சபரிமலை விவகாரம்: இந்திய பெண்களை இரு துருவமாக்கியது எது?

சபரிமலை விவகாரம்: இந்திய பெண்களை இரு துருவமாக்கியது எது? படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவில் 10 முதல் 51 வயதிற்குட்பட்ட பெண்கள் கேரளாவிலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று வழிபட இருந்த தடை உச்சநீதிமன்றத்தால் விலக்கப்பட்டு ஒரு மாதகாலத்திற்கு மேலாகிறது. இருந்தபோதிலும், இதுவரை ஒரு பெண்ணால்கூட அந்த கோவிலுக்குள் நுழைய முடியவில்லை.

வருடாந்திர வழிபாடுகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை கடந்த வெள்ளிக்கிழமையன்று திறக்கப்பட்டது. இதற்கு முன்னர், இதுகுறித்த தீர்ப்பு வெளியானபோது, ஒருசில மணிநேரங்களுக்கு இரண்டு முறை கோயிலின் நடைகள் திறக்கப்பட்டிருந்தது.

ஆனால், அந்த தீர்ப்பு வெளியான உடனேயே, சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண்களை தடுக்கும் வகையில் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் சாலைகளை மறித்து, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலங்காலமாக இருந்துவரும் பாரம்பரியத்தை காப்பதற்காகவே தாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், மாதவிடாய் ஏற்படக்கூடிய வயதிலுள்ளவர்கள் சபரிமலை கோயிலுக்குள் நுழைந்தால் தங்களது கடவுளின் பிரம்மச்சரியத்துக்கு கேடு விளையும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த பிரச்சனை குறித்து கேரளா மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

சபரிமலை விவகாரத்தில் வேறுபட்ட கருத்துகளை கொண்ட இரண்டு எழுத்தாளர்களை இதுகுறித்து விளக்க கேட்டோம். அவர்களது கருத்துகளை கீழே காண்போம்.

யாரை திருப்திப்படுத்துவதற்காக இந்த தீர்ப்பு?

ஷியாம் கிருஷ்ணகுமார், வர்ணனையாளர்

சமத்துவம் என்பது நீண்ட, நெடிய, தலைமுறை தலைமுறையாக மேற்கொள்ளப்பட்டு வரும் சடங்கை, பாரம்பரியத்தை பெண்கள் உள்பட அதன் ஒட்டுமொத்த பக்தர்களின் எதிர்ப்பை மீறி, வலுக்கட்டாயமாக செயற்கையான தனித்துவத்தை, முன்மாதிரியை உருவாக்கும் வகையில் இருக்கக்கூடாது.

இந்த விவகாரத்தில் உண்மையான பக்தர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையிலான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், மாறாக காலங்காலமாக இருந்துவரும் நடைமுறையை நவீனகால 'சீர்த்திருத்தம்" என்ற பெயரில் நீதிமன்ற உத்தரவையும், தேவைப்பட்டால் காவல்துறையையும் கொண்டு திணிக்க பார்க்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை KAVIYOOR SANTHOSH

அதுமட்டுமின்றி, இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒரு மாநிலத்துக்கும், மதத்துக்கும் இடையிலான உறவு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

சமீபகாலமாக அரசாங்கங்கள் மதரீதியான செயல்பாடுகளை மேலாண்மை செய்யும் சம்பவங்கள் அதிகமாகியுள்ளதுடன். இதுதான் 'சரியான' மத நடைமுறை போன்ற தீர்ப்புகளை நீதிமன்றங்களும் வழங்கி வருகின்றன.

சபரிமலை விவகாரத்தில் நீதிமன்றமும், அரசாங்கமும் எடுத்துள்ள நடவடிக்கைகள் ஒரு சமூகத்தின் இரண்டு பிளவுபட்ட நிலையை காட்டுகிறது. அதாவது, பெண்களின் 'விடுதலையை' கொண்டாடும் சமூகத்தின் உயர்குடிகள் ஒருபக்கமும், தங்களது குரல் தற்கால இந்தியாவில் கேட்கப்படவில்லை என்று கருதும் மில்லியன்கணக்கான பெண்கள் மறுபக்கமும் என இருதரப்பினராக பிரிந்து நிற்கிறது.

பெண்கள் பேசுவதற்கு சுதந்திரமில்லாத இடங்களில் ஒன்றாக கேரளா விளங்கவில்லை. வரலாற்றுரீதியாக பார்க்கும்போது கேரளா தாய்வழி சமூகமாகவே விளங்கி வருகிறது. அங்கு பல நூற்றாண்டுகளாக பெண்களிடம்தான் அதிகாரமும், மரபுவழி சொத்துகளும் இருந்து வருகிறது. இந்தியாவிலேயே மிக அதிகமான கல்வியறிவு விகிதம் கொண்ட கேரளாவின் சமூக குறிகாட்டிகள் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடத்தக்கவை.

சபரிமலையில் பெண்கள் நுழைவதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் தங்களது கண்ணோட்டம் குறித்து யாருமே அக்கறை காட்டவில்லை என்று கருதுகிறார்கள். மேலும், சமூகத்தில் சிறப்பு அங்கீகாரமும், குரலும் கொண்டவர்கள், தாங்கள் 'கேட்கவே கேட்காத' விடுதலையை திணிப்பதாக கருதுகின்றனர்.

'பெண்கள் பாகுபாடின்றி இணைந்து எதிர்க்க வேண்டிய தருணம்'

தேவிகா, வரலாற்றாசிரியர்

இந்தியாவெங்கும் நிலவுவது போல, நான் வாழும் கேரளாவிலும் பெண்ணுரிமைக்கெதிரான போக்கே தலைதூக்கி காணப்படுகிறது என்று கூறவியலும்.

கேரளா தாய்வழி சமூகத்தை அடிப்படையாக கொண்டது, இங்கு பெண்கள் சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகிறார்கள் என்ற கட்டுக்கதை தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது.

பெண்களுக்கு எதிரான விடயங்கள் கேரளாவிலும் நடந்து வருதற்கான சாட்சியங்கள் அதிகளவில் காணப்படும் சூழ்நிலையிலும், மேற்காணும் கட்டுக்கதைகள் தொடர்ந்து பரவி வருகின்றன. அவ்வப்போது, நிதர்சனத்தை புரிய வைக்கும் வகையிலான உதாரணங்களை விமர்சகர்கள் முன்வைத்து வருகிறார்கள்.

படத்தின் காப்புரிமை காப்புரிமைNMAXIMOVA

சபரிமலை விவகாரத்தை பொறுத்தவரை, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஆதரிக்கும் கேரளா உள்பட இந்தியாவை சேர்ந்த அனைத்து பெண்ணியவாதிகளும் உயர்குடியை சேர்ந்தவர்கள் என்றும், அதன் காரணமாக அவர்களது எண்ணங்களும் பரந்துபட்டு உள்ளதால், சமூகத்தின் விளிம்பு நிலை பக்தர்களின் எண்ணத்தை அவர்கள் பிரபலிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆனால், அதே விமர்சகர்கள் சமூகத்தில் ஆதிக்கம் மிக்க மற்றும் உயர்குடியை சேர்ந்த பெண்களை கொண்டு இந்த விவாதத்தை முன்னெடுப்பதில் தங்களுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை என்று கூறுகின்றனர்.

கடவுளின் பிரம்மச்சரியத்தை காப்பாற்றுவதற்காக பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறப்படும் இந்த விவகாரத்தில் உயர்குடியை சேர்ந்த பெண்களோ, இல்லையோ, எவ்வித பாகுபாடுமின்றி அனைத்து பெண்களும் எதிர்த்து நிற்க வேண்டும்.

படத்தின் காப்புரிமை Getty Images

பாலியல் வன்புணர்வு மற்றும் பாலியல் தொந்தரவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேர்ந்த சம்பவத்துக்கு அவர்கள் உடுத்திய ஆடையையும், சூழ்நிலையையும் காரணம் காட்டி தவறு செய்தவருக்கு ஆதரவு வழங்குவதை போன்றே இந்த விவகாரமும் கையாளப்படுகிறது.

இதுபோன்ற நம்பிக்கைளுக்கு பாரம்பரியம் என்ற பெயரில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டால், நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் இதை கண்டிப்பாக எதிர்க்க வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: