கஜ புயல் பாதிப்பு: 20 பேர் பலி - உள் மாவட்டங்களில் தொடரும் மழை

கஜ புயலுக்கு குறைந்தது 11 பேர் பலி; உள் மாவட்டங்களில் மழை தொடர்கிறது படத்தின் காப்புரிமை AFP

கஜ புயல் தொடர்பான சம்பவங்களில் தமிழ்நாட்டில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்தப் புயல் தமிழ்நாட்டின் உள்மாவட்டமான திண்டுக்கல் அருகில் மையம் கொண்டிருக்கிறது. இதனால் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது.

நாகப்பட்டினத்திற்கும் வேதாரண்யத்திற்கும் இடையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் கரையைக் கடந்த கஜ புயல், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினத்தில் உள்ள ரயில் நிலையம் இந்தப் புயலால் சூறையாடப்பட்டுள்ளது. ஆனால், ரயில் நிலையம் தொடர்ந்து இயங்கும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. அதிவேக ரயில்கள் எதுவும் ரத்துசெய்யப்படவில்லை. மாயவரம் - தஞ்சாவூர் பயணிகள் ரயில் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புயலால் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்களும் மின் கம்பங்களும் சேதமடைந்துள்ளன. புயலால் பாதிக்கப்பட்ட ஏழு மாவட்டங்களில் சுமார் 12,000 மின் கம்பங்கள், 102 துணை மின் நிலையங்கள், 500 மின் கடத்திகள், 100 டிரான்ஸ்பார்மர்கள், 500 கி.மீ. தூரத்திற்கு மின் வழிப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக மின் வாரியம் தெரிவித்துள்ளது.

திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்குள் 2 நாட்களுக்குள் மின் இணைப்பு முழுமையாக வழங்கப்படுமெனவும் பிற பகுதிகளில் இன்று மாலையே மின் இணைப்புகள் சீரமைக்கப்படுமெனவும் மின் வாரியம் தெரிவித்துள்ளது.

தற்போது கஜ புயல் திண்டுக்கல்லை ஒட்டியுள்ள பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலைகொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கஜா புயலை ஒட்டி கரையில் காத்திருக்கும் படகுகள்.

இதனால், மதுரை, திருச்சி, தேனி, திண்டுக்கல், கரூர், கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் மழை நீடிக்குமெனவும் மீனவர்கள் இன்று மதியம் முதல் மீண்டும் கடலுக்குச் செல்லலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்துறைப் பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய இடங்களில் 17 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதிராம்பட்டினத்தில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

கஜ புயலின் காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை பகுதியில் கடும் மழை பெய்யக்கூடும் என்பதால், அணையின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் திடீர் வெள்ளப் பெருக்கைத் தவிர்க்கவும் அணையிலிருந்து தற்போது விநாடிக்கு 4680 கன அடி அளவுக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.

அணையிலிருந்து ஐந்து அடி அளவுக்கு நீர் திறக்கப்படும் என மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால், மதுரை நகர், சோழவந்தான் பகுதிகளில் வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 பேர் உயிரிழப்பு

இதற்கிடையில் இன்று காலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, இந்தப் புயலில் 11 பேர் உயிரிழந்திருப்பதாகத் தெரியவந்திருப்பதாகவும் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படுமென்றும் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படுமென்றும் தெரிவித்தார்.

ஆனால், முதல்வரின் அறிவிப்பிற்குப் பிறகு தெரிய வந்த தகவல்களின்படி, மாநிலம் முழுவதும் இந்தப் புயலால் 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தஞ்சாவூரில் பத்து பேரும் திருவாரூரில் நான்கு பேரும் புதுக்கோட்டையில் மூன்று பேரும் திருச்சியில் இருவரும் நாகப்பட்டினத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP

இந்த புயலை அடுத்து அரசு ஏற்பாடு செய்த 421 நிவாரண முகாம்களில் சுமார் 81000 பேர் தங்க வைக்கப்பட்டனர்.

இதற்கிடையில் தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நவம்பர் 18ஆம் தேதி புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகுமென வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றவுத்தத் தாழ்வுப் பகுதி 19-20 தேதிகளில் மேற்கு - தென் மேற்கு திசைகளில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொள்ளுமென்றும் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் ஒன்று முதல் 16 தேதிகளில் தமிழகம் - புதுச்சேரியில் 29 சென்டி மீட்டர் மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், 22 சென்டிமீட்டர் மழையே பெய்துள்ளது. 29 சதவீதம் குறைவு 23 சதவீதம் குறைவு.

இந்த புயலின் காரணமாகவும் மழையின் காரணமாகவும் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர், திருச்சி, சேலம், ஈரோடு, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், பெரம்பலூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் இன்று நடப்பதாக இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் கஜ புயலை எதிர்கொள்வதில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் செயல்பட்ட விதத்தை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் பாராட்டியுள்ளார். அதன் தொடர் நடவடிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்வதில் புயல் வேகத்துடன் அரசு இயந்திரம் இயங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :