பாஜகவை கட்டி எழுப்பிய அத்வானி பிரதமராக முடியாதது ஏன்?

பிரதமர் படத்தின் காப்புரிமை Getty Images

அண்மையில் 91வது பிறந்த நாள் கண்ட பாஜக மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானி பாஜகவை அடித்தளத்தில் இருந்து கட்டி எழுப்பிய முக்கியத் தலைவர்களில் ஒருவர். ஆனால் இன்று அவர் தீவிர அரசியலில் இல்லை.

ஒரு காலத்தில் அத்வானிக்கு நெருக்கமானவராக இருந்தவர் பிரதமர் நரேந்திர மோதி. ஆனால் 2014இல் மோதி, பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு இருவருக்கும் இடையிலான உறவு கசந்துபோனது.

நவம்பர் எட்டாம் தேதியன்று அத்வானியின் பிறந்த நாளன்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோதி, அவர் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.

அத்வானியின் அரசியல் வாழ்க்கை போராட்டங்கள் நிறைந்தது. கட்சியை வளர்க்க வாழ்க்கை முழுவதும் போராடிய அவருக்கு, அதன் பலன் கிட்டவேயில்லை. பிரதமர் பதவிக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை என்பது பழங்கதை ஆனாலும், குடியரசுத் தலைவர் பதவியில் அமரவைத்து அவருக்கு மரியாதை செய்ய பாஜக தலைமை ஏன் முன்வரவில்லை? அவர் அரசியல் ரீதியாக செய்த தவறுகள் என்ன?

ஒரு காலத்தில் பாஜக மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானியின் பெயர் நாடு முழுவதும் பிரபலமாக இருந்தது. பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் அத்வானி என்றும் அனைவரும் கருதினார்கள்.

1984ஆம் ஆண்டு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற நிலையில் இருந்து 1998இல் ஆளும் கட்சி என்ற நிலைக்கு பாரதிய ஜனதா கட்சியை உயர்த்தியதில் அத்வானியின் பங்கு முக்கியமானது.

படத்தின் காப்புரிமை Getty Images

அந்த சமயத்தில் அவர் விதைத்த விதை, பலனத்தபோது அதை அறுவடை செய்யும் வாய்ப்பு அத்வானிக்கு கிடைக்கவில்லை. 2004 மற்றும் 2009ஆம் ஆண்டு தேர்தல்களில் தோல்வியடைந்தபோது, 'குறைந்து செல் விளைவு கோட்பாடு' (Law of Diminishing Returns) என்பது அத்வானிக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது என்று சொல்லலாம். தன்னால் வளர்த்து விடப்பட்ட நரேந்திர மோதிக்கு, தனக்கு கிடைக்க வேண்டிய பதவியை விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை அத்வானிக்கு ஏற்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியை மிகவும் நெருக்கமாக கவனித்து வருபவரும், இந்திரா காந்தி மையத்தின் தலைவராக பதவி வகிக்கும் ராம் பகதூர் ராயிடம் பிபிசி பேசியது. "2004 தேர்தல்களில் தோல்வி அடைந்த பிறகு பாரதிய ஜனதாக் கட்சியும் அதன் கூட்டாளிகளும் புதிய தலைமை தேவை என்று நினைத்தார்கள். ராகுல் காந்தி காங்கிரஸின் தலைவராகப் போகிறார் என்ற செய்தி வெளியானது இந்த கருத்துக்கு வலுவூட்டியது".

புதிய தலைமையில் உரிய இடம் கிடைக்கவில்லை

"தலைமையில் மாற்றம் ஏற்பட்டாலும் அத்வானிக்கு இடம் கிடைக்காது என்றே தோன்றியது. எனவே, பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பில் அத்வானிக்கு இருந்த செல்வாக்கின் காரணமாக, தலைமையில் மாற்றம் என்ற கருத்தை அவர் முன்னெடுக்கவில்லை. அதற்கு பதிலாக, பாஜகவின் அப்போதைய தலைவர் வெங்கய்ய நாயுடுவை பதவி விலக உத்தரவிட்ட அத்வானி, கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார்" என்று சம்பவங்களை கோர்வையாக நினைவுகூர்கிறார் ராம் பகதூர் ராய்.

"இந்த நடவடிக்கைகள், பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடையே வரவேற்பு பெறவில்லை." என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனால் அத்வானிக்கு இருந்த செல்வாக்கு அபரிதமானது. அவர் விரும்பியிருந்தால் தானே பிரதமராக பதவியேற்றிருக்கலாம். ஆனால் அவர், வாஜ்பேயியையே பிரதமராக முன்நிறுத்தினார் என்று அத்வானியின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

"1994-95களில் அத்வானியைப் பார்த்தால், அவர் பா.ஜ.க.வின் இயல்பான பிரதமர் வேட்பாளராக இருந்தார், ஆனால் நிலைமையை மதிப்பிடும் திறமை அத்வானியை போல வேறு யாருக்கும் இல்லை" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் அஜய் சிங்.

அன்றைய அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டே அத்வானி செயல்பட்டார் என்று கூறும் அஜய் சிங், "இந்தியா போன்ற நாட்டில், அனைவரின் ஒருமித்த ஆதரவு கொண்ட ஒரு நபரே பிரதமராவது நல்லது என்பதை அத்வானி அறிந்திருந்தார். இதைக் கவனத்தில் கொண்டே வாஜ்பேயின் பெயரை அவர் முன்னெடுத்தார்" என்று விவரிக்கிறார்.

படத்தின் காப்புரிமை ADVANI

ஜின்னாவை புகழ்ந்ததற்கு காரணம் என்ன?

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆதரவை பெறுவதற்காக பாஜக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது என்று அந்த கட்சியை நெருக்கமாக கவனித்து வரும் அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். ஆனால், அதுவே பிரதமர் வேட்பாளரை முடிவு செய்யும்போது, அவர் தேசிய அளவில் அனைவராலும் ஏற்றுக் கொள்பவராக இருக்க வேண்டும் என்ற நிர்பந்தமும் பாஜகவுக்கு இருக்கிறது என்று சொல்கிறார் அஜய் சிங்.

பிரதமர் பதவிக்கு வேட்பாளராவதற்கு அத்வானிக்கு தடை ஏற்பட்டதும் இந்த விஷயத்தில் தான். அஜய் சிங் இவ்வாறு சொல்கிறார், "பாஜக எப்போதுமே எதிர்கொள்ளும் பிரச்சனை இது. ஏனெனில், பாஜகவோ அல்லது அதற்கு முந்தைய பாரதிய ஜனசங்கோ அல்லது ஆர்.எஸ்.எஸ் போன்றவை, இந்து தேசியம் என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அரசியலமைப்பு பதவி என்ற அடிப்படையில் வரும்போது, இந்த சித்தாந்தத்தில் இருந்து வெளிவந்தாக வேண்டியது அவசியமாகிறது" என்கிறார் அஜய் சிங்.

"முதலமைச்சர் அல்லது பிரதமர் போன்ற பதவிகளில் அமரும்போது இந்துத்துவா கொள்கையை விட்டு விலக வேண்டும் என்பது, அந்த சித்தாந்தத்தில் இருந்தவர்களுக்கு சிரமமானது. இதனை வாஜ்பேயி மற்றும் அத்வானி இருவருமே எதிர்கொண்டனர். தனது பேச்சாற்றல் மற்றும் இந்தி மொழிப் புலமையால் இந்த பிரச்சனையை அடல் பிகாரி வாஜ்பேய் உரிய முறையில் எதிர்கொண்டார், அதில் அத்வானி சற்று பின்தங்கிவிட்டார் என்பதால் பிரதமர் பதவி என்ற போட்டியிலும் அவர் பின்தங்க நேர்ந்துவிட்டது."

பாகிஸ்தானுக்கு சென்றபோது முகமது அலி ஜின்னாவை புகழ்ந்து பேசியது, அத்வானியின் அரசியல் வாழ்க்கையின் மாபெரும் தவறாகிவிட்டது.

Image caption பிபிசி ஸ்டூடியோவில் மூத்த பத்திரிகையாளர் ராம் பஹாதூர் ராயுடன் ரெஹான் ஃபஜல்

ஒற்றை தவறின் விளைவு

"அவர் ஏன் ஜின்னாவை பாராட்டி பேசினார் என்பதற்கான விளக்கத்தை அத்வானி மட்டுமே சொல்ல முடியும். அதற்கான விளக்கத்தை அவர் பல முறை சொல்லியிருக்கிறார். வாஜ்பேயியை போல சொல்லாடலை பயன்படுத்த நினைத்ததாக அவர் சொன்னாலும், அதை நம்ப அவரது முந்தைய நடவடிக்கைகள் இடம் கொடுக்கவில்லை" என்கிறார் ராம் பஹாதூர் ராய்.

"உண்மையில் அடல் பிஹாரி வாஜ்பேயிக்கு சரியான மாற்றாக இருக்கும் தகுதி பெற்றவர் அத்வானி. தன்னிச்சையான தலைவராக உருவெடுக்க முடிவு செய்திருந்தால், அத்வானி இரட்டை நட்டத்தை சந்திக்க வேண்டியிருந்திருக்கும். முதலில் அவர் எந்த தளத்தில் நின்றிருக்கிறாரோ அது அவரிடம் இருந்து பறிக்கப்பட்டிருக்கும், அடுத்து அவர் மீது ஆழமான அவநம்பிக்கை ஏற்பட்டிருக்கும்" என்கிறார் ராம் பாஹாதுர் ராய்.

அரசியலில் கூர்மையான பார்வை கொண்டவர் என்று கருதப்படும் லால் கிருஷ்ணா அத்வானி, முடிவெடுப்பதில் ஏன் தவறு செய்தார் என்ற கேள்வி எழுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

அத்வானியின் ஆலோசகரும், ஆர்.எஸ்.எஸ் பற்றிய புத்தகத்தை எழுதியிருக்கும் ஏ.ஜி நூரானியிடம் பேசினோம். "1984 தேர்தலில் பாஜகவுக்கு இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்தது. தங்களது பழைய வாக்குகளை பெற வேண்டுமானால் அதற்கு ஒரே வழி, இந்துத்வா சித்தாந்தத்தை முன்னெடுப்பது மட்டுமே என்று முடிவு செய்தார்கள். தங்களது முயற்சிகளை வாக்குகளாக மாற்றவேண்டும் என்று 1989இல் பாஜக பாலம்புர் மாநாட்டில் அத்வானி நேரடியாகவே தெரிவித்திருந்தார்" என்கிறார் ஏ.ஜி நூரானி.

"தன்னை பிரதமராக்க மாட்டார்கள் என்பதை 1995இல் அத்வானி உணர்ந்தார். குஜராத் வன்முறை சம்பவங்களில் இருந்து அவரால் காப்பாற்றப்பட்ட நரேந்திர மோதியே அத்வானியை வெளியேற்றினார் என்றபோது அத்வானியால் ஒன்றுமே செய்யமுடியவில்லை."

படத்தின் காப்புரிமை Getty Images

நரேந்திரமோதியை காப்பாற்றியது யார்?

ஆனால் குஜராத் வன்முறைகளுக்கு பிறகு நரேந்திர மோதியை காப்பாற்றியது அத்வானி அல்ல, வேறு சிலர் என்று சொல்கிறார் பஹாதுர் ராய்.

"நரேந்திர மோதி குஜராத் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வாஜ்பேயி விரும்பினார். அரசியல் தர்ம்ம் என்பது பற்றியும் ஒரு அறிக்கையில் அவர் அறிவுறுத்தினார். அருண் ஜேட்லியும், பிரமோத் மகாஜனும்தான் வாஜ்பேயின் கருத்தை மாற்றும் முயற்சியில் வெற்றியடைந்தார்கள்".

"டெல்லியில் இருந்து கோவாவுக்கு வாஜ்பேயி பயணித்த விமானத்தில் அவருடன் பயணித்த இவர்கள் இருவரும் நரேந்திர மோதி மீதான வாஜ்பேயின் கோபத்தை குறைக்கும் முயற்சியில் வெற்றியடைந்தார்கள். அப்போது அத்வானி அவர்களுடன் இல்லை."

"மோதியை காப்பாற்றும் முயற்சியை அத்வானி நேரிடையாக செய்யவில்லை என்றாலும், அதற்கு பிறகு 2012ஆம் ஆண்டுவரை மோதியும், அத்வானியும் நெருக்கமாக இருந்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே" என்கிறர் பஹதூர் ராய்.

'ஆத்திரத்தை வெளிப்படுத்திய அத்வானியின் கருத்துகள்'

Image caption பிபிசி செய்தியாளர் ரெஹான் ஃபஜலுடன் மூத்த பத்திரிகையாளர் அஜய் சிங்

பிரதமர் பதவிக்கு நரேந்திர மோதியை கட்சி தேர்ந்தெடுத்ததை அத்வானியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

"2014 தேர்தலில் நரேந்திர மோதி போட்டியிடுவதற்கு அவர் தெரிவித்த எதிர்ப்புகளால் அத்வானியின் மனத்தாங்கல் வெளிப்பட்டது. கட்சியை அடிமட்டத்தில் இருந்து வளர்த்தெடுத்த தான் நிராகரிக்கப்ப்டுவதை அவரால் சீரணித்துக் கொள்ள முடியவில்லை. பிரதமர் வேட்பாளர் என்று யாரையும் முன்னரே முன்நிறுத்த வேண்டாம் என்றும், நரேந்திர மோதியின் பெயரை முன்மொழிந்தால் வாக்குகள் சிதறும் என்றும் அத்வானி அச்சம் தெரிவித்தார். ஆனால் மோதியின் தரப்பில் இருந்து வந்த அழுத்தங்களால் அத்வானி ஓரம்கட்டப்பட்டார்" என்று சொல்கிறார் அஜய் சிங்.

அத்வானியே பிரதமராக வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் விரும்பியதாக வாஜ்பேயி பிரதமராக இருந்த காலத்திலேயே பேச்சுக்கள் நிலவின. ஆனால் அந்த தந்திரமும் அத்வானிக்கு பிரதமர் வாய்ப்பை கொடுக்கவில்லை.

"2001ஆம் ஆண்டு இறுதிவாக்கில், ஆர்.எஸ்.எஸ் தலைவராக இருந்த ராஜூ பையா, வாஜ்பேயை பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு கோரிக்கை விடுக்கும் சூழ்நிலையை அத்வானி உருவாக்கினார். வாஜ்பேயிக்கும், ராஜூ பையாவுக்கும் இடையிலான நீண்ட கால நட்பின் காரணத்தால், வாஜ்பேயி நண்பரின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகளும் இருந்தன."

படத்தின் காப்புரிமை Getty Images

தந்திரத்தை தெரிந்த கொண்டாரா வாஜ்பேயி?

"இரண்டாம் நிலை தலைவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்று ராஜூ பையா வாஜ்பேயிடம் கூறினார். அதோடு, தலைவர் பதவியில் இருந்து விலகி சுதர்சனை பதவியில் அமர்த்தினார். ராஜு பையாவின் கோரிக்கையை வாஜ்பேயி மறுக்காவிட்டாலும், இதன் பின் அத்வானியின் தந்திரம் இருக்கிறது என்பதையும் அவர் அறிந்திருந்தார்" என்கிறார் ராம் பஹாதுர் ராய்.

வாஜ்பேயை குடியரசுத் தலைவராக்க ஆர்.எஸ்.எஸ் விரும்பியது என்ற தகவல்களில் எந்த அளவு உண்மை இருந்தது என்ற கேள்வியை ராம் பஹாதுர் ராயிடம் கேட்டேன்.

வாஜ்பேயி பிரதமர் பதவியில் இருந்து விலகினால், அவருக்கு குடியரசுத் தலைவர் பதவி அளிக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அரசியலை கரைத்துக் குடித்திருந்த வாஜ்பேயி இந்த தந்திர யுக்தியை சமார்த்தியமாக கையாண்டார்.

வயதின் காரணமாகவோ அல்லது புதிய தலைமையிடம் அனுசரித்துப் போகும் தன்மை இல்லாதது உள்ளிட்ட சில காரணங்களால் தற்போது அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகிவிட்டார் அத்வானி.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2007ஆம் ஆண்டில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் அத்வானியுடன் பிரதமர் மோதி

இருந்தாலும், அத்வானிக்கு இன்னும் அரசியலில் முக்கியமான பங்களிப்பு இருப்பதாக, கஞ்சன் குப்தா போன்ற அத்வானியின் பல ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

"புதிய தலைமையின் கருத்தும், அத்வானியின் கருத்தும் வேறுபட்டவை என்று சொல்வது தவறு. அதற்காக கட்சியின் ஒவ்வொரு கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ள வேண்டும் என்று சொல்வதும் சரியில்லை. உண்மையில் தீவிர அரசியலில் ஈடுபடும் வயதை அத்வானி தாண்டிவிட்டார். கட்சியின் மூத்த உறுப்பினர் என்ற முறையில் ஒரு ஆலோசகர் என்ற பங்களிப்பை அவர் அளிப்பதே சாத்தியமானது. இந்த முக்கியமான பங்களிப்பை வழங்கும் அளவு கட்சியில் வேறு யாரும் இல்லை" என்கிறார் கஞ்சன் குப்தா.

ஆனால் உண்மையில் பாரதிய ஜனதா கட்சியில் ஒரு ஆலோசகர் என்ற நிலையும் அத்வானிக்கு இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. அதுதான் அத்வானியின் மனவருத்தத்திற்கு காரணம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :