‘கஜ’ புயல் மீட்பு பணியில் பெண்கள்: சவால்களை சந்திப்பதில் பெருமிதம்

ஜெயக்கொடி குமார்
Image caption ஜெயக்கொடி குமார்

கஜ புயலால் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ள கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 36 வயதான ஜெயக்கொடி குமார். பேரிடர் காலங்களில் ஆபத்தான பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியை விருப்பமாக தேர்வு செய்துள்ள சுமார் 9,400 தமிழக பெண்களில் இவரும் ஒருவர்.

நிலச்சரிவு, வெள்ளம், மழை, சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் ஏற்படும் சமயங்களில், முதல்நிலை பெண் பொறுப்பாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள ஜெயக்கொடி போன்ற பெண்கள், அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் ஒரு இணைப்பு பாலமாக செயல்படுவார்கள் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மீட்பு பணிகளில் பெரும்பாலும் ஆண்கள் செயல்பட்டுவந்த நிலையில், பெண் பொறுப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களும் களத்தில் பணியாற்றும் வாய்ப்பை உருவாக்கியுள்ளதாக தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவரான சத்யகோபால் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

''பேரிடர் காலங்களில் மீட்புப் பணியில் ஈடுபடுவதற்கான பயிற்சிகளை பெற்ற இந்த பெண்கள், முதலில் தங்களது இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்கள் போன்றவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வர். மீட்கப்பட்ட நபர்களை எங்கு கொண்டு செல்லவேண்டும், உடனடி மருத்துவ வசதிகள் தேவைப்படுபவர்களை எங்கு கொண்டு செல்ல வேண்டும் போன்ற விவரங்களை அறிந்தவர்களாக இந்த முதல்நிலை பொறுப்பாளர்கள் இருப்பார்கள்,''என்கிறார் சத்யகோபால்.

''மாநிலம் முழுவதும் பேரிடர்கள் ஏற்பட வாய்ப்புள்ள 4,399 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழகத்தில் நாகப்பட்டினம், கடலூர் போன்ற மாவட்டங்கள் பல பேரிடர்களை சந்தித்துள்ளன. இந்த முறை நாங்கள் வடிவமைத்துள்ள பேரிடர் தொடர்பான வரைபடங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுவரை ஏற்பட்ட பேரிடர்களை கணக்கில் கொண்டு, எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படும் பகுதிகள் என்னென்ன என்பதை குறித்துள்ளோம். இவற்றை அறிந்துள்ள பொறுப்பாளர்கள், குறுகிய நேரத்தில் பாதுகாப்பான பகுதியை அடைந்து உயிர்ச்சேதத்தை குறைப்பதற்கு உதவியாக இருப்பார்கள்,'' என்று கூறுகிறார் சத்யகோபால்.

முதல்நிலை பொறுப்பாளராக உள்ள ஜெயக்கொடியிடம் அவரது மீட்பு பணி என்னவாக இருக்கும் என்று கேட்டபோது விரிவாக பதில் அளித்தார். பேரிடரின்போது அனைவரையும் தனது குடும்ப உறுப்பினராக எண்ணி மீட்பதாக கூறுகிறார் ஜெயக்கொடி.

''எங்களைப் போன்ற முதல்நிலை பெண் பொறுப்பாளர்கள் உள்ளூர்களில் இருப்பதால், மக்கள் எங்களிடம் சரியான தகவலை பெறுவார்கள். வதந்ததிகளை நம்பவேண்டாம் என்றும் நாங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் நேரடியான தகவல் பெற்று மீட்பு வேலைகளை செய்வோம் என உள்ளூர் மக்களிடம் ஏற்கனவே தெரிவித்துள்ளோம். தற்போது நான் வசிக்கும் பரங்கிபேட்டை பகுதியில் பாதிப்பு ஏற்பட்டால், உடனடியாக யாரை மீட்கவேண்டும் என்பதை நான் அறிந்துள்ளேன். பேரிடர் மேலாண்மை குழுவினர் எங்கள் ஊருக்கு வந்து சேரும் முன்னர், முதல்கட்டமாக உதவி தேவைப்படும் நபர்கள், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் போன்றோரை மீட்டு முகாமுக்கு கொண்டுசேர்ப்பேன். ஏற்கனவே தயார் நிலையில் முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் உணவு மற்றும் மருந்து பொருட்களை அளிப்பது வரை எங்கள் கடமை,'' என்கிறார் ஜெயக்கொடி.

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னர் பொறுப்பாளராக பதிவு செய்து கொண்டதாக கூறும் ஜெயக்கொடி, ''முதலுதவி பயிற்சி, நீச்சல் போன்ற பயிற்சிகளை பெற்றுள்ளேன். புயல் ஏற்படும் நேரத்தில், மக்கள் தங்களது குடியிருப்பைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று உணர்த்தியுள்ளேன். முகாம்களில் தங்கியுள்ள மக்களிடம் அச்ச உணர்வை போக்குவது, தேவையான நபர்களுக்கு மனநல ஆலோசனை வழங்குவது ஆகியவை எங்கள் பணியில் அடங்கும்,'' என்கிறார் ஜெயக்கொடி.

கடலூரை அடுத்து நாகப்பட்டினம் மாவட்டம் அதிக பாதிப்புகளை கடந்த 20 ஆண்டுகளில் அதிகம் சந்தித்துள்ளது. இங்கு 658 பெண்கள் முதல் நிலை பொறுப்பாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தஞ்சாவூர்,திருவாரூர்,புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகியவை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள மாவட்டங்கள் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் குடும்பஸ்ரீ என்ற கேரளா அரசால் அங்கீகரிக்கப்பட்ட பெண்கள் அமைப்பினர் கடந்த ஆகஸ்ட் மாதம் வெள்ள பாதிப்பின் போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்