மத்தியப் பிரதேச தேர்தல்: பழங்குடியினரிடம் இந்துத்துவாவை திணிக்கிறதா பாஜக?

  • ரஜ்னீஷ் குமார்
  • பிபிசி செய்தியாளர்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி ஜன்பரிஷத் கட்சியின் வேட்பாளர் ஃபாக்ராம் கடந்த மூன்று தேர்தல்களில் போட்டியிட்டிருக்கிறார். ஆனால் இரண்டாயிரம் முதல் ஐந்தாயிரம் என்ற அளவில் தான் அவர் வாக்குகள் பெற்றார்.

மத்தியப்பிரதேச மாநிலம் ஹோஷ்ங்காபாத் மாவட்டத்தில் ஷியோனி மால்வா சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கியிருக்கிறார் ஃபாக்ராம். இந்த முறையும் தான் வெற்றி பெறுவது அசாத்தியம் என்பதை உணர்ந்திருக்கும் ஃபாக்ராம், பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர். தனது இருசக்கர வாகனத்தில் பயணித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

காங்கிரஸ் மற்றும் பாஜகவின் கோடீஸ்வர வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் இவருக்கு தேர்தலில் தோல்வி நிச்சயம் என்று தெரிந்தாலும் களத்தில் இறங்குவது ஏன்?

''பழங்குடி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் தான் தேர்தலில் போட்டியிடுகிறேன். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தொடர்ந்து போராடுவேன்'' என்கிறார் அவர்.

மத்திய பிரதேச மாநில மக்கள்த்தொகையில் 23 சதவிகிதத்தினர் பழங்குடியினராக இருக்கும் நிலையில், அவர்களுக்கு 47 தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று சட்டமன்ற தேர்தல்களிலும் பழங்குடியினருக்கான தனித்தொகுதிகளில் பாஜக அதிக அளவில் வெற்றிபெற்றுள்ளது.

படக்குறிப்பு,

ஃபாக்ராம்

பழங்குடியின மக்களின் வாக்கு

2013 சட்டமன்ற தேர்தல்களில் பழங்குடியினருக்கான 47 தனித்தொகுதிகளில் 31இல் பாஜக வென்றது.

2008 தேர்தலில் 47 தனித்தொகுதிகளில் 31இல் பாஜக வென்றது. 2003இல் தொகுதி வரையறை செய்வதற்கு முன்பு பழங்குடியினருக்கான 41 தனித்தொகுதிகளில் 37இல் பாஜக வெற்றி பெற்றது.

1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு மதத்தின் பெயரில் பிளவுபடுத்தும் அரசியல் நடத்தப்பட்டது. ஆனால், வேறு மாநிலங்களில் இந்து மதத்தினரின் வாக்குகள் பாஜகவுக்கு கிடைப்பது அதிகரித்தாலும், 1993ஆம் ஆண்டு மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக குறைவான தொகுதிகளிலேயே வெற்றி பெறமுடிந்தது.

1990இல் மத்திய பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலில் 320 தொகுதிகளில் 220ஐ பாஜக கைப்பற்றியது. ஆனால் 1993இல் அது 116ஆக குறைந்தது. அந்த தேர்தலில் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தனித்தொகுதிகளில் பாஜக மொத்தம் 3% வெற்றியையே பெற்றது. 1993 முதல் 2003 வரை மத்திய பிரதேச மாநில முதலமைச்சராக பதவி வகித்தார் காங்கிரஸ் கட்சியின் திக்விஜய் சிங்.

பழங்குடியினரின் பெருமளவு வாக்குகளைப் பெற பாஜக அப்படி என்ன பெரிய அளவிலான நன்மைகளுக்கு செய்துவிட்டது என்ற கேள்வி எழுகிறது. இன்றும் தங்களது உரிமைகளுக்காக பழங்குடியின மக்கள் போராடும் நிலைதான் இருக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு போன்ற துறைகளிலும் அவர்கள் பின்தங்கியே இருக்கின்றனர். பெரிய அளவிலான அணைகளை கட்டுவதற்காக அவர்கள் இடம்பெயர வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர் என்ற நிலையில் இந்த கேள்வி எழுவது இயலபானதே.

படக்குறிப்பு,

ஷிவ்ராஜ் சிங் செளஹான்

பாஜகவின் வெற்றிக்கு காரணம்

ஷியோனி மால்வா பகுதியில் கேஸ்லா என்ற கிராமத்தில் வசிக்கும் இக்பால் என்பவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பி.எச்டி பயின்று வருகிறார்.

ஃபாக்ராமும் இதே கிராமத்தை சேர்ந்தவர் தான். பாஜகவின் வெற்றிக்கான காரணங்களை அடுக்குகிறார் இக்பால்.

''கடந்த மூன்று சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி பலத்த அடி வாங்கியது. பழங்குடியின மக்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட கட்சிகளில் ஒன்றான கோண்ட்வானா கன்தந்த்ர கட்சியும் அரசியல் பேரங்களுக்கு அடிபணிந்துவிட்டது. கோண்ட் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் பெருமளவில் வசிப்பதால் இந்த கட்சிக்கு 'கோண்ட்வானா கன்தந்த்ர' என்று பெயரிடப்பட்டது'' என்று அடிப்படையில் இருந்து அலசுகிறார் இக்பால்.

''இந்த காலகட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பழங்குடியின நல அமைப்பு (வன்வாசி கல்யாண் பரிஷத்) மூலமாக பழங்குடியின மக்களிடையே தங்கள் திட்டங்களை முன்வைத்தது. இந்த அமைப்பு ஏராளமான மத சடங்குகளுக்கு ஏற்பாடு செய்தது. அவற்றில் ராமயணத்தின் 'சபரி' கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தியதும் ஒன்று.

இந்து மக்கள் கடவுளாக வழிபடும் ராமருக்கு, சபரி பழம் கொடுத்தது என்ற சம்பவத்தை பிரதானமாக பேசியது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரிவு. 'சபரி கும்பமேளா' ஏற்பாடு செய்யப்பட்டது. பிற மாநிலங்களில் நடைபெறும் பழங்குடியினருக்கான நிகழ்ச்சிகளுக்கு இங்கிருப்பவர்களை அனுப்பினார்கள். பழங்குடியினப் பகுதிகளில் விடுதிகளையும் நூலகங்களையும் ஏற்படுத்தினார்கள். நூலகத்தில் இந்துத்வா கருத்துகளை பரப்பும் புத்தகங்களும், இந்து மத போதனைகளை கொண்ட புத்தகங்களும் பெருமளவில் வைக்கப்பட்டன. ஆர்.எஸ்.எஸ், இதுபோன்ற தனது தனிப்பாணியிலான முயற்சிகளை மேற்கொண்டது'' என்கிறார் இக்பால்.

இந்த முயற்சிகளில் ஈடுபடுவது ஆர்.எஸ்.எஸ் மட்டுமல்ல, ஊடகங்களும் இந்து மத சடங்கு-சம்பிரதாயங்களை முன்னெடுப்பதில் பங்கு வகிப்பதாக இக்பால் கருதுகிறார். மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் பணிபுரியும் அனுராக் மோதியும், இக்பால் கூறும் கருத்துக்களுடன் உடன்படுகிறார்.

பழங்குடியினரை 'வனவாசிகள்' என்று கூறுவதை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு விரும்புகிறது. 2000த்தில் பிகார் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டபோது, புதிய மாநிலத்திற்கு, ஜார்கண்ட் என்ற பெயருக்கு பதிலாக 'வனாஞ்ச்சல்' என்று பெயர் சூட்ட விரும்பியது அடல் பிகாரி வாஜ்பேயி அரசு. வன்ங்களில் வசிப்பவர்கள் வனவாசி என்பதே ஆர்.எஸ்.எஸ்ஸின் வாதம்.

படக்குறிப்பு,

சிவானி குப்தா

பழங்குடியினர் என்று பெயரை ஏன் ஆர்.எஸ்.எஸ் விரும்பவில்லை?

பழங்குடியினர் என்று பெயரை ஏன் ஆர்.எஸ்.எஸ் விரும்பவில்லை? இந்தக் கேள்விக்கு பதிலளிக்கிறார் அனுராக் மோதி. ''பழங்குடியினர் என்று சொல்வதன் பொருள், அவர்கள் அந்த இடத்தின் பூர்வீக்க்குடிகள் என்பதே. அதாவது அவர்களுக்கே அந்த இடம் சொந்தமானது, மற்றவர்கள் எல்லாம் அங்கு வந்து குடியேறியவர்கள் என்பதாக பொருள் கொள்ளப்படலாம். இந்த நிலையில், முஸ்லிம்களை குடியேறிகள் என்று கூறும் ஆர்.எஸ்.எஸ் தாங்களும் அந்த இடத்தின் வந்தேறிகள் என்று கூறப்படலாம் என்ற அச்சமே, பழங்குடிகள் என்ற பெயருக்கு மாற்றாக ஒரு பெயரை வைக்கத் தூண்டியது. எனவே, அவர்களை வனவாசிகள் என்று சொல்லிவிட்டால், அங்கு வசிப்பவர்கள் வந்தேறிகள் என்று யாரும் சொல்லமுடியாது அல்லவா?''

போபாலில் உள்ள வனவாசி கல்யாண் பரிஷத் என்ற அமைப்பின் அலுவலக மேலாளர் மது அருணிடம் இது குறித்து பேசினோம். பழங்குடி இனத்தினரை, வனவாசிகள் என்று ஏன் அழைக்கிறார்கள்? என்ற கேள்வியை அவர் முன் வைத்தோம்.

''வனத்தில் வசிப்பவர்கள் அனைவரும் வனவாசிகளே. இவர்கள் அனைவரும் கடவுள் ராமரின் வழித் தோன்றல்கள். நாம் அனைவருமே பழங்குடியினர்களே. சபரித் தாய் எச்சில் செய்த பழத்தை ராமர் உண்டார். அவ்வளவு பெருமை கொண்ட சபரி அன்னையின் வழித்தோன்றல்கள் நாம்'' என்று அவர் பதிலளித்தார்.

மத்திய பிரதேசத்தில் வனவாசி கல்யாண் பரிஷத் அமைப்பின் பிராந்திய தலைவர் யோகிராஜ் பர்தே என்பவருடன் பேசினோம்.

"வனப்பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் மேம்பாட்டுக்காக நாங்கள் பணியாற்றுகிறோம். வனவாசிகளின் பூர்வீகம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். வனவாசிகளின் வழிபாட்டு முறையும் இந்துக்களின் வழிபாடு முறையும் ஒன்றே. நாங்கள் வானவாசி கல்யாண் அமைப்பில் இந்துத்துவாவை அமல்படுத்தவில்லை. ஆனால், நாம் அனைவரும் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் தானே? நமது சொந்த மக்களுக்காகவே நாங்கள் வேலை செய்கிறோம். நாம் அனைவரும் இந்திய பழங்குடியினர்களே. முஸ்லிம்களும் இந்த நாட்டை சேர்ந்தவர்கள் தான். ஒரே வித்தியாசம் என்னவென்றால், அவர்கள் பின்னர் முஸ்லிம்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர்.''

மத்திய பிரதேசத்தில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் நலப்பணிகள் செய்துவரும் ஸ்மிதா குப்தாவிடம் பேசினோம். கடந்த சில தசாப்தங்களாக, பழங்குடியினர்கள் வசிக்கும் பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அவற்றின் சார்பு இயக்கங்களின் செயற்பாடுகள் அதிகரித்துவிட்டன. அவர்களின் தாக்கம் இங்கு அதிகரித்து வருகிறது என்று அவர் கூறுகிறார்.

"பாஜக இங்கு அரசு அமைத்த பிறகு, மத்தியப் பிரதேசத்தில் பல அரசு நிறுவனங்களின் கட்டமைப்புகள் மாற்றப்பட்டன. அரசு பள்ளிகளை, 'சரஸ்வதி சிசு மந்திர்' போன்று மாற்றிவிட்டார்கள். வனவாசி கல்யாண் பரிஷத் அமைப்புக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது. பணபலத்தை கொண்டு தங்கள் பணியாளர்களை அவர்கள் தயார் செய்துவிட்டனர். இதற்கு முன்பு மாநிலத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் காங்கிரஸ் கட்சிக்கே வாக்களித்து வந்தனர்."

படக்குறிப்பு,

ஹீராலால்

காங்கிரஸால் பழங்குடினரை ஏன் தக்க வைக்க முடியவில்லை?

காங்கிரஸ் கட்சி பழங்குடியினருக்காக எதுவுமே செய்யவில்லை என்கிறார் ஸ்மிதா குப்தா.

''காங்கிரஸ் கட்சி, பழங்குடியினருக்காக ஏதாவது செய்திருந்தால் நிலைமை இப்படி மாறியிருக்காது. 1985இல் நான் இங்கு வந்தபோது, பெண்களின் நெற்றியில் குங்குமம் வைக்கும் பழக்கம் இல்லை. ஆனால் இப்போது திருமணமான பெண்கள் அனைவரின் நெற்றியிலும், நெற்றி வகிட்டிலும் குங்குமத்தை பார்க்க முடிகிறது. இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் இந்துக்களின் பழக்க-வழக்கங்கள் துரித கதியில் பழங்குடியின சமுதாயத்தில் ஊடுருவிவிட்டது. இப்போது விநாயகர் வழிபாடும் பழங்குடியின சமுதாயத்தில் சகஜமாகிவிட்டது'' என்று சொல்கிறார் ஸ்மிதா.

பழங்குடியின மக்களின் வறுமையையும், இயலாமையையும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்திக் கொண்டு தங்கள் அமைப்புகளை வலுப்படுத்திக் கொண்டன என்கிறார் ஃபக்ராம்.

''வனவாசி கல்யாண் பரிஷத் அமைப்பின் உறுப்பினர்கள் முதலில் பழங்குடி மக்களின் பிரச்சனைகள் பற்றி பேசுகின்றனர். இதனால் அவர்கள் ஈர்க்கப்படுகின்றனர். இப்படியாக பழங்குடியினரிடம் சுமூக உறவை வளர்த்துக் கொண்டனர். பிறகு தண்ணீர், விவசாயம், சுகாதாரம், நீர்பாசனம் என அவர்களின் நலனுக்கான பல பிரச்சனைகளை பற்றி பேசுவதோடு, பாரம்பரியம், கலாசாரம், இந்து மதம், பூர்வீகம் என்று தங்களுக்கு தேவையான பலனை பெறுவதற்கான விஷயங்களையும் பேசுகின்றனர்'' என்கிறார் ஃபக்ராம்.

இந்துத்தாவா, இந்து நாடு என்ற திட்டங்களின் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் பிற அமைப்புகள் பணியாற்றுகின்றன என்கிறார் ஸ்மிதா.

''இங்கு பல பசு பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. சாலையில் செல்லும் மாட்டிற்கு வாகனத்தில் அடிபட்டால் வாகன ஓட்டுநரை அடித்து துவைக்கின்றனர். ஆனால் மாடுகள் சாலையில் சுற்றுவதை அவர்கள் கட்டுப்படுத்துவதில்லை. இந்துத்வா என்ற தாரக மந்திரத்தை கொண்டு செயல்படும் இவர்களைப் பற்றி ஏழை மக்களுக்கு தெரிவதில்லை. தங்களின் நல விரும்பிகள் என்று பழங்குடியினர் நினைக்கும் அளவுக்கு செயல்படுகிறார்கள். ஆனால் உண்மையில் வனப் பகுதியில் பழங்குடியினரின் உரிமையை உறுதி செய்யும் வனச் சட்டங்களை ஆட்சியாளர்கள் பலவீனப்படுத்துகிறார்கள் என்பது அவர்களுக்கு புரிவதில்லை'' என்கிறார் ஸ்மிதா குப்தா.

'வீடு கட்ட செங்கல்லே இல்லை என்ற நிலையில் அயோத்யாவில் கோயில் எப்படி?'

1992ஆம் ஆண்டு அயோத்யாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அங்கு ராமர் ஆலயத்தை கட்டுவதற்காக இங்கிருந்து பழங்குடியினர் சிலர் அழைத்து செல்லப்பட்டனர்.

''இங்கு இவர்களுக்கு வீடு கட்ட செங்கல்லே இல்லாதபோது, அங்கு அயோத்யாவில் ஆலயம் கட்ட இங்கிருந்து சென்றதற்கான காரணம் என்ன?''

1991இல் கோண்ட்வானா கன்தந்த்ர கட்சி (ஜிஜிபி) உருவாக்கப்ப்ட்ட்து. இவர்களின் கோரிக்கை என்ன தெரியுமா? மஹாகெளஷல் பகுதியில் கோண்ட்வானா மாநிலம் வேண்டும் என்பதுதான்.

ஆனால் ஜிஜிபி விரைவிலேயே அரசியல் பேரங்களுக்கு படிந்துவிட்டது. கோண்ட் பழங்குடியினரின் கட்சியாக ஜிஜிபி இருந்தால், பில் பழங்குடியின இளைஞர்கள் இணைந்து கடந்த ஆண்டு 'ஜெய் ஆதிவாசி யுவா சக்தி' என்ற அமைப்பை உருவாக்கினார்கள். தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது, அதன் நிறுவனர் ஹிரா லால் அலாவா காங்கிரஸ் கட்சியில் இணைந்ததால், அமைப்பு சிதைந்துபோனது.

பொதுத்தொகுதிகளில் பழங்குடியின வேட்பாளர் ஒருவரைக்கூட இதுவரை பாஜகவோ அல்லது காங்கிரஸோ நிறுத்தியதில்லை என்பது அரசியல் சார்பு கொண்ட வாக்கு வங்கி அரசியல்.

இதைப் பற்றி காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதியிடம் பேசினோம். பழங்குடியினருக்கு பொதுத்தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதது ஏன் என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை.

''பழங்குடியினருக்கு குறிப்பிட்ட தொகுதிகளை ஒதுக்கி தனிமைபடுத்தியிருப்பது ஆச்சரியமான விஷயம். அவர்களை மைய நீரோட்டத்தில் இணைக்க நாங்கள் முயன்று வரும் நிலையில், அவர்களுக்கு என்று தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதே கேள்விக்குரிய ஒன்று'' என்கிறார் பங்கஜ் சதுர்வேதி.

மத்திய பிரதேச மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் ரஜ்னீஷ் அகர்வாலிடம் இதே கேள்வியை கேட்டோம்.

அதற்கான தேவையே இதுவரை எழவில்லை ஏனெனில் அவர்களுக்காக 47 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்கிறார் ரஜ்னீஷ். ஆனால் மக்கள்த்தொகையில் பழங்குடியினர் மற்றும் தலித்களின் பங்களிப்பு 36 சதவிகிதமாக இருக்கும் மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் பதவி என்பது பொதுப்பதவியாக இருக்கும் நிலையில், பிராமணர், தாக்கூர், பனியா போன்றவர்களே அந்த பதவியை அலங்கரிப்பது ஏன் என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :