குஜராத்தில் இந்து முஸ்லிம் பிரச்சனை ஏற்படுத்த திட்டமா?

குஜராத் படத்தின் காப்புரிமை PUNEET BARNALA/BBC

குஜராத் பாவ்நகரில் இனவாத பிரச்சனைகள் ஏற்படுத்தும் வகையில், வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது.

அந்த காணொளியில், முஸ்லிம்களை பொருளாதார அளவில் புறக்கணிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ.க ஊழியர்கள் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள தலாஜா நகரத்தின் தாலுகா அலுவலகத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த விசாரணையை போலீஸார் தொடங்கியுள்ளனர்.

என்ன பிரச்சனை?

வைரலாகிய அந்த வீடியோவில், பாவ்நகர் மாவட்டத்தின் விஷ்வ இந்து பரிஷத் அலுவலர் கிரித் மிஸ்ரி, 'யார் உண்மையான இந்துவோ, அவர்கள் முஸ்லிம் வணிகர்களுடனோ அல்லது முஸ்லிம் மக்களிடமோ எந்த பணம் கொடுக்கல் வாங்கல் ஏதும் வைத்துக் கொள்ள மாட்டார்கள்' என கோஷங்கள் எழுப்பியுள்ளார்.

"முஸ்லிம்களுடன் எந்த தொழிலும் வைத்துக் கொள்ள மாட்டோம் என அனுமருக்கு முன் உறுதிமொழி ஏற்றுக் கொள்கிறோம்."

படத்தின் காப்புரிமை Getty Images

கிரித் மிஸ்ரியை பிபிசி குஜராத்தி தொடர்பு கொண்டபோது, மீண்டும் சில நிமிடங்களில் அழைக்கிறேன் என்று கூறிய அவர், திரும்ப அழைக்கவில்லை.

அந்த காணொளியில் இவருடன், பாவ்நகர் பா.ஜ.க நிர்வாக குழு உறுப்பினர் அஷோக் சோலங்கி, பா.ஜ.க கிஸன் மோர்ச்சாவின் தலைவர் சர்வரியா உள்ளிட்ட பலரும் இருந்தனர்.

அரசு அலுவலகத்தில் அனுமதியற்ற செயல்பாடுகள்

தலாஜாவில் உள்ள தாலுக்கா அலுவலகத்திற்கு பா.ஜ.க ஊழியர்களுடன் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தல் ஊழியர்களும் சென்றுள்ளனர்.

"மஹுவாவில் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் ஜெயேஷ் குஜாரியா கொலை செய்யப்பட்டது குறித்து விரைவான விசாரணை நடத்த வலியுறுத்த அவர்கள் அங்கு வந்ததாக" தாலுக்க அலுவலகத் தலைவர் சௌத்ரி பிபிசியிடம் தெரிவித்தார்.

அரசு அலுகத்திற்குள் அவ்வாறு கோஷங்கள் எழுப்பியது முக்கியமான விஷயமாகும். எனினும் இச்சம்பவம் குறித்து எதுவும் தனக்கு தெரியாது என சௌத்ரி கூறுகிறார்.

"நான் அவர்களின் குறிப்பாணையை வாங்க சென்றேன். அங்கு சுமார் 50 பேர் இருந்தனர். ஆனால், கோஷங்கள் ஏதும் நான் கேட்கவில்லை" என்கிறார் சௌத்ரி.

கொலைக்கும், கோஷங்கள் எழுப்பியதற்கும் என்ன தொடர்பு?

படத்தின் காப்புரிமை Getty Images

மஹுவாவில் அக்டோபர் 23ஆம் தேதி, விஷ்வ இந்து பரிஷதின் தலைவர் ஜெயேஷ் குஜரியா, சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்த 4 இளைஞர்களால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த விசாரணை தொடர்பான குறிப்பாணையை அளிக்கவே உள்ளூர் பா.ஜ.க, வி.எச்.பி, பஜ்ரங் தல் அதிகாரிகள் தாலுக்கா அலுவலகத்திற்கு சென்றனர்.

அதனை தொடர்ந்து பரத்நகர் மாவட்டத்தின் வி எச் பி தலைவர் கிரித் மிஸ்ரி அங்கு உரையாற்றிய போது, முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக ஆத்திரமாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.

'இது தொடர்ந்து நடைபெறுகிறது'

அந்த உரையின் போது என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள, அங்கிருந்த அஷோக் சோலங்கியை பிபிசி குஜராத்தி தொடர்பு கொண்டது. அவர் பாவ்நகர் மாவட்ட பா.ஜ.க குழுவின் உறுப்பினர் ஆவார். 'இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறும்' என்று சாதாரணமாக அவர் கூறுகிறார்

அவர் மேலும் கூறுகையில், "வி எச் பி தலைவரின் கொலை குறித்து விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்த தாலுகா அலுவலகத்துக்கு செல்லும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வாட்சப்பில் செய்தி வந்தது. இதனால்தான் இந்து அமைப்பை சேர்ந்த பலரும் அங்கு திரண்டோம்" என்றார்.

முஸ்லிம்களுடன் எந்த நிதி பரிமாற்றமும் வைத்துக் கொள்ளக்கூடாது என்ற கோஷங்கள் எழுந்தபோது அப்பகுதி பா.ஜ.க தலைவர் சுரேந்திர சர்வயாவும் அங்கு இருந்தார்.

"பேரணி அல்லது பொதுக்கூட்டத்தில் இவ்வாறு கோஷங்கள் எழுப்புவது வழக்கம். ஆனால், ஒரு சமூகத்துக்கு எதிராக சிலர் கோஷங்கள் எழுப்புவார்கள் என்பதை நாங்கள் அறியவில்லை" என்று பிபிசியிடம் பேசிய சர்வயா கூறினார்.

'யாரும் யாரையும் கொலை செய்ய சொல்லவில்லை'

படத்தின் காப்புரிமை Getty Images

பாவ்நகர் மாவட்ட பா.ஜ.க கிஸன் மோர்ச்சாவின் தலைவர் சி பி சர்வயாவும் காணொளியில் இருந்தார். அந்த உரையில் யாரையும் தூண்டும் வகையில் எந்த பேச்சும் இடம்பெறவில்லை என்று பிபிசியிடம் சி பி சர்வயா கூறினார்.

குறிப்பாக வைரலான காணொளி குறித்து கேட்டபோது, அதை அவர் மாற்றிக் கூறினார். அதாவது 'முஸ்லிம்களுடன் பணம் கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ள வேண்டாம் என்றுதான் கூறப்பட்டது. யாரும் யாரையும் கொலை செய்ய சொல்லவில்லை' என்றார்.

இனவாத பதற்றத்தை உருவாக்க திட்டமா?

வைரலான வீடியோவை பார்த்த முஸ்லிம் சமூகத்தினர் கவலை அடைந்தனர். அதனையடுத்து பாவ்நகர் எஸ்.பி-யிடம் முஸ்லிம் தலைவர்கள் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவை தயாரித்த முஸ்லிம் ஏக்தா மார்ச்சை சேர்ந்த இம்தியாஸ் பதன், முஸ்லிம்களுக்கு எதிராக பேசியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்ட்டுக்கொண்டுள்ளார்.

சிறுபான்மை சமூகத்தின் தலைவர் முஸ்தக் மெமன் பிபிசியிடம் பேசுகையில், "தலாஜா நகரத்தின் மக்கள் தொகை சுமார் 30 ஆயிரம், அதில் 1500 பேர் முஸ்லிம்கள்" என்றார்.

படத்தின் காப்புரிமை AFP

"இங்கு இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். சில வெளிநபர்கள் இந்த அமைதியை கெடுத்து பிரச்சனை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்" என்றும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் வரும் நேரங்களில் மட்டும் இந்து முஸ்லிம் பிரச்சனை ஏற்படுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.

"முஸ்லிம் சமூகத்தினரிடம் இருந்து மனு அளிக்கப்பட்டுள்ளது. நான் உடனேயே விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்" என பாவ்நகர் எஸ்.பி பிரவீன் மல் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்