"நாட்டைவிட்டு வெளியேறுங்கள்" - பேட்டிங்கை விமர்சித்த ரசிகரை சாடிய விராட் கோலி

விராட் கோலி படத்தின் காப்புரிமை Getty Images
Image caption விராட் கோலி

நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி - "நாட்டைவிட்டு வெளியேறுங்கள்" - ரசிகரை கடுமையாக விமர்சித்த விராட் கோலி

தனது பேட்டிங்கை விமர்சித்த ரசிகரை நாட்டை விட்டு வெளியேறும்படி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சமீபத்தில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார்.

இந்த நிலையில் கோலியை விமர்சித்து அவரது டுவிட்டரில் ரசிகர் ஒருவர் வித்தியாசமான கருத்தை பதிவிட்டு இருந்தார். அதில், 'விராட் கோலியை ரொம்பவே தூக்கி வைத்து பேசுகிறார்கள். என்னை பொறுத்தவரை விராட் கோலியிடம் சிறப்பு வாய்ந்த பேட்டிங் திறமை இருப்பதாக தெரியவில்லை. இந்திய வீரர்களை காட்டிலும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களின் பேட்டிங்கையே நான் மிகவும் ரசித்து பார்க்கிறேன்' என்று குறிப்பிட்டு இருந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த கருத்து ஏனோ விராட் கோலிக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. உடனடியாக, தனது பெயரில் புதியதாக உருவாக்கப்பட்ட செயலியில் வீடியோ பதிவை கோலி வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோ பதிவில், 'இந்த கருத்தை கூறிய அந்த ரசிகர் இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இந்தியாவை விட்டு வெளியேறி வேறு எங்காவது வாழலாம். மற்ற நாடுகளை நேசித்துக் கொண்டு ஏன் அந்த ரசிகர் இந்தியாவில் வசிக்க வேண்டும். உங்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்பதற்காக நான் கவலைப்படவில்லை. மற்ற நாடுகளை விரும்பிக்கொண்டு இந்தியாவில் இருக்க வேண்டுமா? இவற்றில் எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.' என்று கோலி காட்டமாக கூறியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - அயோத்யாவில் 150 மீட்டர் உயர ராமர் சிலை

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption யோகி ஆதித்யநாத்

அயோத்யாவில் 150 மீட்டர் உயர ராமர் சிலை அமைக்கப்படுமென்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு அயோத்தியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தென் கொரிய அதிபரின் மனைவி கிம் ஜுங்-சோக்கை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். பின்னர் பேசிய அவர், அயோத்தியில் 150 மீட்டர் உயரம் கொண்ட ராமர் சிலையை உத்தரபிரதேச அரசு நிறுவவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசு அயோத்தியில் ராமர் கோயிலை பிரம்மாண்டமாக கட்டுவதற்குறிய வழிகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

தமிழ் இந்து - 20 தொகுதிகளிலும் போட்டியிட தயார் - கமல்ஹாசன்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கமல் ஹாசன்

20 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளதாக தமிழ் இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தனது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு பேசிய கமல், "20 தொகுதிக்கான இடைத்தேர்த லில் கண்டிப்பாக போட்டியிடு வோம். களப்பணியாளர்கள் 80 சதவீதம் தயாராக உள்ளனர். பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எங்களுடைய தேர்வு முறை யும், நேர்காணல் முறையும் அழுத்தமாகவும், ஆழமாகவும் இருக்கும் என்பதால் பணியில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.

20 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடக்கும் என்று எதிர்ப் பார்க்கிறோம். எதுவாக இருந்தா லும், நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டியது மக்கள்தான். அவர் களுக்காகத்தான் நான் அரசிய லுக்கே வந்தேன். திராவிடக் கட்சிகளுடன் நான் கூட்டணி வைக்கப் போவதாக தகவல்கள் வருகின்றன. அதனை நான் தகவலாகவே பார்க்கிறேன்" இவ்வாறு கமல் ஹாசன் தெரிவித்ததாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி - ரஷ்ய நகரத்துக்கு 'கூடங்குளம்' என பெயர் சூட்டல்

படத்தின் காப்புரிமை Getty Images

கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்துக்கு தேவையான சாதனங்களை உற்பத்தி செய்யும் ரஷிய அமைந்துள்ள வால்கோடோன்ஸ்க் நகரின் ஒரு பகுதிக்கு 'கூடங்குளம்' என்று பெயரிட்டுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவின் தென் பகுதியிலுள்ள வால்கோடோன்ஸ்க் நகரத்தில் செயல்பட்டு வரும் ஆட்டமாஷ் நிறுவனம்தான் கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்துக்கு தேவையான சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிலையில், அந்த நிறுவனத்துக்கு அருகிலுள்ள ஒரு பகுதிக்கு 'கூடங்குளம்' என்று ரஷ்ய அரசு பெயர் சூட்டியுள்ளது என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :