‘கஜ’ புயல்: பூப்பெய்திய மகளின் மரணத்தை தடுக்க முடியாமல் தவித்த தாய் - நடந்தது என்ன?

இறந்த சிறுமியின் தாய் பானுமதி
Image caption இறந்த சிறுமியின் தாய் பானுமதி

''அம்மா நான் செத்திருவேன்,'' மூச்சை விடும் கடைசி தருணத்தில் தாய் பானுமதியிடம் பேசியிருக்கிறாள் 14 வயதான பட்டுக்கோட்டை சிறுமி விஜயலட்சுமி.

நவம்பர் 16ம் தேதி கஜ புயல் தமிழத்தின் பல மாவட்டங்களை உருக்குலைத்தது. அந்த இரவு, பூப்பெய்திய மூன்றாம் நாள், அதீத பயத்தில் தனது தாய் பானுமதியுடன் உறங்கிய விஜயலட்சுமி விழிக்கவேயில்லை.

பூப்பெய்திய பெண் குழந்தைக்கு 16வது நாள் சடங்கு விழா நடத்திய பின்னர்தான் வீட்டுக்குள் அழைத்துவர வேண்டும் என்ற பழக்கத்தை அணைக்காடு கிராமத்தில் வசிக்கும் விஜயலட்சுமியின் குடும்பம் பின்பற்றியது.

தங்களுடைய குடிசைக்கு அருகில் மகளுக்காக சிறிய குடிசை ஒன்றை பெற்றோர் அமைத்துள்ளனர். சிறுமியின் பெற்றோர் தென்னைமரத் தோப்பில் வேலைசெய்வதால், புயல் வந்த நாளில் அங்கிருந்து வெளியேறாமல் தோப்பில் தங்கியுள்ளனர். தந்தை செல்வராஜ் பழைய குடிசையில் உறங்க, புது குடிசையில் சிறுமி விஜயலட்சுமி, தாய் பானுமதி மற்றும் பாட்டி அலமேலு தங்கியிருந்தனர்.

மகளின் கடைசி நிமிடங்கள் பார்த்த தாய்

புதிதாக அமைக்கப்பட்ட குடிசை மீது சாய்ந்த தென்னை மரம் நேராக விஜயலட்சுமி மீது விழுந்ததில் அவர் இறந்துள்ளார் என்கிறார் தாய் பானுமதி(40).

''என் மகள் தனியாக உறங்கியதில்லை. ஆனால் வயது வந்த பெண்ணை சடங்கு முடிவதற்குள் வீட்டுக்குள் சேர்க்கக்கூடாது என்பதால் வீட்டுக்கு வெளியே குடிசை அமைத்து தங்கவைத்தோம். அவள் தனியாக உறங்கமாட்டாள் என்பதால் நானும் என் அம்மாவும் அவளுக்கு துணையாக அருகில் படுத்துக்கொண்டோம். குடிசை மீது சாய்ந்த மரம் என் மகளின் நெஞ்சு பகுதியில் விழுந்தது. வாயில் ரத்தத்துடன் நான் செத்திருவேன் மா சொல்லிவிட்டு அவள் இறந்துவிட்டாள்,''என்று கதறி அழுதார் பானுமதி.

மரம் விழுந்த சமயத்தில் விஜயலட்சுமியின் நெஞ்சில் பலத்த காயம் ஏற்பட்டது. பானுமதியின் இடது கால் மீது மரத்தின் மற்றொரு பாகம் விழுந்ததால், எழ முடியாமல் சத்தமிட்டு கதறியிருக்கிறார்.

''என் அம்மா மட்டும் தப்பித்தார். அவர் சிரமப்பட்டு வெளியேறி தென்னந்தோப்பிற்கு அருகில் இருந்தவர்களை கூட்டிவர சென்றார். என் கணவரும் முடிந்தவரை மரத்தை இழுத்துப்பார்த்தார். முடியாமல் பதறினார். ஆனால், நான் என் மகள் துடிதுடித்து இறப்பதை பார்த்தபடியே ஒரு மணி நேரம் அவளோடு இருந்தேன்,''என்று பலத்த சத்தத்துடன் அழுதபடி பேசினார் பானுமதி.

இரண்டாவது இழப்பு

தற்போது பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கால் முறிவுக்காக சிகிச்சை எடுத்துவரும் பானுமதி மயக்கநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர் என்கிறார் அவரது சகோதரி மீனாட்சி.

கனத்த மனதுடன் மகளின் சடலத்தோடு ஒரு மணி நேரம் இருந்த பானுமதிக்கு ஏற்பட்ட இழப்பு அவரது வாழ்நாளில் மறக்கமுடியாத தருணமாகிவிட்டது.

''உடல்நிலை சரியில்லாத நேரத்தில் ஒரு தாய்க்கு ஆறுதலாக மகள் இருந்தால், அந்த தாய் சீக்கிரமாக குணமடைவாள். இனி எனக்காக என் மகள் வரப்போவதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் என் இளைய மகன் பாம்பு கடித்ததால் இறந்துபோனான். அந்த இழப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. இப்போது மகளை இழந்துவிட்டேன். வாழ்வதற்காக என்னிடம் மிச்சம் இருந்த ஒரே நம்பிக்கையாக இருந்தவள் என் மகள்தான் . என் தேவதை அவள்,'' என மீளாதுயரில் இருக்கும் பானுமதி பேசுகையில் அவரை சமாதானப்படுத்தமுடியவில்லை.

''இறுதிச் சடங்கை பார்க்கமுடியவில்லை''

பூப்பெய்திய மகளை தனி குடிசையில் உறங்கவைத்ததால் இழப்பு நேர்ந்தது என்று கூறும் பானுமதி, ''எங்கள் ஊரில் உள்ள பழக்கத்தால் இன்று என் மகளை இழந்துவிட்டேன். பலத்த காற்று வீசும் என்று அறிவித்தார்கள்.

ஆனால், அதன் தாக்கம் எங்கள் குடும்பத்தை உலுக்கிவிட்டு போகும் என்று நான் நினைக்கவில்லை. என் மகள் வயதுக்கு வந்ததால் தனி குடிசையில் தங்கவைத்திருந்தேன். அது நடக்காமல் இருந்திருந்தால் பத்திரமாக இருந்திருப்பாள் ,'' என்கிறார் பானுமதி.

கண்ணீர் துளிகள் பானுமதி முகத்தில் வழிய சகோதரி மீனாட்சி ஆறுதல்படுத்தினார். ''என் மகளை அடக்கம் செய்வதற்கு முன்பு அவள் முகத்தைக் கூட பார்க்கமுடியவில்லை. இறுதியாக அவள் உயிர் போகும் நேரத்தில் வாயில் ரத்தத்துடன் அம்மா என்று அழைத்ததும், நான் சாகப்போகிறேன்மா என்று சொன்ன வார்த்தைகளும் மட்டுமே என் கண்களில் வந்துபோகின்றன. இந்த நினைவுகளை சுமந்துகொண்டு எப்படி வாழ்வேன்,'' என்று அரற்றினார் பானுமதி.

கடந்த நான்கு நாட்களாக சரியாக தூங்காமல், உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பதால், அவரை அறியாமல் சில நிமிடங்கள் கண் மூடுகிறார். ''என்னால் பானுமதியை சமாதானம் செய்யமுடியவில்லை. மகளை இழந்த சோகம் பெரிது. எனக்கு நான்கு மகள்கள் இருக்கிறார்கள். என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. பானுமதிக்கு உடல்நலன் தேறுவது முக்கியம் என்பதால், நான் உதவிக்காக வந்துள்ளேன். ஆனால் மனதளவில் தீராத சோகத்திற்கு ஆளாகியிருக்கிறாள் என் தங்கை,'' என்கிறார் மீனாட்சி.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பெண்கள் பிரிவில் உள்ள பலரும் பானுமதிக்கு ஆறுதல் சொல்கிறார்கள். பானுமதியின் மூத்த மகனும், ஒரே வாரிசாகவும் மாறிவிட்ட பிரேம் குமார் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார். அவரிடம் பேச வார்த்தைகள் இல்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்