கஜ வேதனை: "இதிலிருந்து எப்படி மீளப் போகிறோம்னு தெரியல" - கண்ணீர் சிந்தும் மக்கள் #Groundreport

Kaja Cyclone கஜ

நாகப்பட்டினம் மாவட்டத்தைக் தாக்கிய கஜ புயல், பெரும் சேதத்தை ஏற்படுத்தி அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்துள்ளது. இதிலிருந்து அவர்கள் மீள்வதற்கு வெகு நாட்களாகக்கூடும்.

நாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யம் செல்லும் பாதை மிக அழகானது. சிறிய தார்ச் சாலைதான் என்றாலும் இருபுறமும் மரங்களும் சிறிய வீடுகளும் கடைகளுமாக ஒழுங்கும் நேர்த்தியுமாக காட்சியளிக்கும். அங்கிருந்து பிரியும் சாலைகளில் சென்றால் மூன்று முதல் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் கடற்கரையையும் மீன்பிடி கிராமங்களையும் அடைந்துவிட முடியும்.

பெரிதாக வேலைவாய்ப்பு ஏதும் இல்லாத இந்த மாவட்டத்தில் விவசாயம், தோட்டவேலை, சிறிய கடைகள், மீன் பிடிப்பு ஆகியவையே பிழைப்பிற்கு ஆதாரம். ஆனால், கடந்த வெள்ளிகிழமை அந்தப் பகுதியை சூறையாடிய கஜ புயல் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்டிருக்கிறது. நாகப்பட்டினத்திற்கும் வேதாரண்யத்திற்கும் இடையில் கரையைக் கடந்த அந்தப் புயலால் நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் எல்லாமே பாதிப்பை எதிர்கொண்டிருந்தாலும், மிக மோசமாக அழிவைச் சந்தித்திருப்பது நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணியிலிருந்து கோடியக்கரை வரையுள்ள பகுதிகள்தான்.

இந்தப் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான சிறு கிராமங்கள், மீளவே முடியாத பெரும் பொருட்சேதத்தை எதிர்கொண்டிருக்கின்றன.

"இந்தக் கடையைப் பாருங்கள். இதிலிருந்து எனக்கு தினமும் என்ன வருமானம் கிடைத்திருக்கும்? இந்த சிறிய கடையை வைத்துத்தான் பிழைப்பை நடத்திக்கொண்டிருந்தேன். சனிக்கிழமை காலையில் வந்து பார்த்தால் பாதி கடையையே காணோம்" என்கிறார் வேட்டைக்காரனிருப்புக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கடையின் உரிமையாளரான இளஞ்செழியன். இவரது கடை இருப்பது ஒரு சிறிய கடை வீதி. ஆனால், புயலுக்குப் பின் அந்தப் பகுதியைப் பார்த்தால், ஏதோ மனித நடமாட்டம் இல்லாத பகுதியில் இருப்பதுபோன்ற தோற்றம் கிடைக்கிறது. அவரது கடை உட்பட அந்தப் பகுதியில் இருந்த வீடுகள், கடைகள், மரங்கள் அனைத்தும் கஜ புயலால் சூறையாடப்பட்டுவிட்டன.

அதே சாலையில் அடுத்தடுத்து உள்ள பூவைத்தேடி, காமேஸ்வரம், நாலுவேதம்பதி, தாமரைப்புலம், நாகரோடை,தோப்புத்துறை, விழுந்தமாவடி, கோவில்பத்து என வேதாரண்யம் வரையிலான கிராமங்களில் எல்லாம் வீடுகள், தோப்புகள், கடைகள் அழிந்துபோயுள்ளன.

இந்தப் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் தென்னை சாகுபடி நடைபெறுகிறது. அது தவிர, புளியமரம் போன்ற மரங்களின் மூலமும் விவசாயிகள் நல்ல வருவாயை ஈட்டிவந்தனர். பல குடும்பத்தினர், வீடுகளை ஒட்டியுள்ள நிலப்பகுதியில் சிறிய அளவில் தென்னந்தோப்பு, புளியந்தோப்பு ஆகியவற்றைப் பராமரித்து அவற்றிலிருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டே வாழ்ந்துவந்தனர்.

"வீட்டில ஏதாவது செலவுனா தேங்காயும் புளியும் பறிச்சுப்போட்டு கடையில குடுத்து, செலவைச் சமாளிப்போம். எனக்கு விவரம் தெரிஞ்சு தேங்கா, புளியெல்லாம் காசு கொடுத்து நாங்க வாங்குனதேயில்லை. ஏன், என் அம்மாவே வாங்கியதில்லை. இந்தப் புயல் எங்க வீட்டில் இருந்த எல்லா மரத்தையும் சாய்த்துவிட்டது. இனிமே புளியெல்லாம் காசுகொடுத்து வாங்கனுமான்னு எங்கம்மா அழுகுது. எங்க வீட்டில் எட்டுப் பேர் இருக்கோம். இந்தத் தோட்டம்தான் ஆதாரம். எப்படி இதிலிருந்து மீளப் போகிறோம்னு தெரியலை" என்கிறார் காமேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார்.

இந்தப் பகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கான தென்னை மரங்களும் புளிய மரங்களும் வீழ்ந்துள்ளன. இந்த மரங்களை மட்டுமே நம்பியிருந்தவர்கள் அடுத்த என்ன செய்வது என்ற அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள். "வீழ்ந்த மரங்களுக்கு இழப்பீடு தரப்படுமென அரசு அறிவித்திருந்தாலும் அவை இந்த மரங்கள் தந்துவந்த வருவாய்க்கு ஒருபோதும் ஈடாகாது" என்கிறார் உதயகுமார்.

கஜ புயல் கரையைக் கடந்த பிறகு, வெள்ளிக்கிழமை காலையிலிருந்து இந்தப் பகுதியே மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. சனிக்கிழமை மதியத்திற்குப் பிறகு நாகப்பட்டினம் - வேதாரண்யம் சாலையில் கிடந்த மரங்கள் ஓரளவுக்கு அகற்றப்படவே, அதற்குப் பிறகே ஊடகங்கள், அரசுப் பணியாளர்கள் வேதாரண்யத்திற்குச் செல்ல முடிந்தது.

வேதாரண்யம், கோடியக்கரை பகுதியை முற்றிலுமாக உருக்குலைத்துப்போட்டிருக்கிறது இந்தப் புயல். வீடுகள், கடைகள், செல்போன் கோபுரங்கள், கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுகள் என எதுவும் மிஞ்சவில்லை. வேதாரண்யம், கோடிக்கரை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டியுள்ள கடற்கரைப்பகுதியில் 100 அடி உயரத்திற்கு மிகப் பெரிய செல்போன் கோபுரம் ஒன்று பிஎஸ்என்எல் நிறுவனத்திற்காக அமைக்கப்பட்டுவந்தது. நாற்பதடி உயரத்திற்குக் கட்டப்பட்ட இந்த பிரம்மாண்டமாக கோபுரம் அப்படியே சரிந்து விழுந்திருக்கிறது. வனவிலங்கு சரணாலயத்தில் பல மான்கள் இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்திருக்கின்றன. மரங்கள் சாய்ந்துவிட்டதால், பறவைகள் கூடுகளைத் தேடி அலைந்துவருகின்றன.

அரசு நிர்வாகத்தைப் பொறுத்தவரை முதலில் கீழே விழுந்த மரங்களை அகற்றி சாலை வசதியை ஏற்படுத்துவதிலும் அதற்குப் பிறகு மின் இணைப்பைக் கொடுப்பதிலும் முன்னுரிமை காட்டிவருகிறது. ஆனால், புயல் கரையைக் கடக்க ஆரம்பித்த வெள்ளிக்கிழமையிலிருந்து தற்போதுவரை தங்களுக்கு உணவு, குடிநீர் போன்ற எதுவும் கிடைக்கவில்லையென சனிக்கிழமை இரவிலிருந்தே பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டங்களை நடத்த ஆரம்பித்திருக்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமையன்று நாகப்பட்டினம் - வேதாரண்யம் சாலையில் திருப்பூண்டி துவங்கி, வேதாரண்யம்வரை ஆங்காங்கே பொதுமக்கள் அடிப்படை வசதிகளைக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலைகளைச் சீரமைப்பதற்காகவும் மின் விநியோகத்தை சீரமைக்கவும் வந்த வாகனங்கள் எந்த ஊருக்குள்ளும் செல்ல முடியாமல் சாலைகளிலேயே நிறுத்தப்பட்டன. காமேஸ்வரம் பகுதியில் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அந்த மாவட்ட அமைச்சர் ஓ.எஸ். மணியன், சில பகுதிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சில பகுதிகள் இயல்பாக இருப்பதாகவும் கூறியதாக சனிக்கிழமை மாலையிலிருந்து இந்தப் பகுதியில் செய்தி பரவியது. இதையடுத்து அமைச்சருக்கு எதிரான உணர்வாலும் பலரும் போராட்டத்தில் இறங்கினர். வெள்ள சேதத்தைப் பார்வையிட வந்த அமைச்சர் ஓ.எஸ். மணியனின் கார் முற்றிலுமாக அடித்து நொறுக்கப்பட்டது. அவர் வேறொரு காரில் ஏறித் தப்பினார். பல இடங்களில் போராட்டக்காரர்கள், அமைச்சர் ஓ. எஸ். மணியன் மன்னிப்புக்கேட்க வேண்டுமென்பதை ஒரு கோரிக்கையாகவே முன்வைத்தனர்.

இந்தப் போராட்டங்களின் காரணமாக ஞாயிற்றுக்கிழமையின் முற்பகலில் மீட்புப் பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டது. நாகை மாவட்ட துணை ஆட்சியர் கமல் கிஷோர் பேச்சுவார்த்தைகளின் மூலம் போராட்டங்களைக் கைவிடச் செய்து, நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்திவருகிறார்.

"புயல் இந்தப் பகுதியையே உருக்குலைத்துப்போட்டுள்ளது. மரங்கள் விழுந்திருக்கின்றன. மின் கம்பங்கள் விழுந்திருக்கின்றன. பெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இதையெல்லாம் போர்க்கால அடிப்படையில் சரிசெய்துவருகிறோம். மக்களும் அதற்கு ஒத்துழைப்புத் தர வேண்டும்" என பிபிசியிடம் கூறினார் கமல் கிஷோர்.

கஜ புயல், அந்தப் பகுதியில் இருக்கும் மின்சாரக் கட்டமைப்பு மொத்தத்தையுமே சீர்குலைத்துள்ளது. அரசு அளித்துள்ள தகவலின்படி ஒட்டுமொத்தமாக சுமார் 84,500 மின் கம்பங்கள் இந்த புயலால் நொறுங்கியிருக்கின்றன. சுமார் 4200 கி.மீ. தூரத்திற்கான மின் பாதைகள் சேதமடைந்திருக்கின்றன. 200 மின் நிலையங்களும் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன என அரசு கூறியிருக்கிறது.

"போர்க்கால அடிப்படையில் மின் இணைப்பைக் கொடுக்க முயற்சிகளை மேற்கொண்டுவருகிறோம். மூன்று நாட்களுக்குள் பெரும்பாலான பகுதிகளில் இயல்புநிலை திரும்பிவிடும் என எதிர்பார்க்கிறோம்" என்கிறார் மின்துறை அமைச்சர் தங்கமணி.

புயல் வருவதற்கு முன்பாகவே இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக, பெரிய அளவில் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுவிட்டன. ஆனால், தங்கள் வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு தங்கவைக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் போதுமான வசதிகள் இல்லை என்பது எல்லா இடங்களிலுமே புகாராக இருக்கிறது. அரசு ஏற்பாடுசெய்த 493 முகாம்களிலும் தேவையான குடிநீர், உணவு, போர்வை போன்றவை வழங்கப்பட்டதாக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. ஆனால், பெரும்பாலான முகாம்களில் இருந்தவர்கள் தங்களுக்கு எதுவுமே கிடைக்கவில்லையென்றே கூறினர்.

வேதாரண்யத்தில் உள்ள தோப்புத்துறையில் ஏற்பாடுசெய்யப்பட்ட முகாமில் இரண்டு வேளை உணவுக்குப் பிறகு, எதுவுமே வழங்கப்படவில்லையென அங்கே தங்கியிருந்த மக்கள் புகார் கூறினர். "புயல் வீசிய இரவன்று 100 பேர் இங்கே வந்தோம். இப்போது கிட்டத்தட்ட 200 பேர் இங்கே தங்கியிருக்கிறோம். எந்த வசதியும் இல்லை. புயல் வீசிய இரவன்றும் அடுத்த நாள் காலையிலும் உணவு கொடுத்தார்கள். அதற்குப் பிறகு யாரும் கண்டுகொள்ளவில்லை. பக்கத்திலிருக்கும் உணவகத்தில் இருப்பவர்தான் சாப்பாடு தருகிறார். அவரையும் ஆளும்கட்சிக்காரர்கள் தடுக்கிறார்கள்" என பிபிசியிடம் கூறினார்கள் அங்கிருந்த பெண்கள்.

தோப்புத்துறைக்கு அடுத்து உள்ள ஆறுகாட்டுத் துறை ஒரு மீனவ கிராமம். அரசின் முன்னறிவிப்பு காரணமாக யாரும் இந்தப் பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் செல்லவில்லை. ஆனால், கரையோரமாகவும் ஆற்றிலும் நிறுத்தப்பட்டிருந்த படகுகளில் பெரும்பாலான படகுகள் காற்றில் தூக்கிவீசப்பட்ட சேதமடைந்திருக்கின்றன. ஆறுகாட்டுத் துறை மட்டுமல்லாமல், பெரும்பாலான மீனவ கிராமங்கள் எல்லாவற்றிலும் இதே கதைதான். நாகப்பட்டினத்தில் செருதூர் முதல் கோடியக்கரை வரையிலான மீனவ கிராமங்களில் கரையோரம் உள்ள வீடுகளில் கடல்நீர் உள்புகுந்ததால், வீடுகள் சேறால் நிரம்பியிருக்கின்றன.

இந்தப் பகுதியில் வசித்துவரும் முதியவர்கள், இந்த கஜ புயலை 1977ஆம் வருட புயலுடன் ஒப்பிடுகிறார்கள். 1977 நவம்பர் 12ஆம் தேதி நாகப்பட்டினத்தில் கரையைக் கடந்த இந்தப் புயலில் சுமார் 650 பேர் உயிரிழந்தனர். இப்போது அந்த அளவுக்கு உயிரிழப்பு இல்லையென்றாலும் சேதம் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்கிறார்கள் அவர்கள்.

மாநில அரசு உடனடியாக செய்ய வேண்டியவை

பிரதான சாலைகளுக்கு அப்பால் உள்ள கிராமங்களுக்குச் செல்லும் சாலைகள் சீரமைக்கப்படுவது, முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு உணவும் மருத்துவ வசதியும் செய்துதருவது, மின்சார இணைப்பு இல்லாததால் முடங்கிக்கிடக்கும் குடிநீர் விநியோகத்தை சீரமைப்பது, நியாய விலைக்கடைகளிலிருந்து உடனடியாக உணவுப் பொருட்களை விநியோகிப்பது ஆகியவற்றில் உடனடியாக மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.

பிற மாவட்டங்களிலிருந்து வரும் காய்கறிவரத்து முற்றிலுமாக இல்லாமல் போயுள்ளது. செல்போன் கோபுரங்கள் முடங்கியிருப்பதால் தொலைத்தொடர்பு வசதிகள் முற்றிலுமாக முடங்கியிருக்கின்றன. மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்தப் பிரச்சனைகளில் கவனம் செலுத்திவருவதாகச் சொல்கிறது.

இந்தப் பகுதியில் ஏற்பட்டிருக்கும் சேதத்தை சுருக்கமாகச் சொல்வதென்றால், இங்குள்ள குடும்பங்களில் பாதிப்பு இல்லாத குடும்பங்களே இல்லையென்று சொல்லலாம். அரசு நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டிருந்தாலும் அது போதுமானதாக இல்லை என்பதுதான் உண்மை. இது புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மேலும் ஆத்திரமடையச் செய்கிறது. கடந்த இரண்டு நாட்களாக அமைச்சர்கள் முற்றுகையிடப்படுவது, வாகனங்கள் தாக்கப்படுவது ஆகியவைற்றுக்கு இந்த கோபமே காரணம்.

சகஜ நிலை திரும்புவதற்கான காலம் அதிகரிக்க அதிகரிக்க நிர்வாகம் மீதான கோபமும் அதிகரிக்கக்கூடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்