வலுவிழந்தது கஜ புயல்; குறைந்தது நான்கு பேர் உயிரிழப்பு

வலுவிழந்தது கஜ புயல்; குறைந்தது நான்கு பேர் உயிரிழப்பு படத்தின் காப்புரிமை Getty Images

வெள்ளிக்கிழமை அதிகாலை கரையைக் கடக்க ஆரம்பித்த கஜ புயலின் பெரும்பகுதி தற்போது கரையைக் கடந்துவிட்டது. தற்போது அதிராம்பட்டினத்திற்கு மேற்கில் 80 கி.மீ. தூரத்தில் நிலைகொண்டுள்ள இந்தப் புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறிவருகிறது.

இந்தப் புயல் நேற்று இரவில் கரையைக் கடக்க ஆரம்பித்து, நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை மூன்று மணிக்குள் கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகப்பட்டினத்திற்கும் வேதாரண்யத்திற்கும் இடையில் இந்தப் புயல் கரையைக் கடந்தபோது கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல இடங்களில் மேற்கூரைகள் தூக்கிவீசப்பட்டன. மரங்கள், மின்கம்பங்கள் முறிந்துவிழுந்தன. கடலூர், நாகப்பட்டினம் ஆகிய இரு மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான மரங்கள் இவ்வாறு வீழ்ந்துள்ளன.

இந்த புயல் கரையைக் கடக்கும்போது கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் காற்றுடன் கடுமையான மழை பெய்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

கடலூரில் மாவட்டத்தில் மட்டும் 10,000 பேருக்கு மேல் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 1876 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள சிவக்கொல்லை பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூன்று பேர் சகோதரர்கள். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

திருச்சி, மதுரை மாவட்டங்களிலும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் மதுரை மாவட்டத்தில் பள்ளிக்கூடங்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்பு இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அடுத்த ஆறு மணி நேரத்தில் இந்தப் புயல், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் தற்போது தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. 75-85 கி.மீ. வேகத்தில் காற்று வீசிவருகிறது.

இயல்பு நிலைக்கு திரும்பியது ராமேஸ்வரம்

ராமேஸ்வரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை துறைமுகப் பகுதியில் கடல் உள்வாங்கியதால் 60க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும், இருபதுக்கு மேற்பட்ட விசைப்படகுகளும் தரைதட்டியது.

தற்போது கஜ புயல் கரையை கடந்தால் ராமேஸ்வரம்,பாம்பன் ஆகிய பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது.

இதனையடுத்து கடல் நீர் மீண்டும் வந்ததால் தரை தட்டிய படகுகள் அனைத்தையும் மீனவர்கள் மீட்டு கரையோரம் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்துயுள்ளனர்..

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்