தீபாவளி: விதியை மீறி பட்டாசு வெடித்த 85க்கும் மேற்பட்டவர்கள் கைதாகி விடுதலை

கைது படத்தின் காப்புரிமை Hindustan Times

தீபாவளி திருவிழாவின்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்வண்ணம் பொதுஇடங்களில் பட்டாசு வெடிக்க ஒதுக்கப்பட்ட நேரம் அல்லாத பிற நேரங்களில் பட்டாசு வெடித்த 85க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

பரபரப்பான சாலைகள் மற்றும் கடைத்தெருக்களில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கோவையில் 85 நபர்கள் மீதும் திருநெல்வேலியில் ஆறு நபர்கள் மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது என காவல்துறை அதிகாரிகள் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினர்

இந்தியா முழுவதும் தீபாவளி திருநாளின்போது பட்டாசு மூலமாக ஏற்படும் காற்றுமாசுபாட்டை குறைப்பதற்காக ஒவ்வொரு மாநில அரசாங்கமும் பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தை அறிவித்துள்ளன. அதன்படி, தமிழகத்தில் காலை 6முதல் 7வரை மற்றும் மாலை 7 மணி முதல் 8வரை பட்டாசு வெடிக்கலாம் என அரசாங்கம்அறிவித்தது.

திருநெல்வேலியில் சேரன்மகாதேவி கடைத்தெருவில் பொருட்கள் வாங்கவந்த மக்களுக்கு தொல்லை ஏற்படுத்தும்விதமாக பட்டாசு வெடித்த ஆறு நபர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்ததாக சேரன்மகாதேவி காவல்நிலைய ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

''அவரவர் வீடுகளுக்கு முன் அல்லது தெருக்களில் சிறிய பட்டாசுகளை வெடிக்கும் குழந்தைகளை யாரும் தடுக்கவில்லை. பொது இடங்களில் அதிக சத்தம் மற்றும் மாசை ஏற்படுத்தும் வெடிபட்டாசுகளை வைத்து மற்றவர்களின் நடமாட்டத்தை தடுத்து,இடைஞ்சல் ஏற்படுத்தும் நபர்களைதான் கைது செய்துள்ளோம். அவர்கள் அனைவரும் 25 முதல் 40 வயது நிரம்பியவர்கள். அரசு அறிவித்த நேரத்தில் பட்டாசு வெடித்தால் எந்த இன்னலும் இல்லை,''என்கிறார் ஸ்டீபன்.

கோவையில் முக்கிய சாலைகள், நெரிசலான பொது இடங்களில் பட்டாசு வெடித்த காரணத்திற்காக 85 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்று கூறிய கோவை மாநகர காவல்துறை ஆணையர் சுமித் சரண், கைதான அனைவரும் விடுவிக்கப்பட்டனர் என்று கூறினார்.

''தற்போது வழக்கு பதிவு செய்துள்ளோம். இது பிணையில் விடுவிக்கக்கூடிய குற்றம் என்பதால் வழக்கு பதிவு செய்த பின்னர் அவர்களை அனுப்பிவிட்டோம். பெரிய பட்டாசுகளை தடையை மீறி வெடித்து பிறருக்கு தொல்லை தரும் நபர்களை மட்டும் கைது செய்கிறோம். பெற்றோர்கள்,குழந்தைகள் யார் மீதும் வழக்கு இல்லை. சாலைகளில் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்திய நபர்கள் கைதாகியுள்ளனர்,''என்று கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்