கஜ புயல் துயரம்: பூப்படைந்ததால் தென்னந்தோப்பில் தங்கிய சிறுமி மரம் விழுந்து பலி

  • 21 நவம்பர் 2018
விஜயலட்சுமி

தமிழகத்தை உலுக்கிய கஜ புயல் தாக்குதலில் இறந்த பலரில் ஒருவர் பட்டுக்கோட்டை அடுத்த அணைக்காடு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது விஜயலட்சுமி.

இந்த சிறுமியின் மரணத்திற்கு புயல் மட்டுமே காரணமல்ல என்ற கூற்று எழுந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு பூப்படைந்திருந்த விஜயலட்சுமியை வீட்டுக்கு வெளியே, தென்னந்தோப்பில் உள்ள ஒரு குடிசையில் அந்தப் பெண் தங்கவைக்கப்பட்டாள். அப்போது புயலில் தென்னைமரம் ஒன்று வேருடன் சாய்ந்து குடிசையில் விழுந்தபோது அந்தப் பெண் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.

பூப்படைந்த பெண்ணை வீட்டில் தங்கவைக்ககூடாது என்ற வழக்கத்தின் காரணமாகவே இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக இப்போது விமர்சனங்கள் எழுகின்றன.

புயலின் சீற்றத்தால் விஜயலட்சுமி உறங்கிக்கொண்டிருந்த குடிசையின் மீது தென்னைமரம் விழுந்ததில் சிறுமி பலியானார் என்பதை குடும்ப உறுப்பினர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

விஜயலட்சுமியின் பாட்டி விசாலாட்சியிடம் பேசியபோது,

''வயதுக்கு வந்த பெண் குழந்தையை வீட்டுக்கு வெளியில் தனி அறையில்தான் வைத்திருக்கவேண்டும் என்ற பழக்கம் எங்கள் ஊரில் எல்லா தரப்பு மக்களிடமும் உள்ளது. புயல் வந்த சமயம் என் மகனிடம் விஜயலட்சுமியை பாதுகாப்பாக வேறு இடத்திற்கு அழைத்துப் போக வேண்டும் என்று கூறினேன். ஆனால் நாங்கள் தென்னந் தோப்பில் வேலை செய்வதால், இந்த குடியிருப்பை தவிர்த்து நாங்கள் செல்வதற்கு வேறு இடம் இல்லை என்பதால் இங்கேயே ஒரு குடிசை அமைத்து தங்கவைத்தோம். தென்னை மரம் அந்த குடிசை மீது விழுந்ததால், விஜயலட்சுமி இறந்துவிட்டாள். அவளின் மரணம் எங்களுக்கு இழப்புதான். தனிக் குடிசையில்தான் தங்க வைக்கவேண்டும் என்ற வழக்கத்தை மீற முடியவில்லை,''என்று கூறினார்.

சிறுமியின் மரணத்திற்காக வருத்தப்பட்டாலும், தங்களது வழக்கத்தை பின்பற்றியதில் எந்தவித தவறும் இல்லை என்றே விசாலாட்சி நம்புகிறார். சிறுமியின் தாத்தா துரைராசுவிடம் வருத்தத்திற்கான சாயல் இருந்தாலும், மரணத்தை தடுத்திருக்கலாம் என்ற எண்ணம் தனக்கு தோன்றவில்லை என்கிறார்.

பூப்படைந்த பெண் குழந்தைகள் மற்றும் மாதவிலக்கு ஏற்படும் பெண்களை தனி அறையில் தங்கவைக்கும் பழக்கம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல இடங்களில் இன்றும் கடைப்பிடிக்கபடும் பழக்கம் என ச மூக ஆர்வலர் வீர சேனன் கூறுகிறார்.

''ஏழை, செல்வந்தர்கள் என்ற பாகுபாடு இல்லை. பெண் குழந்தைகளை மூன்று நாட்கள் தனியாக தங்கவைக்கும் பழக்கம் இங்கு பரவலாக உள்ளது. ஒரு சிலர் மட்டும் தங்களது வீட்டுக்குள் ஓர் அறையை ஒதுக்கி கொடுக்கிறார்கள். விஜயலட்சுமியின் குடும்பத்தை பொருத்தவரை குழந்தையின் பெற்றோர் குடிசையில் வசிக்கிறார்கள் என்பதால், தங்களது குடிசைக்கு வெளியில் தனியாக ஒரு குடிசை அமைத்து தங்கவைத்துள்ளனர். ஆனால் புயல் சமயத்தில் குழந்தையை தங்களது குடிசைக்குள் தங்கவைத்திருந்தால் அவர் உயிர்பிழைத்திருப்பார் என்று தோன்றுகிறது. குறைந்தபட்சம் விஜயலட்சுமியின் மரணம் இங்குள்ள பெற்றோர்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்,'' என்கிறார் வீர சேனன்.

மாதவிலக்கு காலத்தில் பெண்களை தீட்டாக கருதும் எண்ணம் மாறவேண்டும் என விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினாலும் இந்த மாற்றத்தை கொண்டுவருவது சவாலான பணிதான் என்கிறார் தமிழ்நாடு குழந்தைகள் நல ஆணையத்தின் தலைவி எம்.பி. நிர்மலா .

''பூப்படைந்தபோதும் மாத விலக்கு காலத்திலும் பெண்கள் வீட்டுக்குள் தங்கக்கூடாது என்ற நம்பிக்கை தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ளது. அறிவியல் பூர்வமாக எடுத்துரைத்தாலும், பெற்றோர்கள் மத்தியில் மாற்றத்தை கொண்டுவருவது சவாலான பணிதான். சமீபமாக பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த பழக்கம் உள்ளது என்பது தெரியவந்தது. அரசு அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், மனமாற்றம் பெற்றோர்களிடம் ஏற்படவேண்டும்,'' என்கிறார் நிர்மலா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :