“எதிர்வரும் தேர்தலில் பாஜகவின் முழக்கம் வளர்ச்சி அல்ல, இந்துத்துவா”: சுப்பிரமணியன் சுவாமி

“தேர்தலில் இந்துத்துவா என்ற முழக்கமே முன்னெடுக்கப்படும்” படத்தின் காப்புரிமை AFP

பாஜக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமியிடம் பிபிசி சிறப்பு உரையாடல் நிகழ்த்தியது. ராமர் கோயில், ரஃபேல், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, நாடாளுமன்ற தேர்தல் என பல்வேறு விஷயங்கள் பற்றி அவர் வெளிப்படையாக பேசினார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலை, எதிர்வரும் தேர்தல்கள் மற்றும் பிற பிரச்சனைகள் பற்றி சுப்பிரமணியன் சுவாமி விரிவாக பேசினார்.

ராமர் ஆலய விவகாரத்தில் பாஜக சற்று விலகியே இருப்பது ஏன்?

ஆளும் கட்சியான பாஜக இந்த விஷயத்தில் விலகி இருக்க வேண்டும். நீதிமன்றத்தில் ராமர் ஆலயம் தொடர்பாக நான் மனு தாக்கல் செய்திருக்கிறேன். இதை எந்தவொரு கட்சியும் கேள்வி கேட்க முடியாது. ஆனால், பாஜகவும், விஸ்வ இந்து பரிஷத்துமே இந்த விவகாரத்தை எழுப்புவது வருந்தமளிக்கிறது.

இந்திய தொல்லியல் ஆய்வு மையம் அந்த இடத்தில் ஆலயம் ஒன்று இருந்ததை உறுதி செய்துள்ளது. அதன் பிறகே அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டிருக்கிறது.

பாபர் மசூதி அந்த இடத்தில் ஒரு முக்கிய பகுதியாக இல்லை என்றும், இஸ்லாமியர்கள் தங்கள் வழிபாடுகளை செய்வதற்கான இடமாக மசூதிகளை மட்டும் கொள்வது சரியல்ல என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்ததை நினைவுகூரவேண்டும்.

எனவே இந்த இடம் ராமர் பிறந்த இடமாக இருக்கும்போது, இந்துக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப, அங்கு மீண்டும் ஆலயத்தை எழுப்புவதற்கு அனைத்து சமூகத்தினரும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

படத்தின் காப்புரிமை HINDUSTAN TIMES

சிவசேனாவின் சவால்

சிவசேனா எங்கள் கூட்டாளி. கருத்து வேறுபாடு என்பது ஜனநாயக நாட்டில் இயல்பானதே. ஆனால், எந்தவொரு நிலையிலும், பாஜக - சிவசேனா கூட்டணி உடையாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

சையத் ஷகாபுதீனுக்கு எழுதிய கடிதத்தில் முஸ்லிம்களுக்கு அநியாயம் நடக்கும்போது அவர்களுடன் இருப்பதாக கூறியிருந்தீர்கள். ஆனால், இப்போது அவர் ராமர் ஆலயம் தொடர்பாக ஆதரவு தருகிறாரே அது ஏன்?

ஹாஷிம்புரா படுகொலை விவகாரத்தில் நானே வெற்றி பெற்றேன். அந்த விவகாரத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அநியாயம் எங்கு நடைபெற்றாலும், அதை எதிர்த்து போராடுவேன். ஆனால், இந்துக்களுக்கும் பல அநியாயங்கள் நடைபெற்றுள்ளது. அதையும் சரி செய்ய வேண்டும்.

கர்தார்பூர் வழித்தடத்திற்கு எதிர்ப்பு

கர்தார்பூர் வழித்தடத்திற்காக ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் இந்தியாவின் தரப்பில் இருந்து அமைச்சர்கள் கலந்து கொள்வது தேவையற்றது என்றே நான் நினைக்கிறேன். இந்த வழித்தடத்தை திறப்பது தவறல்ல. ஆனால் அதை பெரிய அளவில் கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை.

மும்பை தாக்குதலுக்கு பிறகு நடைபெற்ற கொண்டாட்டங்களில் பாகிஸ்தான் அரசின் பங்கும் கலந்திருக்கிறது. பாகிஸ்தானின் அழைப்பை ஏற்று இங்கிருந்து அமைச்சர்கள் செல்வது, அந்த நாட்டுக்கு மரியாதை கொடுப்பதை குறிக்கிறது. இன்றைய நிலையில் அதற்கான அவசியம் இல்லை.

அமைச்சரவையில் இடம்பெறவில்லை என்று வருந்துகிறீர்களா?

அமைச்சரவையில் இடம் பெறாதது குறித்து நான் ஏன் கவலைப்படவேண்டும்? அதிலிருந்து என்னை விலக்கி வைத்தவர்கள்தான் அதற்காக வருத்தப்பட வேண்டும்.

பிராமணர்கள் யார் என்ற கேள்விக்கு, யாரும் பிறப்பால் பிரமாணராவது இல்லை, அறிவு மற்றும் தியாகம் செய்பவர்களே பிராமணர் என்று சொல்கிறார் சுப்ரமணியம் சுவாமி.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா

ராகேஷ் அஸ்தானா விவகாரம்

ஊழல் வழக்கு தொடர்பாக தற்போது கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டிருக்கும் சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் ஆஸ்தானாவை 2016ஆம் ஆண்டில் சுப்பிரமணியன் சுவாமி பாராட்டியிருந்தார். ஆனால், அவர் ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக அண்மையில் சுவாமி விமர்சித்தார். ஏன் இந்த முரண்பாடு?

2014, டிசம்பர் ஆறாம் தேதி ப.சிதம்பரம், சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரிக்கப்பட்டார். பிறகு விசாரணை அதிகாரியாக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தில் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்யவில்லை, எந்தவொரு நிலைமை அறிக்கையையும் தரவில்லை என்று சொன்னேன். செப்டம்பர் மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதாக அவர் உறுதி கூறியிருந்தார்.

ஆனால், இதுவரை அவர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. மேலும், அஸ்தானாவுக்கு சிதம்பரத்துடன் ரகசிய உறவு ஏற்பட்டிருப்பதாக தெரியவந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

ராபர்ட் வாத்ராவிவகாரத்தில் மெளனம் காப்பது ஏன்?

ஏனென்றால் சோனியா காந்தியே அவரை வெளியேற்ற வேண்டும் என்று நினைக்கிறார். வாத்ராவிடம் இருந்து பிரியங்கா காந்தியை விடுவிப்பதற்காக ராபர்ட் வாத்ராவை வெளியேற்ற வேண்டும் என்று சோனியா நினைப்பது அவர்களது உள் விவகாரம்.

ரஃபேல் விவகாரத்தை எதிர்கட்சிகள் முன்னெடுத்தால், அவர்களுக்கு உதவமாட்டேன் என்று கூறுவது ஏன்?

இந்த விவகாரத்தை கையில் எடுத்தவர்கள் ஏன் அதற்காக முயற்சி செய்யவில்லை? நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை விவகாரத்தில் நான் எடுத்த முயற்சிகளைப்போல் அவர்கள் ஏன் முயலவில்லை? என்று பதில் கேள்வி எழுப்புகிறார்.

அரசின் பொருளாதாரக் கொள்கை

அரசிடம் எந்தவிதமான பொருளாதார கொள்கையும் இல்லை. அதிகாரிகள் சொல்வதை அப்படியே கேட்டு நடக்கிறார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி. அவரை அதிகாரிகள் தவறாக வழிநடத்துகிறார்கள்.

ஜி.எஸ்.டி தொடர்பாக சிதம்பரம் பின்பற்றிய கொள்கையையே அருண் ஜேட்லி தொடர்கிறார்.

உயர் பணமதிப்பு கொண்ட பணத்தை விலக்கிக் கொண்டது ஒரு சிறப்பான நடவடிக்கை. ஆனால் அதற்கு தேவையான முன்னேற்பாடுகளை சரிவர செய்யாதது அருண் ஜெட்லியின் தவறு.

படத்தின் காப்புரிமை Getty Images

தேர்தலில் முன்வைக்கக்கூடிய பிரச்சனை என்னவாக இருக்கும்?

முன்னேற்றம் என்பது எங்கள் நோக்கமாக இருந்ததில்லை. வாஜ்பேயும், நரசிம்மராவும் அதை முன்னெடுத்தார்கள், அவர்கள் தோல்வியடைந்தார்கள். 'அனைவருடனும் இணைந்து, அனைவருக்குக்குமான வளர்ச்சி' என்று சொல்வது வெறும் வாய்ப்பேச்சுக்கு தான் சரியானதாக இருக்கும்.

ஆனால், உணர்வு மற்றும் நம்பிக்கையை ஊக்குவிக்கும் உத்வேகம் கொடுப்பது இந்துத்துவா என்ற முழக்கமே. சாதி மதங்களை கடந்து மக்களை வாக்களிக்க தயார் செய்தால் தான் எங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

எதிர்வரும் தேர்தலிலும் இந்துத்வா என்ற முழக்கமே முன்னெடுக்கப்படும். கடந்த தேர்தலில் 21 சதவிகிதமாக இருந்த எங்களது வாக்கு வங்கி, தற்போது 31 சதவிகிதமாக உயர்ந்துவிட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

பாஜகவுக்கு சவால் காங்கிரஸா அல்லது பிராந்திய கட்சிகளா?

காங்கிரஸ் கட்சிக்கு தற்போது செல்வாக்கே இல்லை என்று சொல்லலாம். ஒவ்வொரு முறை ராகுல் காந்தி பேசும் போதும், அது எங்களுக்கு ஆதராக மாறி, எங்கள் வாக்கு ஒரு சதவீதம்வரை அதிகரிக்கிறது. பிராந்தியக் கட்சிகள் சவால் விடுக்கும் நிலையில் இல்லை. அதாவது இந்திரா காந்திக்கு எதிராக பெரிய பிரபலங்கள் முன் நின்றார்கள், இப்போது அப்படி யாரும் இல்லை.

இருந்தாலும், அவர்கள் தங்களுக்குள்ளே சண்டையிடுவார்கள், கூட்டு ஒத்துவராது என்று மக்கள் முடிவு செய்தார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாங்கள் பல விஷயங்களை செய்திருக்கிறோம், சிலருக்கு அதிருப்தியும் இருக்கிறது. ஆனால் இதற்கு முன்னர் யாரும் செய்யாத அளவுக்கு நாங்கள் பணியாற்றியிருக்கிறோம். சோனியா காந்தியை இக்கட்டில் ஆழ்த்தினோம். நீதிமன்றத்தில் பிணை வாங்க வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டது.

இதை நான்தான் செய்தேன், பாஜகவின் பங்கு இல்லை என்றாலும் நான் பாஜகவில் தான் இருக்கிறேன். நான் செய்தது எல்லாம் பாரதிய ஜனதா கட்சிக்காகவே செய்தேன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்