மேகதாது அணை: "தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம்"

காவிரி

காவிரி நதியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான ஆய்வை நடத்த கர்நாடக அரசாங்கத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளனர்.

மேகதாது அணை கட்டுவதால் தமிழகத்திற்கு அளிக்கப்படும் நதிநீரின் அளவு பாதிக்கப்படாது என்று கூறியுள்ள அமைச்சர் சிவகுமார், அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசாங்கத்திடம் பேசவும் தயாராக உள்ளதாக கர்நாடகாவில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில், கர்நாடகாவுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள ஒப்புதலை திரும்பப்பெறவேண்டும் என்று கோரி தமிழகத்தில் உள்ள விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு அளித்துள்ளதாக கூறப்படும் ஒப்புதல், நியாயமான முறையில் கொடுக்கப்படவில்லை என்று கூறுகிறார் மன்னார்குடி ரங்கநாதன்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக 1984ல் ரங்கநாதன் தொடுத்த வழக்கு கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. அதன் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

''தமிழ்நாடு அல்லது கர்நாடகா என எந்த மாநிலம் அணை காட்டுவதாக இருந்தாலும், அதற்கு காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் தேவை. அந்த ஆணையத்தில் தென்மாநிலங்களின் உறுப்பினர்கள் உள்ளனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு நடத்தி உச்சநீதிமன்றத்தில் நாம் பெற்ற தீர்ப்பால் காவிரி நதிநீர் முறையான வகையில் பங்கிட்டுதர வேண்டும் என்ற நடைமுறை வந்துள்ளது. மேலும் காவிரி நதி மீதான எந்தவிதமான கட்டுமானம் செய்வதாக இருந்தாலும் நான்கு மாநிலங்களின் ஒப்புதலும் வேண்டும். தற்போது மத்திய அரசு கொடுத்துள்ளதாக கூறப்படும் ஒப்புதல் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது,'' என்கிறார் ரங்கநாதன்.

மேலும் கஜ புயல் நிவாரணப்பணிகள் மற்றும் 2019ல் வரவுள்ள தேர்தல் போன்ற விவகாரங்களில் மூழ்கிவிடாமல், தமிழக அரசாங்கம் உடனடியாக மேகதாது விவகாரத்தில் தலையிடவேண்டும் என்கிறார் அவர். ''இந்த அறிவிப்புக்கு எதிர்வினை ஆற்றாமல் விட்டால், மீண்டும் நீதிமன்றத்திற்குச் சென்று வழக்கு போட்டு பல ஆண்டுகளுக்கு காத்திருக்கும் அவலம் நேரலாம்,'' என்கிறார் ரங்கநாதன்.

கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒப்புதல் என்பது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம் என்றுதான் புரிந்துகொள்ளவேண்டும் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் நிறுவனரான விவசாயி அய்யாக்கண்ணு கூறுகிறார்.

''மேகதாதுவில் அணை கட்டினால், அது தமிழகத்தை பாலைவனமாக மாற்றிவிடும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைத்து மாநிலங்களும் பின்பற்றவேண்டும். அதேபோல மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் இந்த தீர்ப்பை பின்பற்றவேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தமிழத்தை வஞ்சிக்கிறது என்று தோன்றுகிறது. பிரதமர் மோதி தனது தேர்தல் பிரசாரங்களில் பலமுறை நதிநீர் இணைப்பைப் பற்றி பேசியுள்ளார்'' என்று அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

''அதேபோல, விவசாயிகளின் வருமானத்தை பெருக்க வழிவகை செய்வேன் என்றும் உறுதிகொடுத்துள்ளார். ஆனால் மேகதாதது அணையை கட்டினால், தமிழகம் தண்ணீர் இல்லாமல் நிரந்தரமாக வறண்டபூமியாக மாறிவிடும் என்பதை தமிழக அரசு அவருக்கு புரியவைக்கவேண்டும்,'' அவர் மேலும் கூறினார்.

அரசியல் அமைப்புக்கு எதிராக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் செயல்படுவதாக கூறும் அய்யாக்கண்ணு, ''தமிழக அரசு உடனடியாக மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும். இந்த திட்டம் குறித்து காவிரி நதிநீர் ஆணையம் மட்டுமே முடிவு செய்யவேண்டும்,'' என்று கூறுகிறார்.

2017 பிப்ரவரியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்ட மத்திய அரசு ஒப்புதல் தரக்கூடாது என்றும் அந்த ஒப்புதல் காவிரி மேலாண்மை வாரியத்திற்கு எதிரானதாக இருக்கும் என்று கூறி கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்