‘கஜ’ புயலிலும் வீழாத பனை மரங்கள்

  • 27 நவம்பர் 2018
கஜ புயலை எதிர்கொண்ட பனை மரங்கள் படத்தின் காப்புரிமை Getty Images

கஜ புயலின் தாக்கத்தில் பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் விழுந்து கிடக்க, பாதிக்கப்பட்ட இடங்களில் உறுதியாக நின்ற பனை மரங்கள் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தின.

மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டத்தில் பனை மரங்கள் வரிசையாக நிற்கும் விளமல் கிராமத்தின் படம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

1000 வகையான பொருட்களை தரும் பனை

இயற்கை பேரிடரைத் தாங்கி உறுதியாக நிற்கும் பனை மரங்கள் குறித்த உரையாடல்கள் தொடங்கியிருக்கும் இந்தச் சூழலில் பனை மரங்களை பாதுகாத்துவரும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் பேசினோம்.

பேரிடர்களின் சீற்றத்தை குறைக்க பனை மரங்கள் எவ்வாறு உதவும் என விளக்கிய தாவரவியல் ஆராய்ச்சியாளர் நரசிம்மன், ''பனை மரம் இருக்கும் இடத்தில் நிலம் வளமாக, பிடிப்புடன் உறுதியாக இருக்கும், தூய்மையான நிலத்தடி நீர் இருக்கும். புயல் காலத்தில் காற்றின் சீற்றத்தை இந்த மரம் குறைத்துவிடும், இதன் காரணமாக பாதிப்பை கட்டுப்படுத்தலாம். பனை மரத்தின் வேர் ஆழமானதாக இருக்கும். மரத்தின் தண்டு பகுதி திடமானதாகவும் அதே சமயம் வளைந்து கொடுக்கும் தன்மையோடும் இருக்கின்றது. இதனால் பலமான காற்றின் தாக்குதலுக்கு தென்னை மரங்கள் உடந்து போனது போல இல்லாமல், பனை உறுதியாக நிற்கிறது,'' என்றார்.

இலங்கையில் 1970களில் புயல் தாக்குதலுக்கு தென்னை மரங்கள் அழிந்துவிட்ட சமயத்தில், பணை மரங்கள் மட்டுமே பேரிடரை தாங்கி நின்றன என்று நினைவுகூறும் நரசிம்மன்,''புயலை எதிர்கொண்ட பனை மரங்களை சிறப்பை உணர்ந்துகொண்ட இலங்கை அரசாங்கம், பனை பயிரிடுவதை பெருமளவு ஊக்குவித்தது.வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளில் பனை பொருட்களின் பயன்பாடு மிகவும் அதிகம். தொல்காலத்தில் பனையின் பயன்பாடு இருந்ததற்கான சான்றுகள் பல சங்கப்பாடல்களில் உள்ளன. பனையால் செய்யப்படும் கருப்பட்டி, விசிறி, பாய், கூடைகள், மருந்துபொருட்கள், கிழங்கு, பழம் என சுமார் 1,000 வகையில் பணையின் பொருட்களை பயன்படுத்தலாம். பனை வேலைசெய்யப்பவர்களுக்கு ஊக்கம் தரப்பட்டால், அது வேலைவாய்ப்பை தருவதோடு நம் கிராமங்களின் பாதுகாப்பையும் அதிகரிக்கும்,'' என்கிறார்.

படத்தின் காப்புரிமை PANAI SATHISH

தமிழகத்தின் மாநில மரம் என்ற பெயரை பெற்றிருந்தாலும் பனையின் பயனை அறியாமல், தமிழகத்தில் பல லட்சம் மரங்கள் செங்கல் சூளை போன்ற தொழில்களுக்காக வெட்டப்பட்டன என்கிறார் நரசிம்மன்.

''நெய்தல் நிலத்திற்கு சொந்தமான மரம் பனை ஆகும். இன்று பல கடற்கரைகளில் பனை மரங்களை பாரக்கமுடிவதில்லை. கடற்கரைகளில் தனியார் நிறுவனங்கள் ரிசார்ட்கள் அமைக்க அளிக்கப்படும் முன்னுரிமை பனை மரங்களை வளர்த்து இயற்கை அரணை உருவாக்க தரப்படுவதில்லை. கிராமங்களில் பரவலாக காணப்பட்ட பனை மரங்களை இழந்துநிற்பதால்தான் இயற்கை பேரிடர்களின் தாக்கத்தை குறைக்கமுடியவில்லை,'' என்கிறார் நரசிம்மன்.

முப்பது வகையான பனை மரங்கள்

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது அதில் கலந்துகொண்ட மென்பொருள் பொறியியலாளர் சதீஷ் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சம் விதைகளை நட்டுள்ளதாக கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை PANAI SATHISH
Image caption பனை சதீஷ்

''பனை மரத்தின் நன்மைகளை உணர்ந்தபின், என் பெயரை பனை சதீஷ் என்று பதிவிட தொடங்கிவிட்டேன். பனை மரம் வளர்வதற்கு பல ஆண்டுகள் ஆகும். ஆனால் சுமார் நூறு ஆண்டுகள் வரை பயன் தரும். மண்ணரிப்பை தடுக்கும் என்பதை புரிந்துகொண்ட பிறகு, நண்பர்கள் குழுவோடு சேர்ந்து கடற்கரை ஓரங்களில் விதைக்க தொடங்கினேன். பல இடங்களில் விதைப்பின்போது சந்தித்த மீனவர்களிடம் பேசியபோது, தங்களது முன்னோர்கள் வாழ்ந்த காலங்களில் கரை ஓரங்களில் பனை மரங்கள் இருந்ததை தெரிவித்தனர். நுங்கு மரங்கள் அதிகம் இருந்த கிராமமாக இருந்த நுங்கம்பாக்கத்தில், இன்று அதற்கான அடையாளம் துளியும் இல்லாமல் சென்னை நகரம் இயங்கிக்கொண்டிருக்கிறது. இதுபோல பல இடங்களில் இருந்து பனை மரங்கள் அழிந்துவிட்டன,'' என்கிறார் சதீஷ்.

மற்ற விதைகளைப் போல பனை விதை பறவைகளின் எச்சத்தால் விதைக்கப்படுவதில்லை என்பதால், மனிதர்கள் விதைக்கவேண்டிய அவசியம் உள்ளது என்கிறார் சதீஷ்.

படத்தின் காப்புரிமை PANAI SATHISH

30க்கும் மேற்பட்ட வகையான பனை மரங்கள் முந்தைய காலங்களில் இருந்ததாக கூறும் அவர், ''தமிழகத்தில் சீனி பனை, தாளி பனை மற்றும் கூந்த பனை என்ற மூன்று வகை பனைகள் மட்டுமே பெருமளவு காணப்படுகின்றன. மற்ற மரங்களைப் பற்றிய தரவுகள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. பனை தொடர்பான செய்திகளை சேகரித்து, பனை பொருட்களின் பயன்பாடுகளை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். பனை மரங்கள் ஆபத்து காலத்தில் எவ்வாறு உதவும் என்பதை கஜ புயல் உணர்த்தியுள்ளது. பனை விதைப்புக்கான காலம் தொடங்கிவிட்டது என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது,'' என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :