய்யப்படும்.இந்த புதிய மாற்றங்கள், சிறு தொழில் செய்வோர் வாழ்வில், வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும்; இது, தொழில்முனைவோர் மற்றும் தொழிலாளர்களுக்கு, மத்திய அரசின் தீபாவளி பரிசு என்று பிரதமர் மோதி பேசியதாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

தினமணி - சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

சென்னை - சேலம் பசுமைவழிச்சாலை திட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பசுமைவழிச்சாலை திட்டம் தொடர்பாக பல வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. இது தொடர்பாக மத்திய அரசும், மாநில அரசும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகின்றன.

சென்னை - சேலம் பசுமைவழிச்சாலை திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டபோது மனித உரிமை மீறலுக்கு ஆளாக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரிய வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதில் பொதுமக்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ஏன் ரத்து செய்யக்கூடாது என கேள்வி எழுப்பினர்.

பின்னர் இந்த விவகாரத்தில் பொதுமக்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு நீதிபதி உத்தரவிட்டதாக மேலும் இந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - குழந்தையை கழிவறையில் விட்டுச் சென்ற தாய்

27 வயது மிக்க பெண் ஒருவர் சென்னை சூளை மேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையின் கழிவறையில் குழந்தைப் பெற்று அதை விட்டுச் சென்றதாகவும், மருத்துவமனை ஊழியர்களின் புகாருக்கு பிறகு குழந்தை போலிஸாரால் தாயிடம் திருப்பி தரப்பட்டது என்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் செய்தி வெளியாகியுள்ளது.

வயிற்று வலிக்காக மருத்துவமனைக்கு வந்த அந்த பெண் கழிவறைக்கு சென்று குழந்தை பெற்றுள்ளார். பின் மருத்துவமனையின் சிசிடிவி கேமரா மூலம் குழந்தையின் தாயை கண்டுபிடித்து அவரிடம் குழந்தையை ஒப்படைத்துள்ளனர் போலிஸார் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: