தேசியவாதத்தின் பெயரால் பரப்பப்படும் போலிச் செய்திகள் #BeyondFakeNews

हिंदू राष्ट्रवादी படத்தின் காப்புரிமை Getty Images

போலிச் செய்திகள் பரப்பப்படுவதற்கு தேசியவாதமும் என்ற காரணமும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை பிபிசியின் புதிய ஆய்வு காட்டுகிறது.

இந்தியா, கென்யா, நைஜீரியா ஆகிய நாடுகளில் இது தொடர்பான ஆய்வு விரிவான முறையில் பிபிசியால் நடத்தப்பட்டது.

மறையாக்கம் செய்யப்பட்ட சாட் செயலிகளுக்குள் எவ்வாறு போலி செய்திகள் பரவுகின்றன என்பதை மிகவும் ஆழமாக புரிந்துகொள்ள இந்த ஆய்வறிக்கை தகவல் அளிக்கிறது.

செய்திகள் பகிரப்படுவது தொடர்பில், உணர்ச்சிவயப்படும் நிலைதான் முக்கிய காரணமாக அமைகிறது.

Beyond Fake News-இன் ஒரு பகுதியாக வரும் இந்த ஆய்வு சர்வதேச அளவில் மிகப் பெரிய அளவில் தவறான தகவல்களுக்கு எதிரான ஒரு முன்னெடுப்பாக உள்ளது.

பிபிசி ஆய்வின் முழு அறிக்கை

போலிச் செய்திகளை பரப்புவது யார், அவர்கள் எப்படி பரப்படுகிறார்கள் போன்ற விவரங்களை உள்ளடக்கி பிபிசி மேற்கொண்ட ஆய்வின் முழு அறிக்கை இது.

போலி செய்திகளை யார், எப்படி பரப்புகிறார்கள்? பிபிசி நடத்திய ஆய்வின் முழு அறிக்கை

திங்கள்கிழமை (நவம்பர் 12)

இந்தியாவில் நாட்டை வலுவாக்கும் நோக்கங்களுக்காக தேசியவாதம் தொடர்பான செய்திகளை, அந்த செய்தியின் உண்மைத் தன்மையை அறிய முற்படுவதை தாண்டி தேசிய அடையாளம் என்ற அம்சத்தின் ஒருங்கிணைப்பால் அச்செய்திகளை மக்கள் பகிர்வதாக பிபிசியின் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சாதாரண குடிமக்களின் பார்வையில் போலிச் செய்திகள் பரவுவது குறித்த முதல் ஆராய்ச்சி பதிப்பின் மூலம் இந்த கண்டுபிடிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ட்விட்டர் பதிவுகளுக்குள் ஆராயும் இந்த அறிக்கை, தங்கள் ஃபோன்களை அணுகுவதற்கு பிபிசிக்கு பயன்பாட்டாளர்கள் அனுமதி வழங்கிய பிறகு, மறையாக்கம் செய்யப்பட்ட தங்கள் தகவல் செயலிகளில் எவ்வாறு மக்கள் செய்திகளை பகிர்கின்றனர் என்று இந்த அறிக்கை ஆராய்கிறது. இன்று தொடங்கப்படும் பிபிசியின் Beyond Fake News திட்டத்தின் ஒரு பகுதியாக வரும் இந்த ஆராய்ச்சி, சர்வதேச அளவில் மிகப் பெரிய அளவில் தவறான தகவல்களுக்கு எதிரான ஒரு முன்னெடுப்பாக உள்ளது.

ஆய்வின் முக்கிய வெளிப்பாடுகள்

•வன்முறையைத் தூண்டும் என்று தாங்கள் கருதும் தகவல்களை பகிர்வதற்கு மக்கள் தயங்குகிறார்கள். ஆனால், தேசியவாதம் தொடர்பான தகவல்களை பகிர்வது தங்கள் கடமை என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்தியாவின் வளர்ச்சி, இந்து வலிமை, இந்து மதம், இழந்த பெருமையின் மீட்சி ஆகியவை குறித்த போலிச் செய்திகளை அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்வதற்கு சிறு முயற்சியும் செய்யாமல் பகிர்கிறார்கள். இத்தகவல்களை பகிர்வதன் மூலம் தேசக் கட்டுமானத்தில் ஈடுபடுவதாக அவர்கள் நினைக்கிறார்கள்.

•கென்யாவிலும், நைஜீரியாவிலும் போலிச் செய்திகளைப் பரப்புவதற்குப் பின்னால் ஒரு கடமை உணர்ச்சி இருக்கிறது. ஆனால், அது தேசக்கட்டுமானம் செய்யும் கடமை உணர்ச்சி அல்ல. திடீர்ச் செய்திகளை, அவை உண்மையாக இருக்கும்பட்சத்தில் தங்கள் தொடர்பில் இருப்பவர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றால் அவற்றைப் பகிர்வது தங்கள் கடமை என்று அங்குள்ள மக்கள் நினைக்கிறார்கள். தகவல்களை அணுகுவது ஜனநாயகமயமாகவேண்டும், அதாவது தகவல்கள் அனைவரையும் சென்று சேரவேண்டும் என்ற கடமை உணர்ச்சியும் இந்த நாடுகளில் போலிச் செய்திகள் பரவுவதில் ஒரு காரணியாக இருக்கிறது.

•இந்தியாவில் போலிச் செய்தியும், நரேந்திர மோதிக்கு ஆதரவான அரசியல் நடவடிக்கையும் ஒன்றுடன் ஒன்று கலந்திருப்பதாக இந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. இந்தியாவில் இடதுசாரி சார்புடைய போலிச் செய்தி பரப்புவோர், அப்படி யாரும் இருக்கும்பட்சத்தில், சரிவர ஒருங்கிணைக்கப்படாதவர்களாக இருக்கிறார்கள். ஆனால், வலதுசாரி சார்புடைய போலிச் செய்தி பரப்புவோர் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இதனால், இடதுசாரி சார்புடைய போலிச் செய்திகளைவிட வலதுசாரி சார்புடைய செய்திகள் மேலும் வேகமாக பரவுகின்றன.

•இந்தியா, கென்யா, நைஜீரியா ஆகிய நாடுகளில் ஒரு செய்தியை பகிர்வதன் மூலம் அது உண்மையா என்பதை வேறு யாராவது பரிசோதித்துச் சொல்வார்கள் என்று கருதி மக்கள் பகிர்கிறார்கள். இதன் மூலம் போலிச் செய்தி பரவுவதற்கு தங்களை அறியாமலே அவர்கள் உதவுகிறார்கள்.

தேசியவாதமே இந்தியாவில் போலிச் செய்திகள் பரவுவதற்கான உந்துசக்தியாக இருக்கிறது என்று இந்த ஆய்வு சொல்கிறது. அதே நேரம், கென்யாவிலும், நைஜீரியாவிலும் விஷயம் வேறுவிதமாக இருக்கிறது.

கென்யாவில் பகிரப்படுகிற போலிச் செய்திகள் பெருமளவில் தேசிய தவிப்புகளையும், விருப்பார்வங்களையும் பிரதிபலிக்கின்றன. இந்த நாட்டில் வாட்சாப் உரையாடல்களில் பரவும் போலிச் செய்திகளில் மூன்றில் ஒரு பங்கு, பணம், தொழில்நுட்பம் தொடர்பான மோசடி குறித்த போலிச் செய்திகள். நைஜீரியாவில் பயங்கரவாதம், ராணுவம் தொடர்பான தகவல்களும் வாட்சாப்பில் பரவலாக பகிரப்படுகின்றன.

படத்தின் காப்புரிமை BLOOMBERG

கென்யாவிலும் நைஜீரியாவிலும் செய்தியின் மூலத்தை தெரிந்துகொள்வதற்கான ஆர்வம், இந்தியாவில் உள்ளதைவிட மிகவும் அதிகம். ஆனாலும், இந்த இரு நாடுகளிலும் மக்கள் மைய நீரோட்ட ஊடகங்கள் மூலம் சரிபாதியும், போலிச் செய்தியைப் பரப்புவோர் என்று அறியப்பட்டவர்கள் மூலம் சரிபாதியும் செய்திகளை நுகர்கின்றனர்.

செய்திகளை அறிந்துகொள்வதில் பின்தங்கிவிடக்கூடாது என்பதில் ஆப்பிரிக்க நாடுகளில் மக்கள் அதிக அக்கறை காட்டுகிறார்கள். மற்றவர்களுக்குத் தெரியாததைத் தெரிந்துவைத்திருப்பவர்களாக பார்க்கப்படுவது அங்கு சமூக கௌரவம். இந்தக் காரணங்களால், இந்த ஆப்பிரிக்க நாடுகளில் மக்களுக்கு செய்திகளை சரிபார்க்கவேண்டும் என்ற நல்ல எண்ணம் இருந்தாலும், தனிப்பட்ட வலைப்பின்னல்களில் போலிச் செய்திகள் கசிந்து பரவுகின்றன.

பிபிசி உலக சேவையின் பார்வையாளர் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர் சாந்தனு சக்ரவர்த்தி கூறுகையில்: ''போலி செய்திகள் பரவுவது குறித்து தாங்கள் கவலை கொள்வதாக கூறிக்கொண்டாலும், சாதாரண மக்களும் ஏன் போலி செய்திகளை பகிர்கிறார்கள் என்பதே இந்த ஆராய்ச்சியின் முக்கியமான நோக்கமாகும். போலி செய்திகள் தொடர்பான நிகழ்வை.

இந்தியா, கென்யா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்வேறு கோணங்களில் டிஜிட்டல் நெட்வொர்க் பகுப்பாய்வு மற்றும் 'பிக்டேட்டா' தொழில்நுட்பங்களுடன் இணைத்து ஆராய ஆழமான மற்றும் தரமான ஆராய்ச்சியுடன் இந்த அறிக்கை வழங்குகிறது. இந்த நாடுகளில் போலி செய்திகள் தொழில்நுட்பம் வாயிலாக பரவும் ஒரு சமூக நிகழ்வாக இருப்பதை சரியாக புரிந்து கொள்வது குறித்த திட்டங்களில் இது முதலாவது ஆகும். இந்த ஆய்வு கண்டுபிடிப்புகள் போலி செய்திகள் தொடர்பான உரையாடல்களின் நுணுக்கம் மற்றும் ஆழத்தை அதிகரிக்கும் என்றும், போலி செய்திகள் குறித்த மேலும் ஒரு விரிவான விசாரணைக்கு இந்த கண்டுபிடிப்புகளை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பயன்படுத்துவார்கள் என்றும் நான் நம்புகிறேன்'' என்று தெரிவித்தார்.

பிபிசி உலக சேவை குழுமத்தின் இயக்குநர் ஜேமி ஆங்கஸ் கூறுகையில், "பெரும்பாலான ஊடகங்களில் மேற்கத்திய நாடுகளில் போலிச் செய்திகள் அணுகப்படுவது பற்றி கவனம் செலுத்தப்படும் நிலையில், உலகின் மற்ற பகுதிகளில் சமூகவலைதளங்களில் இது போன்ற கட்டுரைகள், கதைகளை பகிரும்போது நாட்டை வளர்ப்பது என்ற கோட்பாடு உண்மைநிலை குறித்த நிலைப்பாட்டை வெல்லும் வகையில் அமைந்துவிடுகிறது என்பதற்கு பலமான ஆதாரங்களை இந்த அறிக்கை வழங்குகிறது. பிபிசியின் #BeyondFakeNews என்ற தவறான தகவல் பரப்பலுக்கு எதிரான முன்னெடுப்பு ,போலியான தகவல்கள் பரவுவதை தடுப்பது என்ற எங்களின் தீர்க்கமான முடிவை குறிக்கிறது. மேலும் இந்த பணிக்கு உதவிடும் வகையில் இந்த ஆராய்ச்சி இது தொடர்பான விலைமதிப்பற்ற நுண்ணறிவை அளிக்கிறது'' என்று கூறினார்.

மற்ற கண்டுபிடிப்புகள்

பேஸ்புக் பயன்பாடு:

நைஜீரியா மற்றும் கென்யாவில் சமூக ஊடகமான பேஸ்புக்கின் பயன்பாட்டாளர்கள் போலி மற்றும் உண்மையான செய்தி முகமைகளை சம அளவில் நுகர்கின்றனர். தாங்கள் பயன்படுத்தும் செய்தி முகமையின் தன்மை குறித்து அவர்கள் பெரிதும் அக்கறை கொள்வதில்லை.

ஆனால், இந்தியாவின் இதன் நிலை வேறு. பேஸ்புக்கில் உண்மையான செய்தி முகமைகளையோ அல்லது நன்கு அறியப்பட்ட போலி செய்தி முகமைகளையோ அல்லது இரண்டையுமோ செய்திகளுக்காக நுகர்பவர்களாக உள்ளனர். போலிச் செய்திகள் தொடர்பாக நன்கு அறியப்பட்ட செய்தி முகமைகளில் ஆர்வமுள்ளவர்கள் அரசியல் மற்றும் அரசியல் கட்சிகளின்பால் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது எங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது.

தலைமுறைகளுக்கிடையேயான வேறுபாடு

முந்தைய தலைமுறையினரைவிட கென்யா மற்றும் நைஜீரியாவை சேர்ந்த இன்றைய தலைமுறையினர் தங்களது நாட்டின் பழங்குடியினர் மற்றும் மதநம்பிக்கை சார்ந்த விஷயங்களை பகிர்வதில் குறைவான அளவு நாட்டத்தை கொண்டுள்ளனர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஆட்கொல்லி போலிச் செய்திகள்: நாம் ஏன் கவலை அடைய வேண்டும்? - விளக்கும் நாடகம்

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வை பொறுத்தவரை, முந்தைய தலைமுறையினரை போன்றே இன்றைய இளம் தலைமுறையினர் தேசியவாதத்தை வெளிப்படுத்தும் விஷயங்களில் நாட்டம் கொண்டுள்ளனர்.

வார்த்தைகளை விஞ்சிய படங்கள்

உலகளவில் பகிரப்படும் பெரும்பாலான போலிச் செய்திகள், கட்டுரை வடிவை விட படங்கள் மற்றும் மீம்களாகவே உள்ளதாக இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

சமூக வலைதளங்களின் இயல்பு, காட்சி செய்தி ஊடகங்களின் வாயிலாக எவ்வாறு போலி செய்திகளை பரப்புவதற்கு வழிவகுக்கிறது என்பதை இந்த ஆய்வு ஆழமாக விளக்குகிறது.

இந்த அறிக்கை ஃபேஸ்புக், கூகுள், மற்றும் ட்விட்டர் ஆகிய சமூகவலைதளங்கள் போலிச் செய்திகள் குறித்து தங்கள் தளங்களில் பேசும் அதே நாளில் வெளியாகியுள்ளது. இந்த பிரச்சனை தொடர்பாக அவர்கள் டெல்லியில் நடைபெறும் பிபிசியின் Beyond Fake News நிகழ்ச்சியில் கலந்தாலோசிக்க உள்ளனர். அது பிபிசி உலக சேவை செய்தியில் 16.30 (ஜி.எம்.டி) மணிக்கு ஒளிப்பரப்பப்படும்

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும் : jyoti.priyadarshi@bbc.co.uk

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :