நுரை தள்ளும் மெரினா கடற்கரை; அச்சத்தில் மக்கள் - காரணம் என்ன?

நுரை தள்ளும் மெரினா கடற்கரை; அச்சப்படும் மக்கள் - காரணம் என்ன? படத்தின் காப்புரிமை Getty Images

இன்று முக்கிய தமிழ் நாளேடுகளில் வெளியான செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: நுரை தள்ளும் மெரினா கடற்கரை; அச்சப்படும் மக்கள் - காரணம் என்ன?

மெரினா கடற்கரையில் ஒதுங்கும் நுரை குறித்து ஆய்வு செய்யப்பட்டதில், அதனால் ஆபத்து ஏதுவும் இல்லை என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"சென்னை, மெரினா கடற்கரையில் 23ஆம் தேதி முதல் அலையில் இருந்து நுரை வெளியே தள்ளப்பட்டு, கடற்கரை முழுவதும் பரவி கிடக்கிறது. இதனால் அங்கு செல்வோர் அச்சப்பட்டு கடற்கரை அலையில் கால்களை நனைக்காமல் ஒதுங்கி நின்று கடலை பார்வையிட்டு செல்கின்றனர்.

மெரினா கடற்கரையில் அலையில் அதிகளவு நுரை வருவதாகவும், கடற்கரையில் நிற்பதற்கு பயமாக இருப்பதாகவும் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. அதனடிப்படையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் உள்ள அதிகாரிகள் அடங்கிய குழு அங்கு சென்று பார்வையிட்டது.

இதுபோன்ற நுரை வருவதற்கு காரணம், கூவம் மற்றும் அடையாறு ஆறுகளில் இருந்து கடலில் கலக்கும் கழிவு நீர், ஆர்ப்பரிக்கும் அலைகளின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாததால், கடலுக்கு உள்ளே செல்லாமல் கரைக்கு அருகிலேயே அலைகளில் சுழன்று கொண்டு கிடந்தது. இந்த கழிவு நீருடன் தற்போது பெய்த மழை நீரும் அதிகளவு கலந்தது. இதில் இருந்து ஒரு விதமான நுரை வெளியேறி வருகிறது.

இவை அலையின் வேகத்தில் கரைக்கு அடித்து வரப்பட்டு கரையில் தள்ளப்படுகிறது. இதனால் வேதியியல் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை. இவை ஒரு சில நாட்கள் இருக்கும். பின்னர் சரியாகி விடும்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் இந்து - "ஜும்மா மசூதியை இடித்தால் இந்து சாமி சிலைகள் கிடைக்கும்"

படத்தின் காப்புரிமை Twitter

டெல்லியில் உள்ள ஜும்மா மசூதியை இடித்துவிட்டு தோண்டினால் அங்கு சாமி சிலைகள் கிடைக்கும் என பாஜக எம்.பி. சாக் ஷி மகராஜ் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளதாக தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

உ.பி.மாநிலம் உன்னாவ் மக்களவை தொகுதி உறுப்பினர் சாக் ஷி மகராஜ், நேற்று முன்தினம் உன்னாவ் நகரில் பேசியபோது, "மதுரா (உ.பி.) நகரில் பல ஆண்டுகளுக்கு முன்பு நான் தெரிவித்த கருத்திலிருந்து பின் வாங்கமாட்டேன். முகலாயர்கள் ஆட்சியின்போது, பல கோயில்கள் இடிக்கப்பட்டு அங்கு மசூதிகள் கட்டப்பட்டன. இப்போதுகூட டெல்லியில் உள்ள ஜும்மா மசூதியை இடித்துவிட்டு, அப்பகுதியில் தோண்டினால் அங்கு இந்து தெய்வங்களின் சிலைகளை கண்டெடுக்க முடியும். அவ்வாறு அங்கு சிலைகள் கிடைக்கவில்லை என்றால் என்னை தூக்கிலிடலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

"நம் நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்துக்கு இந்துக்கள் கார ணம் அல்ல. 4 மனைவிகளை வைத்துக்கொண்டு, 40 குழந்தைகள் பெற்றுக் கொள்கிறவர்களே (முஸ்லிம்கள்) காரணம்" என மகராஜ் ஏற்கெனவே கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

குழந்தை கடத்தலுக்கு பின்னால் மாஃபியா: ரஜினி - தினமணி

படத்தின் காப்புரிமை Getty Images

குழந்தைகளைக் கடத்தி பிச்சையெடுக்க வைக்கும் செயலுக்கும் பின் ஒரு பெரிய மாஃபியா கும்பல் இருக்கிறது என்றும் குழந்தைகளை பிச்சையெடுக்க வைப்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார் என்கிறது தினமணி செய்தி.

சென்னையில் லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் அமைப்பு ஒன்றின் சார்பாக நடத்தப்பட்ட, குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழப்புணர்வு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் இவ்வாறு பேசியுள்ளார்.

மேலும், மேற்கத்திய நாடுகள் குழந்தைகளுக்கு அதிக நிதியை செலவு செய்கின்றன. குழந்தைகள் நலனை மத்திய அரசும் கவனிக்கவில்லை, மாநில அரசும் கவனிக்கவில்லை.

சாலைகளில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை அழைத்துச் சென்று யார் இவ்வாறு செய்கிறார்கள் என்று போலீஸார் விசாரணை நடத்துவதில்லை.

குழந்தைகளைக் கடத்தி பிச்சை எடுக்க வைப்பது கொலை செய்வதைவிட பெரிய குற்றம் என்றும் அவர் பேசியதாக விவரிக்கிறது தினமணியின் செய்தி.

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா - "நிர்பயா சம்பவத்துக்கு பின்னர் விழிப்புணர்வு அதிகரிப்பு"

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்த மருத்துவ மாணவி நிர்பயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சம்பவத்துக்கு பிறகு பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் குறித்து புகார் செய்யப்படும் வீதம் அதிகரித்துள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

நிர்பயா சம்பவத்துக்கு பிறகு பெண்கள் மீதான பாலியல் வன்முறை குறித்து புகார் செய்யப்படுவது தேசிய தலைநகரத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகரித்துள்ளதாகவும், ஆனால், டெல்லியிலிருந்து ஒவ்வொரு 100 கிலோமீட்டருக்கு அந்த சதவீதத்தில் வீழ்ச்சி காணப்படுகிறது.

கடந்த 2005 முதல் 2012ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது, 2013 முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் குறித்து புகார் செய்வது 33 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :