அயோத்தி ராமர் கோவில் சர்ச்சை: அடுத்த தேர்தலில் மோதிக்கு ஆபத்தாக அமையுமா?

ராமர் கோவில் சர்ச்சை படத்தின் காப்புரிமை FACEBOOK / JANKI MANDIR / BBC

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பக்வத், டெல்லியில் கடந்த செப்டம்பரில் தொடர்ந்து பல உரைகளை ஆற்றினார். இந்த உரைகளை கேட்டு பலரும் ஊடகங்களில் ஆர்எஸ்எஸ் மாறிவிட்டது என்ற முடிவுக்கு வந்தனர். இந்த மதிப்பீடு ஆர்எஸ்எஸ்-ன் உண்மையான அரசியல் நிலையை புறக்கணித்துவிட்டது. அதேவேளையில், தசரா கூட்டத்தில் பேசிய மோகன் பக்வத், அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தை உயர்த்தி, இதில் ஆர்எஸ்எஸ்-ன் நிலை மாறவில்லை என்று அழுத்தமாக தெரிவித்தார்.

அப்போதில் இருந்து அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சனை தொடர்ந்து புகைந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக பல கருத்தரங்குகள், பேரணிகள் போன்ற பல நடப்பதை நாம் பார்க்க முடிகிறது.

முப்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைக்கு மீண்டும் இந்த நாடு போய்விடுமா, அப்படியானால் அது எந்த மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று பல கேள்விகள் எழுகின்றன.

மேலும், அயோத்தியாவின் இந்த புதுயுகத்தின் 'அத்வானி' யாராக இருப்பார் மற்றும் பலன்களை இந்த முறை வெற்றியாக மாற்றும் 'வாஜ்பேயி' யார் என்ற கேள்விகளும் இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் விட மிக முக்கியமான கேள்வி: புதுயுகத்தில் அயோத்தியா விவகாரம் இந்திய அரசியலை எந்த திசையில் எடுத்து செல்லும்?

படத்தின் காப்புரிமை Getty Images

முப்பது ஆண்டுகளுக்கு முன், அத்வானி தலைமையில் ராம ஜன்மபூமி விவகாரம் வேண்டுமென்றே அரசியலாக்கப்பட்டது. நாடு முழுவதும் இந்து அடையாளத்தை எரியூட்ட ரத யாத்திரை, கர சேவா ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டன. உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் அரசாங்கத்தை மதிக்காமல் சர்ச்சைக்குள்ளான பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்பு ராம ஜன்மபூமி இயக்கத்தின் வேகம் குறைந்தது. இதற்கு ஒரு காரணம், இந்த இயக்கத்தின் செயல்களுக்கு பிறகும் பாஜகவால் அருதி பெரும்பான்மையை பெற முடியவில்லை. எனவே, மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்க இதுபோன்ற விஷயங்களை பின்னுக்கு தள்ள வேண்டும் என்று பாஜக முடிவெடுத்தது.

இரண்டாவது, பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்பு, இந்து மத சாஸ்திரம் சிறு வட்டாரங்களில் பாராட்டப் பட்டாலும், பொது மக்கள் உள்முக சிந்தனையுடன் இருக்க, இந்த சம்பவம் ஊடகத்தினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

எனினும், அடிக்கல் நாட்டு விழா, கோவில் கட்ட திட்டம் தயாரிக்கப்பட்டது, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ஆம் தேதியை கொண்டாடுவது என அயோத்தியாவின் நினைவுகள் உயிர்ப்புடன் வைக்கப்பட்டன. இது தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளும் மக்களுக்கு இந்த சம்பவத்தை நினைவு படுத்தியது. அதோடு, இது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட லிபர்ஹன் கமிஷன், அதனை இழுத்தடித்து, முடிவுக்கு கொண்டுவரப்படாத இந்த விவகாரம் அடிக்கடி சர்ச்சையாவதை உறுதி செய்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

தான் சொந்த அரசாங்கமே அதிகாரத்தில் இருக்க, இந்த சர்ச்சையை மீண்டும் உருவாக்க ஆர்எஸ்எஸ் ஏன் முயற்சிக்கிறது?

இதற்கான ஒரு பதில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-விற்கு இடையே இருக்கும் பதற்றம். மேலும் இந்த சர்ச்சை, மோதிக்கு பிரச்சனையாக்க கிளப்பப்படுகிறது.

இரண்டாவது, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போதே பிரச்சனைகளை தீர்த்து ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக ராமர் கோவில் கட்ட வழி வகுக்கிறது என சிலர் கூறுகின்றனர். பல அப்பாவி ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள், தற்போது அதிகாரத்தில் உள்ள மோதி அரசாங்கம், ராமர் கோவிலை கட்டிவிட முடியும் என்று உண்மையிலேயே நம்புகின்றனர். ஆனால், அது நடக்காது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் திடீரென இந்த பிரச்சனையை தீர்ப்பது என்பது சாத்தியமல்ல. மேலும், 4 ஆண்டுகளால் ஏதும் செய்யாத மோதி அரசு, தற்போது ஏன் இந்த தேவையற்ற பிரச்சனையை இழுக்கப் போகிறது?

அப்படி இருக்க, அடுத்த தேர்தல் நெருங்கும் தருணத்தில் ஏன் இந்த சர்ச்சையை கிளப்ப வேண்டும்? இதற்கான பதில் மூன்று கோணங்கள் இருக்கிறது.

முதலில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவில் இருப்பவர்கள் ராமர் பக்தர்கள் என்பதை தாண்டி தேர்தல் கணக்குகள் போடும் அரசியல்வாதிகள். கடந்த தேர்தலில், அரசியல் குழப்பம் நிறைந்த சூழலில், திடீரென மோதி தலைமை வகிக்க, பாஜக வெற்றி பெற்றது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த முறை மோதியின் மாயை குறைந்துள்ளது, பாஜக-வே ஆட்சியில் இருப்பதால் தோல்விகளுக்கு யாரையும் குறைக்கூறவும் முடியாது. பல இடங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. எனவே காங்கிரஸை சபித்து பாஜகவால் ஓட்டு கேட்க முடியாது.

இந்த மாதிரியான சூழலில், உணர்ச்சிகரமான விவகாரங்களை வைத்து, இன்னும் ஒரு முறை ஆட்சியை பிடிக்கலாம் என ஆர்எஸ்எஸ்-பாஜக கணித்திருக்கும். கடந்த 4 ஆண்டுகளில், லவ் ஜிகாத் மற்றும் பசு பாதுகாவலர் போன்ற விவகாரங்கள் இந்து மத குழுக்கள் இடையே மத பேரினவாதத்தை புகையுடன் வைத்திருந்தன.

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இந்து சமய அமைப்பிற்குள் வாழ்கின்றனர். மத உணர்வுகளை வைத்து இந்த மக்கள் தொகையை பிரித்து, அரசியல் சக்தியாக்க ஒழுங்கமைத்தால் தேர்தல் அரசியலில் வெற்றி பெறலாம் என்ற பழைய கணக்கு.

ராம ஜன்மபூமி இயக்கத்தின் போது அத்வானி இந்த கணக்கை செயல்படுத்தினார். இந்து வாக்கு வங்கி அரசியல், 1989ல் இருந்து பாஜகவின் வாக்கு வங்கியை அதிகரிக்க உதவியது. அதனால், இந்து பெருமைக்கான தேர்தலாக, அடுத்த தேர்தல் மாறினால் அதில் ஆச்சரிய படுவதற்கு ஒன்றுமில்லை.

ராமர் கோவில் வைத்து திடீரென்று அரசியல் செய்வது, அடுத்த தேர்தலுக்கான பின்னணி வேலை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தன் செயல்திறன் வைத்து ஓட்டுகளை பெறுவோம் என்பதில் பாஜக நம்பிக்கையுடன் இல்லை என்பதையும் இது குறிக்கிறது.

படத்தின் காப்புரிமை AFP

ராமர் கோவில் விவகாரம் சமீபத்தில் எழுந்ததற்கு மறுபக்கத்தில், தற்போது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தங்கள் வேலையை பிரித்து கொண்டிருப்பதற்கு தொடர்புண்டு. மோதி அரசாங்கம் மத்தியில் வந்த பிறகு, பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஆனால், பொதுவாக மோதி எதற்கும் வாய் திறக்க மாட்டார். அப்படி இல்லையென்றால், அனைத்தும் அரசியல் சாசனத்தின்படி நடக்கும் என்று அறிக்கை விடுவார். இதனை பார்த்து, இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க மோதிக்கு தேவை இல்லை என்று பலரும் நினைத்துவிட்டனர்.

உண்மை என்ன என்றால், ஆட்சிக்கு வந்த பிறகு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தங்கள் வேலையை பிரித்துக் கொண்டிருக்கின்றனர். பொருளாதார திட்டங்கள் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் கட்சி மற்றும் அரசாங்கம் வழிநடத்தும். இதில் ஆர்எஸ்எஸ் தலையிடாது. மறுபக்கத்தில், பொதுமக்கள் கருத்தை பிரிப்பது, ஆக்கிரோஷமான நிலைகளை எடுப்பது போன்ற கலாசார விவகாரங்களை ஆர்எஸ்எஸ் வழிநடத்தும். ஆனால், இந்த விவகாரங்களில் அரசாங்கம் அமைதி காக்கும். ஆர்எஸ்எஸ்-ன் ஆக்கிரோஷமான அரசியலை புறக்கணிக்க முயற்சிக்கும் அரசு, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும்.

