கரையை கடந்தது 'கஜ' புயல் : தொடரும் கனமழை

தமிழகத்தை நெருங்குகிறது 'கஜ' புயல்

நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் இடையேயான கடல் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 00.30 முதல் 2.30 மணி இடையிலான நேரத்தில் கஜ புயல் கரையை கடந்ததாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், ராமநாதபுரம் என பல கடலோர மாவட்டங்களிலும் வியாழக்கிழமை இரவு முதல் மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜ புயல் மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த சில மணி நேரங்களில் வலுவிழக்கக்கூடும் என்று இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

முன்னதாக, தமிழக நிலப் பகுதிக்குள் நுழைந்துவிட்ட கஜ புயல், வெள்ளிக்கிழமை அதிகாலைக்குள் கரையைக் கடக்குமென நேற்றிரவு சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது.

இரவில் புயலில் வேகமாக காற்று வீசும்பகுதி கரையைக் கடந்துகொண்டிருந்தது. நாகப்பட்டினத்தில் இரவில் பலத்த மழை பெய்துவருவதோடு, காற்றும் பலமாக வீசிவந்தது.

பல இடங்களில் மரங்கள் கீழே விழுந்துள்ளன. அவற்றை இப்போதே அகற்றும் பணிகள் துவங்கிவிட்டன. பாதுகாப்பு காரணங்களுக்காக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

அதேபோல, ராமேஸ்வரம், தங்கச்சிமடம், தனுஷ்கோடி பகுதிகளில் கடுமையான மழை பெய்தது. ராமேஸ்வரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் சற்று முன்பு வெளியிட்டுள்ள தகவலின்படி கஜ புயலின் வெளிவட்டப் பகுதி நாகப்பட்டினத்திற்குத் தெற்கில் கரையை கடக்க ஆரம்பித்தது. இது தீவிர புயலாக வலுப்பெற்று 100-110 கி.மீ. வேகத்தில் காற்று வீசுமென எச்சரிக்கப்பட்டது.

வியாழக்கிழமை இரவு நிலவரப்படி கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் கடலோரப் பகுதிகளில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. 100-110 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசிவருகிறது.

கடலூர் மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் விட்டுவிட்டு மழைபெய்து வருகிறது. நாகப்பட்டினத்தில் சுமார் 10,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் சேர்த்து மொத்தமாக சுமார் 26,000 பேர் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கரை தொட்டது கஜ

முன்னதாக, கஜ புயல் தற்போது நாகபட்டினத்துக்கு கிழக்கே 138 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாக வியாழக்கிழமை மாலை செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

கஜ புயலின் வெளிப்பகுதி ஏற்கனவே கரையைக் கடந்துள்ளதாகவும், சுமார் 20 கிலோமீட்டர் அகலமுள்ள 'புயலின் கண்' (மையப்பகுதி) இரவு சுமார் 9-10 மணிக்கு கரையைக் கடக்கும் என்றும் கூறியுள்ளார்.

காரைக்கால் பகுதியில் ஏற்கனவே மழை தொடங்கிவிட்டது. புயலின் கண் கரையைக் கடக்கும்போது அதிகபட்சமாக 80-90 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் கூறினார்.

இந்தப் புயலின் காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யுமென்றும், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுவையின் காரைக்கால் மாவட்டத்திலும் கனமழை பெய்யக்கூடுமெனவும் எச்சரிக்கப்பட்டது.

புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் 80-90 கி.மீ அளவுக்கு இருக்குமெனவும் சில சமயங்களில் 100 கி.மீ. அளவுக்கு வீசுமெனவும் கூறப்பட்டுள்ளது.

கஜ புயல் உருப்பெற ஆரம்பித்ததிலிருந்தே இந்தப் புயல் செல்லும் திசை, வேகம், கிடைக்கக்கூடிய மழை குறித்து ஊடகங்கள் மாறுப்பட்ட கருத்துக்களைத் தெரிவித்துவந்தன.

வியாழக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரனிடம் இது குறித்துக் கேட்டபோது, "செயற்கைக்கோள் உள்பட எல்லா கருவிகளையும் வைத்துத்தான் ஒரு புயலானது கணிக்கப்படுகிறது. இந்த கஜ புயலும் அவ்வாறே கணிக்கப்பட்டுவருகிறது. ஆகவே, இந்தப் புயலை கணிக்க முடியாத புயல் எனக் கூறுவது தவறு" எனத் தெரிவித்தார்.

புயல் கரையைக் கடக்கும்போது கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். சில இடங்களில் கன மழை பெய்யும். சென்னையில் நாளை துவங்கி அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு மிதமான மழை பெய்யுமென பாலச்சந்திரன் தெரிவித்தார். சென்னையில் நாளை துவங்கி அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு மிதமான மழை பெய்யும்.

தற்போது இந்தப் புயல் பத்து கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்தாலும் கரையை நெருங்க நெருங்க தரைப்பகுதி காற்றின் வேகத்திற்கு ஏற்ப இந்தப் புயல் நகரும் வேகம் மாறக்கூடும்.

கரையார மாவட்டங்களில் அனைவரும் மாலை 4 மணிக்குள் வீடு திரும்ப ஏதுவாக தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளித்தோ, பணி நேரத்தைக் குறைத்தோ உதவ வேண்டுமென தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஏற்கனவே புயல் கடக்கக்கூடிய பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிப்பு ஏற்படக்கூடிய மாவட்டங்களில் மாலை 6 மணிக்கு மேல் பேருந்துப் போக்குவரத்தை நிறுத்தவும் மாநில நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பல இடங்களில் மின் தடை ஏற்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு குழுவும், மாநில பேரிடர் மீட்புப் படையின் இரு குழுக்களும் அனுப்பப்பட்டுள்ளன.

மீனவர்கள் 15ஆம் தேதி கடலுக்குள் செல்ல வேண்டாமென எச்சரிக்கப்படுகிறார்கள். 15, 16ஆம் தேதிகளில் தமிழகத்தின் இதர பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்தப் புயல் நாளை கரையைக் கடக்கும் என்பதால் நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் பகுதியில் உள்ள 49 மீனவ கிராமங்களில் இருந்து எந்த மீனவரும் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லையென கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்திருக்கிறார். இந்த மாவட்டத்தில் 2600 காவல்துறையினரும் புயல் முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பால் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தேவையான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிச்சாவரம் பகுதியில் படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரிச்சல்முனைக்குச் செல்ல இன்று முதல் நான்கு நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வேர்கோடு பகுதியிலேயே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் இந்தப் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைள் குறித்து மாநில வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசினார். தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 130 பேர் நெல்லூர் பகுதியில் மீன் பிடித்துவருவதாகவும் அவர்கள் உடனடியாக கரை திரும்ப கடலோரக் காவல்படையின் ஹெலிகாப்டர்கள், கப்பல்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தப் புயலின் காரணமாக, கரையோரம் வசிக்கும் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்ப்பட்டிருக்கிறது. புயலால் அதிக மழையைப் பெறக்கூடிய 7 மாவட்டங்களில் உள்ள குடிசை, தகர கொட்டகை, மின் கம்பங்கள், தொலைத் தொடர்புக் கருவிகள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், அவற்றைச் சமாளிக்கத் தேவையான ஏற்பாடுகளை இம்மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

கடந்த புயல் காலங்களில் தொலைத்தொடர்பின் காரணமாக பிரச்சனைகள் ஏற்பட்டதால், இந்த முறை அதனை சமாளிக்க முன்கூட்டியே தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் மாநில அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. இதனால், புயலால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் செல்போன் கோபுரங்கள் தொடர்ந்து இயங்கும்வகையில் ஜெனரேட்டர்களுக்கான டீசல் 5 நாட்களுக்குத் தேவைப்படும் அளவில் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது என அமைச்சர் உதயகுமார் தெரிவித்திருக்கிறார்.

இந்த கஜ புயலின் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களான மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கத்துக்கு மாறாக அமைதியாக காட்சியளிக்கும் பாம்பன் கடல்

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள 'கஜ புயல்' வலுவடைந்து தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. இது கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே இன்று கரையை கடக்க உள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே கஜா புயல் கரையைக் கடக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளதையடுத்து பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதோடு பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பிராந்தியங்களில் இந்திய கடலோர காவல் படையினர் கப்பல் மற்றும் ஐ.என்.எஸ் பருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தீவு முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று மாலை தனுஷ்கோடி கம்பிபாடு பகுதிகளில் தங்கியிருந்த மீனவர்களை அப்புறபடுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், தனுஷ்கோடி பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மேலும், இராமேஸ்வரம் வரும் அனைத்து ரயில் சேவைகளையும் மறு உத்தரவு வரும் வரை தென்னக ரயில்வே நிறுத்தியுள்ளதால் ரயில்கள் அனைத்தும் மானாமதுரை ரயில் நிலையத்துடன் நிறுத்தப்பட்டுள்ளது.

கடலோரப் பகுதிகளிலுள்ள மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளதாக ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

இன்று பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.. ஆனால், பாம்பனில் வழக்கத்துக்கு மாறாக கடல் அமைதியாக காணப்படுவதுடன், மரங்களும் அசைவில்லாமல் இருப்பது, மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோடிக்கணக்கான மதிப்பிலான எங்களது படகுகள் கடலில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. ஆகவே, அரசு எங்களது உயிர்களை பாதுகாக்க எடுக்கும் நடவடிக்கைகளை போன்று எங்களது உடமைகளை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்