கஜ புயல் - 'தற்கொலை செய்துகொண்ட விவசாயி பிள்ளைகள் போல தென்னை மரங்களை வளர்த்தார்'

  • 24 நவம்பர் 2018
விவசாயி

தமிழகத்தில் கடந்த 15ம் தேதி இரவு கஜ புயல் கரையை கடந்த நிலையில் நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் கடுமையான இழப்பை சந்தித்துள்ளன. குறிப்பாக தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தென்னை விவசாயம் பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையில், தென்னை விவசாயிகளுக்கு மரம் ஒன்றுக்கு தலா ரூபாய் ஆயிரத்து 100 இழப்பீடாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாடு அருகே சோழன் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ்(55) என்ற விவசாயி கடந்த 20 வருடங்களாக ஆறு ஏக்கர் நிலத்தில் தென்னை சாகுபடி செய்து வந்துள்ளார்.

கஜ புயலில் ஏற்பட்ட சூறைக்காற்று காரணமாக ஆறு ஏக்கரில் சாகுபடி செய்திருந்த சுமார் 420 தென்னை மரங்கள் சாய்ந்து பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிய விவசாயி சுந்தர்ராஜ் கடந்த 22ஆம் தேதி காலை தனது வீட்டியில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து சுந்தர்ராஜின் நண்பரும் தென்னை விவசாயியுமான இளங்கோ பிபிசி தமிழிடம் கூறுகையில்,"சுந்தர்ராஜ் தனது ஆறு ஏக்கர் தென்னந்தோப்பினால் வரும் வருமானத்தை வைத்து தனது வாழ்வாதரத்தை நடத்தி வந்தார். கஜ புயல் காரணமாக அவரது தென்னந்தோப்பில் பயிரிட்டு வளர்த்து வந்த அனைத்து மரங்களும் வேரோடு சாய்ந்தன. இதனால் வேதனையில் மனமுடைந்த சுந்தர்ராஜ் வீட்டியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்," என்று கூறினார்.

தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி சேதுபாவாசத்திரம், மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்டம் முழுவதிலும் 42 லட்சம் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.

"எனது மாமா ஒரு நல்ல உழைப்பாளி. இரவு பகலாக பாடுபட்டு அவரின் பிள்ளைகள் போல தென்னை மரங்களை பார்த்துக் கொண்டார். மரங்கள் சாய்ந்ததை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இரவு முழுவதும் அதை நினைத்து அழுது கொண்டிருந்தார் ஒரு கட்டத்தில் மிகுந்த மன உளைச்சளில் மன நலம் பாதிக்கப்பட்டவர் போல் மாறிவிட்டார்."

எங்களால் முடிந்தவரை அவருக்கு ஆறுதல் கூறியும் திடீரென பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார் என அவரது உறவினார் மாலதி பிபிசி தழிழிடம் தெரிவித்தார்.

இது குறித்து பாப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் தெரிவிக்கையில், "விவசாயி சுந்தர்ராஜ் அவரது வீட்டில் பூச்சி மருந்து உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று அருகில் உள்ள வீடுகளில் விசாரித்தபோது, அவர் கஜ புயலால் தென்னை மரங்கள் சாய்ததால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலுடன் இருந்ததாகவும், இன்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார் என தெரிவித்ததையடுத்து அதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளோம். ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனையில் காலை விஷம் குடித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்," எனத் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்