இவ்வாறு பிரிந்து வேலை பார்ப்பதினால், பசு விவகாரம், கலப்பு காதல் திருமணங்கள், இந்து மதத்தை எதிர்ப்பவர்களை கொலை செய்தவர்கள் போன்ற விஷயங்களுக்கும் தங்கள் கட்சிக்கும் அரசுக்கும் தொடர்பில்லை என்று பாஜகவால் கூற இது அனுமதியளிக்கிறது. நாட்டின் வளர்ச்சிப் பணிகளில் உழைத்துக் கொண்டிருப்பதாகவும் அரசு கூறிக் கொள்கிறது. ஆனால், ஆர்எஸ்ஸ் தான், பாஜகவின் உண்மையான ஆதாரம்.

படத்தின் காப்புரிமை PUNEET BARNALA / BBC

அரசியல் அதிகாரம் மற்றும் கலாசார செல்வாக்கு கையோடு கைசேர்ப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். இதனால், தற்போதைய ஆட்சிக்காலத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என்றும் இது இந்த அரசின் பொறுப்பு என்றும் சில குழுக்கள் உண்மையாக நினைக்கின்றனர்.

பெரும்பாலும் நகர்புற அப்பாவி இந்துத்வாக்கள் இந்த பிரிவினுள் வருகிறார்கள். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக மீது அவர்கள் அழுத்தம் செலுத்தப்படும். மற்றும் இதற்காக பல பாஜக பணியாளர்கள் செயல்பட்டு, மேலும் மேலும் இந்து சக்தியை சேர்ப்பார்கள். தாங்கள் உருவாக்கிய ராமர் கோவில் ஆதரவாளர்களை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக எப்படி கையாள்கிறார்கள் என்பதை சார்ந்தே, இந்த இயக்கம் எந்த திசையில் போகும் என்பது தெரியும்.

அயோத்தியா இயக்கத்தின் கடைசி கட்டம் மேற்கொள்ளப்பட்ட போது, பொருளாதார தாராளமயக்கமாக்குதல் முதல் அடிகளை எடுத்து வைத்தன. இந்தியா அப்போதுதான் உலகமயமாக்கல் யுகத்திற்குள் நுழைந்தது. இந்த இரு வளர்ச்சிகளும், புது வாய்ப்புகள், புதுக் கவலைகள் மற்றும் புது பிரச்சனைகளை கொண்டு வந்தன. பல இடங்களில், தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ரீதியாக உலகமயமாவதை மக்கள் அனுபவித்தனர். ஆனால் கலாசார ரீதியாக கடந்த கால கற்பனைகளே அவர்களை ஈர்த்தது.

ஒரு பக்கத்தில், தற்போதுள்ள சமூக சூழல், அயோத்தியா சர்ச்சைகளை தோண்டி எடுக்க சாதமாகவே அமைகிறது. நிலையற்ற கலாசார சூழலில் 'நாம் இந்துக்கள்', மற்றும் 'நாம்' 'நம் நாட்டில்' அநீதியை சந்திக்கிறோம் போன்ற நம்பிக்கைகளை எளிமையாக பரப்ப முடிகிறது. இந்த வகையில், அயோத்தியா இயக்கத்தின் இந்த கட்டம், இளம் மற்றும் வருங்கால தலைமுறையினரின் மனதில் வகுப்புவாத அரசியலுக்காக விதைகளை தூவி செல்லலாம்.

படத்தின் காப்புரிமை Getty Images

ராமர் கோவில் விவகாரத்தின் உதவியோடு, இந்து பாரம்பரியம், இந்து மதம் மற்றும் இந்திய வரலாற்றின் ஜோடிக்கப்பட்ட பதிப்பு, வரும் தலைமுறையினர் முன் வைக்கப்படும். தேர்தல்கள் வரும் போகும். பாஜக வெற்றி அல்லது தோல்வி அடையும், ஆனால், தற்போது 20களில் உள்ள தலைமுறையினருக்கு நம் சமூகத்தின் சுய உருவத்தை கண்ணாடியில் காண்பிப்பது அவர்கள் மனதில் பதிந்து விடும். அந்தக் கண்ணாடியில் காண்பிக்கப்படும் பின்பமே எதிர்கால இந்தியாவிலும் தங்கி விடும்.

அயோத்தியாவின் அரசியல் நீண்டு கொண்டே போக, இந்த மத அரசியலுக்கு எதிர் அரசியல் இல்லையே என்ற குழப்பமும் உள்ளது. கோவில் கட்டப்படுகிறதா இல்லையா என்பது ஒரு விவகாரம், ஆனால், ஆர்எஸ்எஸ்-ஆல் தொடங்கப்பட்ட இந்த போருக்கு, எதிர் போட்டி யாரும் இல்லை.

ஆர்எஸ்எஸ், தனது அரசியல் பாதையை முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே தெளிவாக வைத்துவிட்டது. இந்த அரசியல் அடுத்த அடி எடுத்து வைக்க அங்கு எதிர்ப்பவர்கள் யாருமில்லை. இது எதிர்காலத்தில் இந்திய ஜனநாயகத்தின் சிதைந்துபோகும் பயணத்தின் அறிகுறிகளா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :