பெண்கள் பகலில் 'நைட்டி' அணிய தடை விதித்த ஆந்திர கிராமம்

nightie படத்தின் காப்புரிமை Image copyrightPRIYA KURIYAN

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்று அங்கு வசிக்கும் பெண்கள் பகல் நேரங்களில் நைட்டி அணிய தடை விதித்துள்ளது.

'நைட்' (இரவு) நேரங்களில், பெரும்பாலும் தூங்கும்போது பெண்கள் அணிவதற்காக வடிவமைக்கப்பட்ட ஆடையான, 'மேக்சி' என்று சில இடங்களில் அழைக்கப்படும் 'நைட்டி' ஆடைகள் பகல் பொழுதிலும் பரவலாக அணியப்படுகின்றன.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தோக்கலப்பள்ளி எனும் கிராமத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் கொண்ட 'ஊர்ப் பெரியவர்கள்' குழுவினர், நான்கு மாதங்களுக்கு முன்பு கூடினர். அப்போது காலை ஏழு மணி முதல் இரவு ஏழு மணி வரை பெண்கள் நைட்டி அணியத் தடை விதித்தனர்.

இந்தத் தடையை மீறுபவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை தடையை யாரும் மீறவில்லை. இந்தத் தடையை மீறுவோர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 1,000 ரூபாய் சன்மானமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசி தெலுங்கு சேவையைச் சேர்ந்த சங்கரிடம் பேசிய ஊர்ப் பெரியவர்களில் ஒருவரான பல்லே விஷ்ணு மூர்த்தி, "இரவு நேரங்களில் வீட்டில் இருக்கும்போது நைட்டி அணிவது சரி. ஆனால், பகல் நேரங்களில் வெளியில் செல்லும்போது நைட்டி அணிவது அதை அணிபவருக்கு சிக்கலை உண்டாக்கும், " என்று கூறினார்.

படத்தின் காப்புரிமை Image copyrightPRIYA KURIYAN

பெரும்பாலும் மீன்பிடி தொழிலையே நம்பியுள்ள அந்தக் கிராம மக்கள், இந்தத் தடையை மீறினால் செலுத்த வேண்டிய அபாரதத் தொகையான 2,000 ரூபாய் என்பது தங்களுக்குப் பெரும் தொகை என்கின்றனர்.

இத்தகைய தடை விதிக்கப்படுவது இந்தியாவில் இது முதல் முறை அல்ல. மும்பை அருகே உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் பெண்கள் குழு ஒன்று பகல் நேரங்களில் நைட்டி அணிவது ஒழுக்கக்கேடான செயல் எனக்கூறி, அதற்குத் தடையும், அதை மீறுபவர்களுக்கு 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவித்தது. எனினும், அந்தத் தடையை யாரும் மதிக்காததால், அது நீர்த்துப்போனது.

பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய தொழில்

"கலாசாரத்தைக் காப்பவர்களாகவே இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர், நவநாகரிகத்தை காப்பவர்களாக அல்ல," என தி வாய்ஸ் ஆஃப் ஃபேஷன் இதழின் ஆசிரியர் ஷெஃபாலி வாசுதேவ் பிபிசியிடம் கூறினார்.

படத்தின் காப்புரிமை Image copyrightPRIYA KURIYAN

"சேலை அணிவதுதான் ஒழுக்கம் என நினைக்கும் நடுத்தர வர்க்க மனநிலையில் இருந்து சுதந்திரம் அளிப்பதாக இருப்பது நைட்டி. பெண்களை ஆபாசமாக காட்டாத ஆடைகளில் இதுவும் ஒன்று," என்கிறார் அவர்.

இந்தியா முழுவதும் நைட்டி உற்பத்தி செய்யும் தொழில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புடையதாக உள்ளது. 100 ரூபாய் தொடங்கி பல்லாயிரம் ரூபாய் மதிப்பிலான நைட்டிகள் சந்தையில் கிடைக்கின்றன.

சேலை போன்ற பாரம்பரிய ஆடைகள் வீட்டு வேலைகளை செய்யும்போது பெண்களுக்கு வசதியானதாக இல்லாததாலும், நைட்டி மிகவும் வசதியானதாக இருப்பதாலும் பெண்களிடம் நைட்டிகள் மிகவும் பிரபலமாக உள்ளதாக ஆடை வடிவமைப்பாளர் ரிம்சின் டாடூ கூறுகிறார். இந்தத் தடை ஆத்திரமூட்டக்கூடியதாக இருப்பதாக அவர் கூறுகிறார்.

"நைட்டி ஒன்றும் ஆடம்பரமான ஆடை அல்ல. ஆனால் அது சௌகரியமாகவும், நடைமுறைக்கு உகந்ததாகவும் உள்ளது. ஒரு துண்டு துணியை வைத்து முழு உடலையும் மூடிக்கொள்ள முடிகிறது. நைட்டி அணியத் தடை விதிப்பது நகைப்புக்குரியது, " என்கிறார் ஆடை வடிவமைப்பாளர் டேவிட் ஆப்ரகாம்.

படத்தின் காப்புரிமை Alamy

"ஆபாசம் என்பது பார்ப்பவரின் கண்களில்தான் உள்ளது," என்கிறார் அவர்.

நைட்டி இந்தியா வந்தது எப்படி?

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயப் பெண்கள் அணியும் இரவு நேர உடையாக நைட்டி இந்தியாவுக்குள் நுழைந்தது. அப்போது அது மேட்டுக்குடிகளாகத் தங்களைக் கருதிக்கொண்ட பெண்களின் ஆடையாக மட்டுமே இருந்தது.

படுக்கை அறையில் மட்டுமே அணியக்கூடிய ஆடையாக இருந்த நைட்டி எப்படி தெருக்களிலும் பரவலாக அணியக்கூடிய ஆடையானது எனத் தெளிவாகத் தெரியவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :