ராஜா ரவி வர்மாவின் லஷ்மி ஓவியத்தில் உள்ள முகம் யாருடையது?

லஷ்மி படத்தின் காப்புரிமை SACHIN KALUSKAR

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிலர் லஷ்மி பூஜை நடத்துவது வழக்கம். முக்கியமாக வட இந்தியாவில் தீபாவளியை தொடர்ந்து பல வழக்கங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. அதில் லஷ்மி பூஜை செய்வது மிக முக்கியமானது.

அந்த பூஜையின் போது லஷ்மி தேவியின் ஓவியம் வைக்கப்படும். இதுகுறித்து பல வரலாற்று மற்றும் புராணக்கதைகள் இருக்கின்றன. இந்த ஓவியத்தின் மரபிற்கும் இந்திய கலையுலகத்திற்கும் தொடர்பு உண்டு.

உண்மையான லஷ்மி ஓவியத்தை காட்சிப்படுத்தி, வரைந்து வண்ணம் பூசினார்கள் என்று தெரிந்து கொள்வது மிகவும் சுவாரஸ்யமானது.

கடந்த நூற்றாண்டை சேர்ந்த பிரபல ஓவியர் ராஜா ரவி வர்மாவால் வரையப்பட்டது என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இவரே பெரும்பாலான இந்து ஆண் மற்றும் பெண் கடவுள்களை வரைந்துள்ளார் என நம்பப்படுகிறது.

வதோதராவில் உள்ள பிரபல லஷ்மி விலாஸ் மாளிகையின் தர்பார் மண்டபத்தில், ராஜா ரவி வர்மா வரைந்த உண்மையான லஷ்மியின் ஓவியம் இன்றும் உள்ளது.

இந்த ஓவியத்தை ராஜா ரவி வர்மா, 1891ஆம் ஆண்டு வரைந்தார் என்று கூறுகிறார் வதோதராவின் ஃபதேசிங் அருங்காட்சியத்தின் பொறுப்பாளரும், கலை வரலாற்று ஆசிரியருமான மண்டா ஹிங்கொராவ்.

படத்தின் காப்புரிமை SACHIN KALUSKAR

"லஷ்மி மற்றும் சரஸ்வதியின் ஓவியங்களை வரைந்ததை தொடர்ந்து ரவி வர்மா மிகவும் பிரபலமடைந்தார். இந்த படங்கள், மகாராஜா மூன்றாம் சயாஜிராவ் கேய்க்வாட் அவர்களுக்காக தயாரிக்கப்பட்டது. அப்போது வதோதரா மாகாணத்தின் ஆட்சியாளராக அவர் இருந்தார்" என அவர் தெரிவிக்கிறார்.

தன்னை சுற்றி இருந்தவர்களின் முகங்களை பார்த்து ஈர்க்கப்பட்டு, இந்து கடவுள்களின் அழகான ஓவியங்களை ரவி வர்மா வரைந்ததாக மண்டா ஹிங்கொராவ் கூறுகிறார்.

"பின்னர் லஷ்மியின் ஓவியம் அச்சு வடிவத்தில் வந்தது. லஷ்மியின் படங்கள் இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு கிடைக்க இது வழிவகை செய்தது."

ஹிங்கொராவின் கருத்துப்படி, இந்த லஷ்மி படத்தை ரவி வர்மா வரைவதற்கு முன்னதாக தர்பார் மண்டபத்தில் வேறு சில லஷ்மி படங்களும் இருந்தன. ஆனால், இவர் வரைந்ததுபோல எதுவும் லட்சனமாக இருக்கவில்லை. லஷ்மிக்கு மனித வடிவத்தை அளித்தார் ரவி வர்மா.

இவர் வரைந்த படத்தில் லஷ்மி புடவை கட்டியிருப்பார். தர்பார் மண்டபத்தில் உள்ள உண்மையான ஓவியத்தில் லஷ்மியின் இருபுறங்களிலும் யானை இருபுறத்திலும் இரண்டு யானைகள் இருக்கும். ஆனால், அச்சு வடிவத்தில் ஒரு யானையை மட்டுமே இருக்கும்.

ரதன் பரிமு. இவர் மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் கலை வரவாற்று துறையின் முன்னாள் தலைவர் மற்றும் வரலாற்றாசிரியர் ஆவார். அவரின் கருத்துப்படி, அந்த ஓவியத்தில் லஷ்மி அணிந்திருக்கும் புடவை, 9 முழ மராத்தி புடவை என்று தெரிவிக்கிறார்.

படத்தின் காப்புரிமை SACHIN KALUSKAR

ரவி வர்மா, மராத்தி கலாசாரத்தை நன்கு அறிந்திருந்தார் என்பது அவரது ஓவியங்களில் இருந்து நமக்கு தெரிய வருகிறது. மேலும், லஷ்மியின் இந்த குறிப்பிட்ட படம் மிகவும் பிரலமடைந்து நாட்டின் பல்வேறு வீடுகளில் வைக்கப்பட்டது என்று அவர் கூறுகிறார்.

"ரவி வர்மா திருவிதாங்கூர் சமஸ்தானத்தை சேர்ந்தவர். ஆனால், 1882ல் அவர் வதோதராவிற்கு அழைக்கப்பட்டார். மகாராஜா சயாஜி ராவ் கேய்க்வாட் முடிசூட்டிக் கொண்டதை ஓவியமாக வரைய அவர் அங்கு அழைக்கப்பட்டார். அப்போது வதோதராவின் தீவானாக இருந்த டி. மாதவ ராவ், ரவி வர்மாவை கண்டுபிடித்து திருவிதாங்கூரில் இருந்து வதோதராவிற்கு அழைத்து வந்தார்." என்றும் பரிமு தெரிவித்தார்.

"வதோதராவில் இருந்தபோது, சயாஜி ராவிற்காக பல ஓவியங்களை வரைந்தார் ரவி வர்மா. அதில் மிகவும் பிரபலமான இந்த லஷ்மி படம், ரவி வர்மாவின் கற்பனை. இன்று வரை இப்படம் நன்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது."

பின்னர் நாம் தற்போது எங்கும் வைத்திருக்கும் இதன் அச்சிடப்பட்ட படம் வந்தது. பரிமு கூறுகையில், ரவி வர்மா வரைந்த பல ஆண் மற்றும் பெண் கடவுள்களை மும்பை கட்கொபரில் உள்ள அச்சகம் ஒன்று அச்சிட தொடங்கியது என்கிறார்.

1892ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அச்சகம், பிற்காலத்தில் லோனாவாலாவிற்கு மாற்றப்பட்டது. ரவி வர்மாவின் ஓவியங்கள் பெருமளவில் இங்கு தொடர்ந்து அச்சிடப்பட்டு வந்தன. அந்த அச்சகத்தின் உரிமையாளர், "வர்மாவின் ஓவியத்தில் இருந்த இரு யானைகளுக்கு பதிலாக ஒரு யானையை மட்டுமே அச்சிட்டார்" என்கிறார் பரிமு.

அச்சிடப்பட்ட படம் பிரபலமடைந்தது. ரவி வர்மாவின் மற்ற ஓவியங்கள் பலவற்றையும் அச்சிட்டு வந்த இந்த அச்சகம், ஜெர்மனியர்ளுக்கு சொந்தமானது என்று நம்பப்படுகிறது.

இந்த லஷ்மி படம் குறிப்பாக காலண்டரில் அச்சிடப்பட்டதை அடுத்து, இந்தியாவில் உள்ள பெரும்பாலான வீடுகளின் சுவறுகளில் இடம் பெற்றன.

ரவி வர்மா ஓவியங்கள் பலவற்றை வைத்திருக்கிறார் சச்சின் கலுஸ்கர். அவரது ஓவியங்களின் பல பதப்புகளை சச்சின் ஆவணப்படுத்தி வைத்துள்ளார். 2004ஆம் ஆண்டிலிருந்து ரவி வர்மா ஓவியங்களின் அச்சிடப்பட்ட பதிப்புகளை அவர் சேகரித்து வருகிறார்.

"லஷ்மியின் இந்த ஓவியம் அச்சிடப்பட்டிருக்கவில்லை என்றால், நாம் இன்று வேறு ஏதேனும் லஷ்மி உருவத்தை வைத்துக் கொண்டிருப்போம்" என்கிறார் சச்சின்.

ரவி வர்மா வரைந்த அனைத்து பெண் கடவுள்கள், மற்றும் பிற பெண்களின் ஓவியங்கள் அனைத்திலும் ஒரு பொதுவான முகத்தை நாம் பார்க்க முடியும்.

சச்சினின் ஆய்வுபடி, அந்தப் பெண்ணின் முகம் சுகந்தா. "ரவி வர்மாவின் ஓவியங்களில் உள்ள பெண்ணின் முகம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தன. சுகந்தாவின் முகமே, அவரது பெண் கடவுள்கள் மற்றும் பிற பெண்களின் ஓவியத்தில் இடம் பெற்றதாக நம்பப்படுகிறது."

"எனினும், கலை வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் வல்லுநர்கள் இதுகுறித்து பல்வேறு கதைகளை கூறுகின்றனர். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். நாட்டில் நம் மக்கள் பார்க்கும் பெண் கடவுள்களின் ஓவியங்கள் ரவி வர்மாவின் கற்பனையாகும்."

படத்தின் காப்புரிமை Empics

ராஜா ரவி வர்மா மற்றும் சர்ச்சை

ராஜா ரவி வர்மா மற்றும் அவரது வண்ணமிக வாழ்க்கை குறித்து பல சர்ச்சைகள் இருந்தன. அவரை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படத்தினாலும் பல சர்ச்சைகள் ஏற்பட்டன.

'ரங்கரசியா' என்ற படத்தில் ராஜா ரவி வர்மா, சுகந்தாவை காதலித்தது போன்று சித்தரிக்கப்பட்டிருக்கும். சுகந்தா மீது இருந்த காதலினால், அவரது ஓவியங்களுக்கு சுகந்தாவின் முகத்தை ரவி வர்மா பயன்படுத்தியதாக திரைக்கதை நகரும்.

புராண பாத்திரங்கள் சிலவற்றை, ரவி வர்மா நிர்வாணமாக வரைந்ததாகவும் சர்ச்சை இருந்தது.

இந்த ஓவியங்கள் மதத்தை சார்ந்து இருந்ததினால், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் இவரை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ரங்கரசிய படத்திலும் வரும்.

இப்படிப்பட்ட ஓவியங்களை ரவி வர்மா வரைந்ததாலே, சாதாரண மக்களுக்கும் இவை சென்றடைந்தன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்