டி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி ரத்து: 'இவர்கள் யார் என்பதை யூகிக்க முடிகிறது'

டி.எம்.கிருஷ்ணா படத்தின் காப்புரிமை Twitter
Image caption டி.எம்.கிருஷ்ணா

இந்திய விமான நிலைய ஆணையம், இளைஞர்களுக்கான ஓர் இசை மற்றும் கலாசார அமைப்புடன் இணைந்து டெல்லியில் நவம்பர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில், கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது ஒரு தாக்குதல் என்று பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணனிடம் பேசிய டி.எம் கிருஷ்ணா கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுவதன் பின்னணியில் அரசியல் உள் அர்த்தங்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

"நவம்பர் 12 அன்று இந்திய விமான நிலைய ஆணையம் (Airport Authority of India) இந்த இசை நிகழ்ச்சி குறித்து ட்விட்டரில் அறிவித்திருந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அப்போது முதலே ட்விட்டரில் என் மீதான தாக்குதல் தொடங்கிவிட்டது. இவர் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய பாடல்களை பாடுபவர், இவரை வைத்து ஏன் இசை நிகழ்ச்சி நடத்துகிறீர்கள் என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள்," என்றார் அவர்.

"என்னை ஏண்டி-இந்தியன், ஏண்டி-நேஷனல், ஏண்டி-இந்து, அர்பன் நக்சலைட் ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்தனர். 13ஆம் தேதி இரவு வரை இசை நிகழ்ச்சி நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் இருந்தேன். ஆனால், அவசரமான சில காரணங்களுக்காக நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுவதாக, இந்திய விமான நிலைய ஆணையத்தினரால் அன்று இரவு எனக்குத் தெரிவிக்கப்பட்டது."

"இது ஒரு மிகவும் அற்பமான காரணம். யாருமே இப்படி ஒரு காரணத்தைக் கூறமாட்டார்கள். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததே அவர்கள்தான். பின்னர் எப்படி திடீரென ஓர் அவசர காரணம் வரும். நிச்சயமாக ஏதோ ஓர் அழுத்தம் இருந்துள்ளது."

"அந்த அழுத்தம் எங்கிருந்து வந்தது என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், தனிப்பட்ட நபர்களாக இல்லாமல், கும்பலாக வந்து இவர்கள் அனைவரும் பகடி செய்வதும், ஒரே பின்னணியைக் கொண்டுள்ளதும், அவர்களின் அரசியல் சார்பையும் வைத்து அவர்கள் யார் என்பதை யூகிக்க முடிகிறது."

படத்தின் காப்புரிமை osarun.com
Image caption ஓ.எஸ்.அருண்

இதேபோல கர்நாடக இசைப் பாடகர் ஓ.எஸ்.அருண், 'ஏசுவின் சங்கீத சங்கமம்' எனும் கிறிஸ்தவ இசை நிகழ்ச்சியில், கடந்த ஆகஸ்டு மாதம் பாட இருந்ததை சமூக ஊடகங்களில் கிளம்பிய எதிர்ப்பைத் தொடர்ந்து ரத்து செய்தார்.

"இந்த விஷமத்தனமான தாக்குதல் என்னை நிலைகுலையச் செய்துள்ளது," என்று அவர் அப்போது கூறியிருந்தார்.

இந்நிலையில் டி.எம்.கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தாலும், முன்பு இந்திய விமான நிலைய ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருந்த அதே தேதியில் அவரை வைத்து இசை நிகழ்ச்சி நடத்த தயார் என்று டெல்லி துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியா கூறியிருந்தார்.

டெல்லியில் சாகேத் பகுதிக்கு அருகே அமைந்துள்ள 'கார்டன் ஆஃப் ஃபைவ் சென்சஸ்' என்னும் இடத்தில் நாளை (நவம்பர் 17) மாலை 6.30 மணிக்கு இசை நிகழ்ச்சி நடக்கும் என டி.எம்.கிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்