சபரிமலை நடை திறப்பு: ”பெண் நிருபர்களை அனுப்பாதீர்கள்” - இந்து அமைப்புகள்

சபரிமலை படத்தின் காப்புரிமை Getty Images

நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ்: "சபரிமலை நடை திறப்பு - பெண் நிருபர்களை அனுப்பாதீர்கள்"

சபரிமலையில் சித்திரை திருநாள் ஆட்ட விசேஷம் பூஜைக்காக இன்று ஒருநாள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங் களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. மேலும், பாதுகாப்புக்கு கமாண்டோ படை உட்பட 2,000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

"கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்குப் பின்னர் கடந்த மாதம் 17-ம் தேதி ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது.

அப்போது, பெண்கள் பலர் சபரிமலைக்கு வந்தனர். அவர்களை ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்பினரும் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. ஐந்து நாட்களுக்குப் பிறகு நடை மூடப்பட்டது. இந்நிலையில், சித்திரை திருநாள் ஆட்ட விசேஷ பூஜைக்காக இன்று ஒருநாள் சபரிமலை நடை திறக்கப்படுகிறது. மாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை ஐயப்பன் கோயில் நடை திறந்திருக்கும்.

இதற்கிடையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது கடமை என்று முதல்வர் பினராயி விஜயன் உறுதி அளித்துள்ளார். சபரிமலைக்கு வரும் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே, சபரிமலைக்கு பெண்கள் வரக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வந்தால் அசம்பாவிதங்கள் எதுவும் நேராமல் தடுக்க, சபரிமலையைச் சுற்றியுள்ள பம்பா, நிலக்கல், இலவங்கல், சன்னிதானம் போன்ற பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் நாளை (6-ம் தேதி) நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

அத்துடன் கூடுதல் டிஜிபி, 2 ஐஜி.க்கள் தலைமையில் பெண் போலீஸார் உட்பட 2,000 போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சபரிமலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கண் காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், சன்னிதானம் மற்றும் பம்பா, நிலக்கல் அடிவார முகாம்களில் 20 பேர் கொண்ட கமாண்டோ படையும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சபரிமலைக்கு வரும் பெண்களைப் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினால், அவர்களை தடுப்பு காவலில் வைக்க போலீஸாருக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. பக்தர்கள் பம்பா, நீலிமலை, அப்பாச்சிமேடு வழியாக சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் பி.பி.நூக் கூறும்போது, ''சபரிமலை கோயிலுக்குள் செல்ல இதுவரை பெண்களிடம் இருந்து கோரிக்கை எதுவும் வரவில்லை. கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று பெண்கள் யாராவது கோரிக்கை விடுத்தால், அவர்களுக்கு போலீஸார் பாதுகாப்பு வழங்குவார்கள். பெண் வழக்கறிஞர்கள் 5 பேர், சபரிமலை கோயிலுக்கு செல்வதற்கு பாதுகாப்பு கேட்டு 2 வாரங்களுக்கு முன்னர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுகுறித்து உறுதியான தகவல் இல்லை'' என்றார்.

இதற்கிடையில், அனைத்து வயது பெண்களையும் கோயிலுக்கு அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவோம் என்று கேரள அரசு கூறிவருவதை கண்டித்து பாஜக, காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாநில அரசைக் கண்டித்தும், சபரிமலை ஐயப்பன் கோயில் பாரம்பரியத்தை பாதுகாக்கவும் வரும் 8-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை ரதயாத்திரை நடத்த மாநில பாஜக முடிவெடுத்துள்ளது. இந்த யாத்திரைக்கு கேரள மாநில பாஜக தலைவர் பி.எஸ்.ஸ்ரீதரன்பிள்ளை தலைமை வகிக்க உள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

முன்னதாக கடந்த மாதம் 5 நாள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்ட போது நடந்த போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 543 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 3,701 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சபரிமலையில் செய்திகள், படங்கள் சேகரிக்க பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் குவிந்துள்ளனர். இதுகுறித்து கேரள டிஜிபி லோக்நாத் பெஹ்ரா கூறும்போது, ''சபரிமலைக்கு செல்ல செய்தியாளர்களுக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. எனினும், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு கருதி சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன'' என்றார்.

இந்நிலையில், ''சபரிமலையில் செய்திகள் சேகரிக்க பெண் நிருபர்களை அனுப்ப வேண்டாம்'' என்று ஊடக நிர்வாகிகளை 'சபரிமலை கர்மா சமிதி', விஎச்பி, இந்து ஐக்கியவேதி போன்ற இந்து அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன. இதுதொடர்பாக ஊடகங்களின் ஆசிரியர்களுக்கு சமிதி தனித்தனியாக கடிதமும் அனுப்பியுள்ளது." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தினமணி: "சொல்லுங்க, சொல்லுங்க"வேண்டுமென்றே கடனைத் திரும்ப செலுத்தாமல் இருப்போர் யார்?"

வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாத நிதி மோசடியாளர்களின் பட்டியலை வெளியிடாமல் இருப்பது குறித்து விளக்கம் கேட்டு ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதேபோல், வாராக்கடன் குறித்து ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் எழுதிய கடிதத்தை பகிரங்கமாக வெளியிடும்படி பிரதமர் அலுவலகம், மத்திய நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி ஆகியவற்றை மத்திய தகவல் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது என்கிறது தினமணி நாளிதழ்.

படத்தின் காப்புரிமை Getty Images

"நிதி மோசடியாளர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என்று தகவல் ஆணையராக முன்பு இருந்த சைலேஷ் காந்தி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை உச்சநீதிமன்ற தீர்ப்பும் உறுதிப்படுத்தியிருந்தது. அந்த தீர்ப்பு வெளியாகி 3 ஆண்டுகள் ஆனபிறகும், மோசடியாளர்களின் பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை. இது உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பு செய்வதாகும்.

ரிசர்வ் வங்கியிலுள்ள பொதுமக்கள் தொடர்புத் துறை அதிகாரி, உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி மோசடியாளர்களின் பட்டியலை வெளியிடாததை கண்டு அதிர்ச்சியோ, ஆச்சரியமோ கொள்ளவில்லை. ஏனெனில் அவர் தனது மேலதிகாரிகளின் உத்தரவுப்படியே நடந்திருப்பார் என்று தெரிகிறது. இதை கருத்தில் கொண்டு,

ரிசர்வ் வங்கியிலுள்ள பொது மக்கள் தொடர்பு துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்ற முடிவுக்கு சிஐசி வந்துள்ளது.

இதுமட்டுமன்றி, நிதிமோசடியாளர்கள் பட்டியலை ரிசர்வ் வங்கியிலுள்ள பொதுமக்கள் தொடர்புத் துறை அதிகாரி வெளியிடாததற்கு அந்த வங்கியின் கவர்னர்தான் முழு பொறுப்பு என்ற முடிவுக்கும் சிஐசி வருகிறது." என்று மத்திய தகவல் ஆணைய ஆணையர் எம்.ஸ்ரீதர் ஆச்சார்யலு கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

படத்தின் காப்புரிமை இந்து தமிழ்
Image caption அந்த 15 லட்சம் என்னாச்சு?

தினத்தந்தி: 'எனது 25-வது வயது வரை தற்கொலை எண்ணம் இருந்தது: ஏ.ஆர்.ரகுமான்'

"தந்தை இறந்ததால் வாழ்க்கையில் வெறுமை ஏற்பட்டதாகவும், 25-வது வயது வரை தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இருந்ததாகவும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது சுயசரிதையில் குறிப்பிட்டு உள்ளார்." என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

படத்தின் காப்புரிமை Getty Images

"இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் வாழ்க்கையை 'நோட்ஸ் ஆப் எ டிரீம்' எனும் பெயரில் கிருஷ்ணா திரிலோக் என்பவர் சுயசரிதையாக எழுதி உள்ளார். இந்த புத்தகம் மும்பையில் வெளியிடப்பட்டது.

இதில் ஏ.ஆர்.ரகுமான் தனது சிறுவயது வாழ்க்கை, இளமை பருவம், சினிமா அனுபவங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து உள்ளார். மேலும் தனக்கும் தற்கொலை எண்ணம் இருந்ததாக அதிர்ச்சி தகவலையும் அவர் வெளியிட்டு உள்ளார்." என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

அந்நாளிதழின் மற்றொரு செய்தி, "சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து, தீபாவளி அன்று கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும், கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடிப்பதையும், விற்பனை செய்வதையும் கண்காணிக்க தமிழகம் முழுவதும் தனி போலீஸ் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன." என்கிறது அந்த செய்தி.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'மரகதக்கல் நடராஜர் சிலை திருட்டு முயற்சி'

ராமநாதபுரத்தில் மங்களநாதர் சாமி கோயிலில் உள்ள மரகதக் கல் நடராஜர் சிலையை திருடும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கூறுகிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி. மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டதாகவும், அவசர மணி அடித்ததால் இந்த கொள்ளை முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: