பணமதிப்பு நீக்கத்தால் பாதிக்கப்பட்டார்களா ரயில் கொள்ளையர்கள்? - விவரிக்கும் வாக்குமூலம்

நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி: "ரயிலில் கொள்ளையடித்த பணத்தை செலவு செய்துவிட்டோம்"

சென்னை - சேலம் விரைவு ரயிலில் கொள்ளையடித்த ரூ.5.78 கோடியையும் பங்கு போட்டு செலவு செய்து விட்டதாக சிபிசிஐடி விசாரணையில் கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

சேலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு கடந்த 2016 ஆகஸ்ட் 8- ஆம் தேதி இரவு புறப்பட்ட ரயிலில் இணைக்கப்பட்டிருந்த சரக்குப் பெட்டியில் ரூ. 342 கோடி கிழிந்த, சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் 169 மரப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன. இந்த ரயிலின் மேற்கூரையில் கொள்ளையர்கள் துளையிட்டு, 4 மரப் பெட்டிகளில் இருந்த ரூ.5.78 கோடியை கொள்ளையடித்துச் சென்றனர்.

கொள்ளைச் சம்பவம் சேலம் - விருத்தாச்சலம் இடையே நடந்திருக்க வேண்டும் என்பதை உறுதி செய்த சிபிசிஐடி அதிகாரிகள், சேலம் - விருத்தாச்சலம் இடையே அந்த ரயிலில் பயணம் செய்தவர்களின் கைப்பேசி உரையாடல்களை ஆய்வு செய்தனர். இதில் சந்தேகத்துக்குரிய நபர்களின் பேச்சுகளை மட்டும் தனியாக எடுத்து ஆய்வு செய்தனர். மேலும் இஸ்ரோ உதவியுடன் குற்றவாளிகளைத் தேடினர்.

பல கட்டங்களாக நடத்தப்பட்ட விசாரணையில், மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தைச் சேர்ந்த மோஹர் சிங் தலைமையிலான கொள்ளைக் கும்பல் இந்தப் பணத்தைக் கொள்ளையடித்தது சிபிசிஐடி அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச மாநிலம் குணா மத்திய சிறையிலும், அசோக்நகர் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்த கொள்ளைக் கும்பல் தலைவன் எச். மோஹர் சிங், பி.ருசி பார்தி, ச.கலியா என்ற கிருஷ்ணா, மகேஷ் பார்தி, ந.பிராஜ்மோகன் ஆகிய 5 பேரை தமிழக சிபிசிஐடி போலீஸார் கடந்த திங்கள்கிழமை கைது செய்தனர்.

படத்தின் காப்புரிமை Express Photo

இந்நிலையில் அந்தக் கொள்ளையர்களிடம் சிபிசிஐடி போலீஸார் வெள்ளிக்கிழமை நடத்திய விசாரணையில், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னரே பங்கு பிரித்து செலவு செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆனால் கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற மூன்றே மாதத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதால் முழு பணத்தையும் செலவு செய்திருக்க வாய்ப்பு இல்லை என்று கருதி வரும் போலீஸார் அவர்களிடம் மேலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளையடித்த பணத்தை தங்கமாக மாற்றி பதுக்கி வைத்திருக்கலாம் என்ற கோணத்திலும் அல்லது அந்தப் பணத்தில் தங்கமாகவோ, சொத்துகளாகவோ வாங்கப்பட்டிருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறாக விவரிக்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

இந்து தமிழ்: "பாஜகவுக்கு எதிரான தேசிய அணியில் திமுக"

பாஜகவுக்கு எதிரான தேசிய அளவிலான கூட்டணியில் இணைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் விடுத்த அழைப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். தேசிய அளவில் வலுவான கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசிக்க விரைவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடக்கும் என ஸ்டாலின் தெரிவித்தார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

"பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, வரும் மக்களவைத் தேர்தலில் மோடி அரசை வீழ்த்த தேசிய அளவில் மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலை வருமான தேவ கவுடா, கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோரை இதுவரை அவர் சந்தித்துப் பேசியுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, திமுக தலைவர் ஸ்டாலினை சந்திப்பதற் காக சென்னை ஆழ்வார்பேட்டை யில் உள்ள அவரது இல்லத்துக்கு நேற்றிரவு 7.30 மணி அளவில் சந்திரபாபு நாயுடு வந்தார். அவரை ஸ்டாலின் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். அதைத் தொடர்ந்து அவர்கள் சுமார் 45 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர்" என்கிறது அந்த செய்தி.

"பிரதமர் மோடி தலைமையிலான மக்கள் விரோத, தேச விரோத பாஜக அரசை வீழ்த்த தேசிய அளவில் வலுவான கூட்டணி அமைக்க சந் திரபாபு நாயுடு முயற்சித்து வருகிறார். இந்தக் கூட்டணியில் இணையுமாறு என்னிடம் நேரில் அழைப்பு விடுத்தார். அதற்கு மனப்பூர்வமாக ஆதரவு தெரிவித்தேன்.

மோடி ஆட்சியில் மாநில உரிமைகள் முழுமையாக பறிக்கப்பட்டு வருகின்றன. சிபிஐ, ரிசர்வ் வங்கி உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகள் சிதைக்கப்படுகின்றன. பணமதிப்பு நீக்கம் போன்ற நடவடிக்கைகளால் மக்கள் பெரும் துயரம் அடைந்துள்ளனர். எனவே, இந்த அரசை வீழ்த்த அனைத்து மாநிலங்களில் உள்ள கட்சிகளும் இணைய வேண்டும் என ஏற்கெனவே நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசிக்க விரைவில் டெல்லி அல்லது அனைவருக்கும் வசதிப்படும் மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடக்கும். அதில் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்" என்று ஸ்டாலின் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தினத்தந்தி: "காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு"

"அந்தமான் கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இருக்கிறது என்றும், புயலாக மாறினால் தமிழகத்துக்கு மழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது" என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

படத்தின் காப்புரிமை Getty Images

"தாய்லாந்து, வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள மலேசியா தீபகற்ப பகுதியில் நேற்று முன்தினம் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மத்திய அந்தமான் கடல் பகுதியில் நிலவி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்து வரும் 3 தினங்களில் மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வலுப்பெறுகிறது.

வலுப்பெறும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இருக்கிறது. புயல் மாற்றம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வருகிற 12-ந்தேதி சரியாக கணித்து சொல்ல முடியும். இது புயலாக மாறும் பட்சத்தில் தமிழகத்தில் ஓரளவுக்கு நல்ல மழை இருக்கும்" என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

"சாமியார் சதுர்வேதி தப்பி ஓட்டம்"

சென்னை தொழிலதிபரின் மனைவி-மகளை கடத்தி சென்று சிறை வைத்து கற்பழித்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சாமியார் சதுர்வேதி தப்பி ஓடிவிட்டார். அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள் என்கிறது அந்நாளிதழின் மற்றொரு செய்தி.

படத்தின் காப்புரிமை Facebook

"சென்னையில் தொழிலதிபரின் மனைவி- மகளையும் வீட்டில் சிறை வைத்து, பின்னர் ஆந்திராவுக்கு கடத்தி சென்று கற்பழித்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் சாமியார் சதுர்வேதி. இவர் சென்னை தியாகராயநகர் பசுல்லா சாலையில் ஸ்ரீராமானுஜர் மிஷன் டிரெஸ்ட் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வந்தார். முதுகலை பட்டதாரியான இவர் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று தனது அறக்கட்டளை அலுவலகத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்துவார். தன்னை கிருஷ்ணனின் அவதாரம் என்று கூறி வந்தார்.

சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தொழில் ரீதியாக தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை தீர்த்து வைக்க சாமியார் சதுர்வேதியை நாடினார். பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக கூறி அவரது வீட்டிற்கு சென்ற சாமியார் சதுர்வேதி பல்வேறு பூஜைகளை செய்தார்.

அப்போது தொழிலதிபரின் மனைவியும், 16 வயது மகளும் சாமியாருக்கு பக்தர்கள் ஆனார்கள். பிரச்சனையை தீர்ப்பதாக கூறி அவர்களின் வீட்டிற்குள் புகுந்த சாமியார் சதுர்வேதி, வீட்டின் கீழ்தளத்தை நாளடைவில் அபகரித்துக்கொண்டார்.

வீட்டை அபகரித்ததோடு நிற்காமல், தொழிலதிபரின் மனைவியையும், மகளையும் தனக்கு வசியப்படுத்திக் கொண்டார். மேலும் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது" என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "பன்றி காய்ச்சல் போதுமான மருந்துகள் உள்ளன"

பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு மருந்துகள் போதுமான அளவில் உள்ளது என்று மருந்து கட்டுபாடு இயக்குநர் சிவபாலன் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்.

அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் தனியார் மருந்து கடைகளிலும் இந்த மருந்துகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்