"கஜ புயல் வரும்போது செல்ஃபி எடுக்காதீர்கள்"

gaja cyclone

கஜ புயல் உருவான கடந்த சில நாட்களாகவே, அதன் திசை, வேகம், பாதை ஆகியவை பல்வேறு மாறுதல்களை சந்தித்த பின்னர் வியாழக்கிழமை மாலை ஒரு வழியாகக் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது.

இந்தப் புயல், கரையை நோக்கி நகரும் வேகம் மணிக்கு சுமார் 10 கிலோ மீட்டர். ஆனால், இது கரையைக் கடக்கும்போது வீசும் காற்றின் வேகம் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டராக இருக்கும். சில இடங்களில் அது 100 கிலோ மீட்டராகவும் இருக்கலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

இந்தப் புயல் குறித்து பொது மக்கள் கவலை கொள்ள வேண்டுமா? இது ஆபத்தானதா?

இது குறித்து தேசிய அளவிலான பேரிடர் மீட்பு ஆலோசகர் வே.இரா.ஹரி பாலாஜி பிபிசி தமிழிடம் பேசினார்.

கேரளாவில் உண்டான வெள்ளத்துக்கு பிந்தைய மறுபுனரமைப்பு பணிகளில் அரசு சாரா நிறுவனங்களின் கூட்டமைப்பு ஒன்றின் சார்பில் ஈடுபட்டுள்ள அவர் தெரிவித்த தகவல்களை தொகுத்து வழங்குகிறோம்.

ஆரம்பத்தில் இருந்தே கஜ புயல் குறித்த பல்வேறு விதமான தகவல்கள், அரசு மற்றும் வானிலை ஆய்வு மையத்தால் பகிரப்பட்டன. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை அந்தத் துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய தொழிநுட்ப பதங்கள்.

அவற்றை சாமானிய மக்களிடம் தெரிவிக்கும்போது அது தேவையற்ற அச்சத்தை உண்டாக்கும். உதாரணமாக 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டால் அது அரசு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதை நினைத்து பொதுமக்கள் பதற்றப்படத் தேவை இல்லை.

Image caption ஹரி பாலாஜி வே. இரா.

சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது போன்ற தகவல்களை மிரட்டும் வகையிலான பின்னணி இசையுடன் ஊடகங்கள் செய்திகளில் தெரிவிப்பது பொது மக்களுக்கே மேலும் அச்சத்தை உண்டாக்கும்.

புயல் எத்தனை மணிக்கு கரையைக் கடக்கும், அப்போது என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்று தெரியப்படுத்தினால் போதும்.

கஜ புயலின் வேகம் மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது கனத்த மழையும், வேகமான காற்றும் இருக்கலாம். அது அவ்வளவு ஒன்றும் ஆபத்தானதல்ல.

அதற்காக புயல் வீசும் சமயத்தில் செல்ஃபி எடுப்பது போன்ற சாகசங்களைச் செய்கிறேன் என்று வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

முக்கியமாக புயல் குறித்து ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வெளியாவதால், அவற்றைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்து நன்மை செய்வதாக நினைத்து தேவையற்ற பீதியை கிளப்பக் கூடாது.

அரசு சார்பில் மீட்புப் படையினர், அதிகாரிகள் அனுப்பட்டுள்ளது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது அனைத்தும் பாராட்டப்படவேண்டியவைதான். ஆனால், கஜ புயல் தொடர்பாக அளவுக்கும் அதிகமான செய்திகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அப்படி அதிகமான தகவல்கள் வழங்கப்படுவது உதவியாக இருக்காது. ஆபத்தாகவே முடியும் என்று அவர் கூறினார்.

அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடுகள் சூழலை நம்மால் சமாளிக்க இயலும் எனும் நம்பிக்கையை கொடுத்துள்ளது.

ஆபத்தான சூழல்களில் தனிப்பட்ட வகையில் எதையும் முயற்சி செய்யாமல், அதிகாரிகள் அறிவுறுத்தியதை பின்பற்றினாலே போதும். முக்கியமாக ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்து முதலில் வெளியேற வேண்டும். அந்த இடத்தின் மீதான அதீத பற்று, தப்பித்த முந்தைய அனுபவங்கள் ஆகியவற்றைக் காரணம் கூறி வெளியேறாமல் இருக்கக்கூடாது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்