இரண்டு தேர்தல்கள், இரண்டு வாக்காளர் அட்டைகள்: ஆந்திராவின் வினோத கிராமங்கள்

இரண்டு தேர்தல்கள்

தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் கண்காணிப்பில் வரும் 14 கிராம மக்கள், இரண்டு வாக்காளர் அட்டைகள், இரண்டு சாதி சான்றிதழ்கள் மற்றும் இருமாநில நலதிட்டங்களை பெற்று வருகின்றனர். எனினும், இன்றுவரை அவர்களுக்கென சொந்த நிலம் என்று ஒன்றில்லை.

பிரமடொலி, கோடா, ஷங்கர்லொட்டி, முகடம்குடா, லென்டிகுடா, இசபூர், மஹாராஜ்குடா, அனந்தபூர், பொலாபூர், லென்டிஜலா, லக்மபூர், ஜங்கபூர் மற்றும் பத்மாவதி ஆகிய கிராமங்கள்தான் இரு மாநிலங்களுக்கு இடையே மாட்டிக் கொண்டுள்ள கிராமங்கள்.

தெலங்கானாவின் அசிஃபாபாத் மாவட்டம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்தராபூர் மாவட்டத்தின் கீழ் இந்த கிராமங்கள் உள்ளன.

தெலங்கானா மாநில தேர்தல்கள் வரவுள்ள நிலையில், அந்த கிராம மக்களின் மனநிலையை தெரிந்து கொள்வதற்காக பிபிசி தெலுங்கு செய்தியாளர் தீப்தி பதினி அங்கு பயணித்தார்.

3819 பேர் உள்ள அக்கிராமங்களில் லம்பாடா பழங்குடி மக்கள் மற்றும் மராத்தி பேசும் பட்டியிலன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

நாடோடி பழங்குடியினர் என்று வகைப்படுத்தப்பட்ட லம்பாடா பழங்குடி மக்களை தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்டோராக கருதப்படுகின்றனர். ஆனால், இவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் சமூக நலத்திட்டங்களுக்கு தகுதியுள்ளவர்களாக்க பட்டியலினத்தோர் பிரிவின் கீழ் வருகின்றனர்.

தேர்தல் நேரங்களில் மட்டும் தங்கள் கிராமங்கள் மீது அரசியல் தலைவர்கள் கவனம் செலுத்துவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

இக்கிராம மக்கள், இரண்டு மாநில தேர்தல்களிலும் கலந்து கொள்கின்றனர்.

"தேர்தல் நேரங்களில் மட்டும் எங்கள் கிராமங்களை பார்வையிட்டு, எங்களிடம் வந்து பேசுவார்கள். நாங்களும் இதனை பயன்படுத்தி எங்களுக்கு தேவையானதை நாங்கள் கேட்டு வருகிறோம்" என பரமடொலியில் உள்ள கிராமவாசி ஒருவர் கூறினார்.

இந்த கிராமங்களை ஒரே நேரத்தில் இரு மாநில அரசுகளும் ஆட்சி செய்து வருகின்றன.

"கிராம தலைவரின் பரிந்துரையை அடுத்து, தெலங்கானா அரசிடம் இருந்து எங்களுக்கு சாதி சான்றிதழ் கிடைத்துள்ளது" எனவும் பெயர் வெளியிட விரும்பாத கிராமவாசி தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா ஆகிய இரு மாநில சமூகநலத்திட்டங்களின் பலன்களை இவர்கள் பெற்று வருகின்றனர்.

கிராமங்கள் இப்படியொரு சிக்கலுக்குள்ளானது எப்படி?

1983ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், மகாராஷ்டிரா மற்றும் (முன்னாள்) அந்திர பிரதேச மாநில அதிகாரிகளுக்கும் இடையே கூட்டு சந்திப்பு நடைபெற்றது

இந்த கிராமங்கள் அனைத்தும் அப்போதிய ஆந்திர பிரதேச எல்லைக்குள் வருவதாகக் கூறி, இவை அடிலாபாத் மாவட்டத்துடன் இணைக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

எனினும், இந்த கிராமங்களை ஆந்திராவுக்கு அளித்தது சட்டவிரோதமானது என மகாராஷ்டிராவின் ரஜுரா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வமனராவ் சதப் குற்றஞ்சாட்டினார்.

"நான் சட்டமன்றத்திற்கு சென்றபோது, கிராமங்களை இப்படி விட்டுத்தருவதற்கான எந்த சட்டப்பூர்வ உரிமைகளும் மாநில அரசாங்கத்திற்கு கிடையாது என்று தெரிவித்தேன். அந்த கிராம மக்கள் மராத்தி மொழி பேசக்கூடியவர்கள் ஆவர்" என்று வமனராவ் கூறினார்.

ஆந்திர பிரதேசத்தில் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 1991ஆம் ஆண்டு தேர்தல்களை அக்கிராம மக்கள் புறக்கணித்தனர்.

"நாங்கள் அனைவரும் மராத்தி மொழி பேசக்கூடியவர்கள். திடீரென, ஆந்திராவில் இணைப்பதாக அரசாங்கம் முடிவு செய்தது. அதனை தொடர்ந்து 1991ஆம் ஆண்டு தேர்தலை புறக்கணித்தோம். ஆனால், அதற்கு பிறகு இரு மாநில தேர்தல்களிலும் வாக்களிக்க ஆரம்பித்தோம்" என பரமடொலி கிராமத்தை சேர்ந்த காம்ப்ளே லஷ்மன் கூறுகிறார்.

"12 கிராமங்களையும் ஆந்திராவுக்கு விட்டுக் கொடுப்பதாக எழுதப்பட்ட கடிதத்தை 1996ஆம் ஆண்டு மகாராஷ்டிர அரசாங்கம் திரும்பப் பெற்றது" என வமனராவ் விவரிக்கிறார்.

1996ஆம் ஆண்டு, ஆந்திராவுக்கு அந்த கிராமங்கள் கொடுக்கப்பட்டதை பா.ஜ.க- சிவ சேனா அரசு திரும்பப் பெற்றது.

இதனை எதிர்த்து ஆந்திர அரசு, ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

தீர்ப்பு ஆந்திராவிற்கு சாதகமாக வந்தது. 14 கிராமங்களை பொறுத்த வரை, அதன் ஆட்சி மற்றும் நிர்வாகத்தில் மகாராஷ்டிரா அரசு தலையிடக்கூடாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த விவகாரம், ஆந்திர உயர்நீதிமன்றத்தின் வரம்புக்கு உட்பட்டதில்லை என்று கூறி இதனை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு உச்சநீதிமன்றம் சென்றது.

இந்த கிராமங்கள் தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இரு மாநிலங்களுக்கும் இந்த கிராமங்களை பார்த்துக் கொள்வதற்கான பொறுப்பு உள்ளது என்றும் அக்கிராமங்களின் நிலையை வைத்து முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

கிராம மக்களுக்கு வேண்டியது என்ன?

இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு வேண்டும் என்று கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர். "இரு மாநில அரசுகளின் சமூகநலத் திட்டங்கள் எங்களுக்கு கிடைப்பது உண்மைதான். உணவு மானியமும் இரு அரசுகளிடம் இருந்து வருகிறது."

சிலருக்கு பயிரு கடன்களும் இரு மாநிலத்தில் இருந்தும் பெறுகின்றனர்.

ஆனால், எங்கள் நிலங்களுக்கு பட்டா இல்லை என்கிறார் முகடம்குடா கிராமத்தின் கணேஷ் ரதோட். இந்த சிக்கலான நிலம் இருப்பு காடுகளில் இருப்பதினால், அங்குள்ள விவசாயிகளுக்கு வன உரிமைகள் அங்கீகரிக்கும் பட்டா மட்டுமே கிடைக்கும். இதற்கு அர்த்தம், அந்த நிலத்தை அவர்கள் அனுபவித்து கொள்ளலாம், ஆனால், விற்கவோ அல்லது சொந்தம் கொண்டாடவோ முடியாது.

"எங்கள் நிலைமை அப்படியேதான் உள்ளது. எங்களுக்கு யார் பட்டாக்கள் அளிக்கிறார்களோ, நாங்கள் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள். அதுவரை நாங்கள் என்ன நடக்கிறதோ அதையெல்லாம் ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும்" என்கிறார் மகாராஷ்டிராவை சேர்ந்த கிராம தலைவரான காம்ப்ளே லஷ்மன். இதற்னு முன் அவர் தெலங்கானா மாநிலத்தில் கிராம தலைவராக இருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :